நள்ளிரவில் சவால் விட்டவர் காலையில் பணிந்தார் அதிமுகவில் இருந்து ஒதுங்கினார் தினகரன்

* ஆதரவு எம்எல்ஏக்கள் எடப்பாடி பக்கம் வந்த மர்மம்  * இரு அணிகளின் தலைவர்களும் திடீர் குழப்பம்

சென்னை: அமைச்சர்கள் மிரட்டலைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சவால் விடும் வகையில் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டுவதாக அறிவித்த  தினகரன், திடீரென்று நேற்று காலையில் பணிந்து, கட்சியில் இருந்து ஒதுங்கி விட்டேன் என்று பகிரங்கமாக அறிவித்தார். அதோடு நிற்காமல், தனது  ஆதரவு எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்களை எடப்பாடிக்கு ஆதரவாக இருக்கும்படி கூறியுள்ளதுதான், இரு அணி தலைவர்களுக்கும் குழப்பத்தை  ஏற்படுத்தியுள்ளது.ஜெயலலிதா மறைவு மற்றும் சசிகலா பெங்களூர் சிறைக்கு சென்ற பிறகு, துணை பொதுச்செயலாளராக இருந்த டி.டி.வி.தினகரன் கட்டுப்பாட்டில் தான்  அதிமுக இருந்தது. அனைத்து விஷயங்களிலும் அவரது தலையீடு இருந்தது. முதல்வர் மற்றும் அமைச்சர்கள் டி.டி.வி.தினகரனை சந்தித்து ஆலோசனை  நடத்தி வந்தனர். இந்தநிலையில் தான், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது வீட்டில்  கைப்பற்றிய தஸ்தாவேஜுகள் அடிப்படையில் முதல்வர் உள்ளிட்ட சில அமைச்சர்களும் சிக்குவார்கள் என்ற தகவல் வெளியானது. அவர்களிடமும்  விசாரணை நடைபெறலாம் என்ற பேச்சு அடிபட்டு வந்த நிலையில்தான், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ங்கோட்டையன், ஜெயக்குமார்,  தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், செல்லூர் ராஜு உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் முதல்வர் எடப்பாடியை அவ்வப்போது ரகசியமாக சந்தித்து பேசி  வந்தனர்.

இந்த ஆலோசனையின்போது, அதிமுக கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்க வேண்டும் என்றால் டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது  குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று முடிவு எடுத்தனர். தினகரனை சந்தித்து நேரடியாகவே இதை வலியுறுத்தினர். ஆனாலும்,  டி.டி.வி.தினகரன் கட்சியை விட்டு ஒதுங்க மறுத்து விட்டார். இந்நிலையில்தான், அமைச்சர்கள் ஒன்று கூடி நேற்று முன்தினம், “டி.டி.வி.தினகரன்  மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியில் இருந்து விலக்கி விட்டோம்” என்று அதிரடியாக அறிவித்தனர்.அதைத் தொடர்ந்து தினகரனை 9 எம்எல்ஏக்கள் நேற்று முன்தினம் இரவு சந்தித்துப் பேசினர். பலர் தொலைபேசியிலும் பேசினர். இதனால் நேற்று  மாலை 3 மணிக்கு கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று தினகரன்  அறிவித்தார். தற்போது அவரைச் சந்தித்த 9 எம்எல்ஏக்கள் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றாலே எடப்பாடி அரசு கவிழ்ந்து விடும். அல்லது ஓபிஎஸ்  அணியினர் ஆதரவு கொடுத்தால்தான் ஆட்சி நீடிக்கும் நிலை உருவானது.

தினகரனை ஒதுக்கி வைப்பதாக கூறிய அமைச்சர்களின் அறிவிப்பும், தினகரனின் ஆலோசனைக் கூட்ட அறிவிப்பும் ஓபிஎஸ் அணியினருக்கு மிகவும்  மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தாங்கள் எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றே அவர்கள் கருதினர். இனி, எந்த தடையும் இல்லாமல் இரண்டு  அணிகளும் இணைவது குறித்து பேசலாம். அப்படி பேசும்போது தங்களுக்கு முதல்வர் பதவி, பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட முக்கிய பதவிகளை  தர வேண்டும் என்று நிபந்தனை விதிக்கலாம் என்று உற்சாகம் அடைந்தனர். ஓபிஎஸ் அணியில் உள்ள 11 எம்எல்ஏக்களில் பலருக்கு மந்திரி பதவி கூட  கிடைக்கலாம் என்ற கனவில் மிதந்தனர்.ஆனால், யாரும் சற்றும் எதிர்பார்க்காத வகையில், ஏன் முதல்வர் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் கூட எதிர்பார்க்காத வகையில் டி.டி.வி.தினகரன்  நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில், “நேற்று முன்தினம் அமைச்சர்கள் பேட்டியை டிவியில்தான் பார்த்தேன். அந்த நிமிடமே நான் கட்சியில் இருந்து ஒதுங்கி விட்டேன். அமைச்சர்கள் நேரில் வந்து என்னிடம் இதை தெரிவித்திருந்தால்  நானே ஒதுங்கி இருப்பேன். இனி கட்சியின் எந்த செயல்பாட்டிலும் என் தலையீடு இருக்காது. முதல்வர் எடப்பாடி என்ன முடிவு எடுத்தாலும்,  கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றும் வகையில் இருக்க வேண்டும்” என்று கூறினார். மேலும், தனக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்கள் மற்றும்  மாவட்ட செயலாளர்களையும் எடப்பாடி அரசுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். அவர்களும் திடீரென்று எடப்பாடி அரசுக்கு ஆதரவாக  பேட்டியளித்தனர்.

தினகரனின் இந்த பேட்டியால், முதல்வர் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். டி.டி.வி.தினகரனை கட்சியில் இருந்து விலக்கி  வைத்தால், அவர் பெரிய அளவில் தங்களுக்கு இடையூறு செய்வார். அதனால் நமது ஆட்சி கூட கவிழும் ஆபத்து ஏற்படலாம் என்று நினைத்தோம்.  ஆனால் எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஒதுங்கி விட்டார். எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட ரத்து செய்து விட்டார். ஆரம்பத்தில்  ஆதரவு தெரிவித்த 122 எம்எல்ஏக்கள் ஆதரவு தற்போதும் அப்படியே உள்ளது. இனி, ஓபிஎஸ் அணியினருடன் பேசும்போதுகூட, அவர்களது அனைத்து  நிபந்தனையும் நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலைக்கு எடப்பாடி அணியினர் வந்துள்ளனர்.

இதனால், தான் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி அணியினர் சார்பில் பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்கவில்லை. குழுவின் பேச்சுவார்த்தையும்  தொடங்கப்படவில்லை. இந்த பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என்றும் அறிவிக்கப்படாததால், ஓபிஎஸ் அணியினர் வருத்தத்தில் உள்ளனர்.  தற்போதுள்ள சூழ்நிலையில், எடப்பாடி தலைமையிலான அரசு மற்றும் கட்சியை வழி நடத்த ஒரு குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழுவில்  அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் இடம் பெறுவார்கள். அந்த  குழுவினர் தான் ஓபிஎஸ் அணியுடன் இணைப்பு குறித்தும் பேசும் என்று கூறப்படுகிறது.

டி.டி.வி.தினகரன் கட்சியை விட்டு ஒதுக்கி  வைக்கப்பட்டுள்ளதால், ஓபிஎஸ் அணியினரும் பெரிய அளவில் எந்த நிபந்தனைகள் விதிக்காமல், இரண்டு அணிகளையும் ஒன்றாக இணைந்து, அதிமுக  கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனாலும், நள்ளிரவில் சவால் விட்டு எம்எல்ஏக்கள்  கூட்டத்தை கூட்டுவதாக அறிவித்தவர், நேற்று காலையில் திடீரென்று கட்சியில் இருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்திருப்பது எடப்பாடி பழனிச்சாமி  மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like