விடுதலைப் புலிகளிடம் இருந்து கருணாவைப் பிரித்தது யார்?

விடுதலைப்புலிகளிடம் இருந்து கருணாவை பிரித்த அலி சாஹிர் மௌலானாவே இலங்கையின் அமைதிக்கு காரணமானவர் என அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இன்றைய அமைதியான, ஜனநாயக சூழல் ஏற்படுவதற்கு காரணமாக இருந்தவர் பிரதி அமைச்சர் அலி சாஹிர் மௌலானா.

விடுதலைப்புலிகளின் கிழக்கு பிரிவிற்கு காரணமாக அமைந்து, அவர்கள் வலிமையிழந்து இராணுவரீதியில் தோல்வியடையவும் காரணமாக இருந்தவர் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் நேற்று(21) நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்- “யுத்த கால சூழ்நிலையை மாற்றி பேச்சுவார்த்தை மூலமாக தீர்வுகளை உருவாக்குவதற்காக யுத்த நிறுத்தத்தை நடைமுறைப்படுத்திய காலகட்டத்திலே சமாதானத்தையும், தீர்வையும் நோக்கிய முயற்சிகளில் மிகவும் பாரிய பங்களிப்பை அந்த கால கட்டத்தில் வழங்கிய தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா அவர்கள் விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண அரசியல் தலைவர்களுடனும், போராட்ட வீரர்களுடனும் நல்லிணக்கத்தினையும், புரிந்துணர்வினையும் ஏற்படுத்தி சகஜ நிலைமையை 2002 /2003 ம் ஆண்டுகளிலேயே ஏற்படுத்தியிருந்தார்.

விடுதலைப்புலிகளுக்குள்ளேயே வடக்கும், கிழக்கும் என்ற பிரதேச ரீதியான பிரிவினை ஏற்பட்டு அவர்களுக்குள் ஏற்படவிருந்த சகோதர மோதலை தடுத்து இழப்புக்களை தவிர்க்கும் பொருட்டு கிழக்கு மாகாண விடுதலைப்புலிகளின் தலைமையை நிதானப்படுத்தி ஜனநாயக நீரோட்டத்திற்கு கொண்டுவந்த பெருமையையும் இந்த பிரதி அமைச்சர் அலி சாகிர் மௌலானாவையே சாரும்.

இவ்வாறான சூழ்நிலைகளால் விடுதலைப்புலிகள் சமாதான பேச்சுவார்த்தையிலிருந்து விலகிச் செல்ல செல்ல அவர்களது வலிமையும் குறைந்து- நலிவடைந்து இலங்கை அரசு அவர்களை இராணுவ ரீதியாக தோல்வியடையக்கூடிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொண்டார்கள்.

நாட்டின் இன்று அமைதியும் – சமாதானமான சூழலும் ஏற்பட்டு அனைத்து இன மக்களும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்கிறார்கள் என்றால் அதற்கான பிரதான பங்களிப்பை இன்றைய பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக அன்று வழங்கியமையினாலேயே ஆகும்“ என்றார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like