ஆடிப்பிறப்பின் மகிமை

உலகத்தில் வாழும் ஜீவராசிகள் அனைத்தும் பசி போக்கவும், உடல் வளர்ச்சிக்காகவும் உட்கொள்ளப்படும் உணவானது நாட்டுக்கு நாடு பல வித்தியாசமான வகையையும், சுவையையும் , தயாரிப்பு முறைகளையும் கொண்டிருக்கிறது.

சில குறிப்பிட்ட உணவு வகைகள் மானுடங்களின் அடையாளங்களில் ஒன்றாகவே ஒன்றிப்போயிருக்கின்றன.உணவின் தன்மையும், வகையும் மனிதர்களின் வித்தியாசப்படுத்தலில் ஒரு அங்கமாக திகழ்கின்றது என்று சொன்னால் மிகையாகாது.

ஈழத் தமிழ் மக்களிடையே ஒரு அடையாளமாக அல்லது பன்னெடுங்காலமாக பாவனையிலிருப்பவையாக ஒரு சில உணவுகள் இருக்கின்றன. இந்த உணவு வகைகள் நமது சம்பிரதாயங்களுடனோ அல்லது சமய வழிபாட்டுடனோ அல்லது கலாச்சாரத்துடனோ சம்மந்தப்பட்டவையாக நாம் தொடர்ந்து சந்ததி சந்ததியாக கடத்திவரும் விசயங்களில் ஒன்றாக இருக்கின்றன.

பச்சை இறைச்சியை வேட்டையாடி தின்ற அன்றைய மானுடத்தின் உணவு உட்கொள்ளலிருந்து இன்றைய சமைத்தல் முறை மூலம் உட்கொள்ளும் நவீன மாற்றங்கள் பல கண்ட பின்னாலும் நாம் எமது பாட்டி, பூட்டி காலத்தில் சமைக்கப்பட்ட அதே உணவுகளுடன் தான் எங்கள் சந்ததியினருடன் பயணிக்கிறோம். எத்தனையோ புது புது இடங்களுக்கு புலம் பெயர்ந்தாலும் அந்த நாட்டின் பருவ கால , சூழல் நிபந்தனைகளுக்குட்பட்டு அந்தந்த நாடுகளில் கிடைக்கும் உணவுகளுடன் வாழ்கையை செலுத்த வேண்டிய கட்டாய்த்திலிருப்பினும் கூட, நமது சொந்த ஊரின் சமையல் முறையை எப்பாடுபட்டாவது இருக்கும் ஊரின் சூழலுக்குள் நமக்கு நாமே கொண்டு வந்து விடுகிறோம். எத்தனையோ வகை வகையான புதிய புதிய சமையல் வகைகளை தெரிந்து கொண்டாலும் நாம் பிறந்து வளர்ந்த ஊரில் நாம் சாப்பிட்டு வாழ்ந்த உணவு வகைகளையே பிராதானப்படுத்துகிறோம்.

அப்படி எம்முடன் சந்ததி சந்ததியாக தொடர்ந்து வரும் பல வகையான உணவு வகைகளில் “கூழ்” என்பது மிக பிரதானமான உணவு எனலாம்.

கூழ்களில் பல வகையான கூழ் வகைகள் இருந்தாலும் மிகப் பிரதானமாக இரண்டு விதமான கூழ் ஈழத்தில் முக்கிய இடத்தை கொண்டிருக்கின்றன.

1 ) ஆடி மாதப் பிறப்பில் கோவில்களிலும், வீடுகளிலும் தயாரிக்கப்படும் ஆடிக் கூழ் .
2) ஒடியல் கூழ்.

ஆடிக் கூழ்
***************
ஆடி மாசத்தில் எந்த நல்லகாரியமும் நம்மூர்களில் நடப்பதில்லை. இறந்தவர்களுக்கான ஆன்ம சாந்தி கிரியைகளை ஆடி அமாவாசையில் கீரிமலை போன்ற புனித நீர் நிலைகளில் உறவினர்கள் போய் செய்வது வழக்கம்.

தை மாசப் பிறப்பை தைப் பொங்கலாகவும், சித்திரை மாசப் பிறப்பை சித்திரை புத்தாண்டாகவும் கொண்டாடுவது போல் ஆடி மாதப் பிறப்பை ஆடிப்பிறப்பாக கொண்டாடுகிறோம் என்பது மட்டும் தெரியும். ஆனால் அதற்கான காரணமோ பாரம்பரிய கதைகள் எதுவுமோ எனக்கு தெரியாது. தெரிந்தவர்கள் சொன்னால் நல்லது.

ஆடி மாதத்தில் பருவ விதைப்புக்கான முதல் மழை முன்பு கட்டாயம் பெய்யுமாம். அதனைக் கொண்டாடவே ஆடி முதல் நாள் கூழ் காய்ச்சிக் கொண்டாடுவர்

ஆடிக் கூழ் இனிப்பானது. அம்மன் கோவில்களில் ஆடிமாதப் பிறப்பில் பெரிய பெரிய கிடாரங்களில் சித்திரை மாதங்களில் சித்திரைக் கஞ்சி காய்ச்சி ஊற்றுவது போல ஆடிப் பிறப்பன்று இந்த ஆடிக் கூழ் காய்ச்சி கொடுப்பார்கள். ஊரில் இருப்பவர்கள் எல்லாரும் வந்து ஒன்று கூடி கூழ் வாங்கிக் குடிப்பார்கள்.

வீடுகளிலும் இந்த தினங்களில் ஆடிக் கூழுடன், கொழுக்கட்டையும் அவித்து படைத்து உண்பது நடைமுறையில் இருக்கிறது.

ஆடி மாதம் சைவ சமயத்தாருக்கு பல வகையான விரத நாட்களையும் , உருத்துகளுக்குரிய நாளான ஆடி அமாவாசையும் கொண்ட மாதம் என்பதால் பல தமிழர்களின் வீடுகளில் ஆடி மாதத்திலிருந்து மச்ச சாப்பாடுகளை தவிர்க்க தொடங்கிவிடுவார்கள்.

அந்த மாதத்திலேயே அம்மன் கோவில்களில் மட்டுமல்ல ஈழத்தின் பல ஆலயங்களின் திருவிழாக்களும் தொடங்குகின்றன. அதுமட்டுமல்ல இந்தக் கூழ் அந்த கோடைக்காலத்தின் சீதோஷ்ண நிலைக்கு மிகவும் அருமையானதாக பொருந்தவும் செய்கிறது. அதனால் தானோ என்னமோ கோவில்களில் ஆடி மாதத்தில் இந்த கூழ் காய்ச்சி வழங்குகிறார்களோ என்னமோ…

ஆடிப்பிறப்பின் சிறப்பினை கூற வந்த ஈழத்தின் சிறப்புக்குரிய கவிஞர் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்கள் பாடிய பாடல் பிரபலமானது.

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற்
பச்சையரிசி இடித்துத் தெள்ளி
வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து
தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச்
சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி
வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டுமா வுருண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்கவா யூறிடுமே
குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே
குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து
அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே
வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல
மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
********

ஆடிக் கூழ் செய்முறை :

தேவையான பொருட்கள்:

அரிசிமா – 1/2 கப்
பயறு – 1/4 கப்
தேங்காய்ப்பால் – 2 கப்
பனங்கட்டி – 3/4 கப்
தேங்காய்ச்சொட்டு – 3 மேசைக்கரண்டி
உப்பு
தண்ணீர்
கொஞ்சூண்டு மிளகுதூள்
செய்முறை:

பயறு, அரிசிமாவை தனித்தனியாக வெறும் சட்டியில் போட்டு வறுக்கவும்.
2 கப் தணீர கொதிக்கவைத்து அதனுள் வறுத்த பயறை போட்டு அவிய விடவும்.
பயறு ஓரளவு வெந்தவுடன் அரிசி மாவை தேங்காய்ப்பாலில் கரைத்து அதனுள் விடவும்.
மா கட்டிபடாமல் இருக்குமாறு அடிக்கடி கிளறவும்.
மா வெந்ததும் (கூழ் தடிப்பாகும்) அதனுள் பனங்கட்டி , உப்பு, தேங்காய்ச்சொட்டு / கொஞ்சூண்டு மிளகுதூள் சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான ஆடிக்கூழ் தயார். சுடச்சுட அருந்தவும்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like