ரயில் மோதி ஒருவர் பலி

பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பயணித்த மோட்டர் சைக்கிள் ரயிலுடன் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

வவுனியா, கொக்குவெளி பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பயணித்த மோட்டர் சைக்கிள் ரயிலுடன் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே  பலியாகியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி ரயில் இன்று மதியம் 12.30 மணியளவில் வவுனியா, கொக்குவெளி பகுதியில் சென்று கொன்டிருந்த போது, பாதுகாப்பற்ற ரயில் கடவையினை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்திற்குள்ளானது.

இவ்விபத்தில் சிக்கிய மோட்டர் சைக்கிள் ஒன்றரைக் கிலோமீற்றர் தூரத்திற்கு இழுத்துச்செல்லப்பட்டதுடன், அதன் பாகங்கள் புகையிரதப் பாதையில் சிதறிய நிலையில் அங்கும் இங்குமாக காணப்பட்டது.

குறித்த மோட்டர் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகியுள்ளதுடன், அவரின் சடலமும் ரயிலால் ஒரு கிலோமீற்றர் துராத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மோட்டர் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர் விபத்து ஏற்பட இருந்த நிலையில் மோட்டர் சைக்கிளில் இருந்து குதித்தமையால் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.

குறித்த விபத்தில் வவுனியா, பண்டாரிக்குளத்தைச் சேர்ந்த ந.ஜீவன் (வயது 43) என்பவரே மரணமடைந்துள்ளார். இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like