இலங்கை இளையோர் ஒருநாள் குழாமில் யாழ் மத்திய கல்லூரியின் வியாஸ்காந்த்

இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை இளையோர் குழாம் இன்று (29) அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், யாழ் மத்திய கல்லூரியின் சுழற்பந்து வீச்சாளரான விஜயகாந்த் வியாஸ்காந்த் மேலதிக வீரராக இடம்பெற்றுள்ளார்.

இந்திய இளையோர் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட இளையோர் டெஸ்ட் தொடரில் இலங்கை 19 வயருக்கு உட்பட்ட அணி 0-2 என தொடரை முழுமையாக இழந்த நிலையிலேயே இரு அணிகளுக்கும் இடையிலான இளையோர் ஒருநாள் தொடர் நாளை (30) தொடக்கம் நடைபெறவுள்ளது.

வியாஸ்காந்த் கடந்த வெள்ளிக்கிழமை (27) முடிவுற்ற இந்திய அணியுடனான இரண்டாவது இளையோர் டெஸ்ட் போட்டியில் முதல் முறை இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணிக்காக களமிறங்கி முக்கிய விக்கெட் ஒன்றை விழ்த்தினார். இது 36 ஆண்டுகளின் பின்னர் இலங்கை தேசிய அணியில் வட மாகாண வீரர் ஒருவர் இடம்பெற்ற முதல் சந்தர்ப்பமாக இருந்தது.

இலங்கை இளையோர் டெஸ்ட் குழாமுக்கு தலைவராக செயற்பட்ட ஜோசப் வாஸ் கல்லூரியின் நிபுன் தனஞ்சய பெரேரா ஒருநாள் குழாத்திற்கும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் தொடரில் இலங்கை சார்பில் ஒரு சதம் மற்றும் அரைச்சதத்துடன் அதிக ஓட்டங்களை பெற்ற றோயல் கல்லூரியின் பசிந்து சூரியபண்டாரவும் ஒருநாள் குழாத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை மற்றும் இந்திய இளையோர் அணிகளுக்கு இடையில் இதுவரை 40 இளையோர் ஒருநாள் போட்டிகள் நடைபெற்றிருப்பதோடு அதில் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியால் வெறும் நான்கு போட்டிகளில் மாத்திரமே வெல்ல முடிந்துள்ளது. இந்திய இளையோர் அணி 35 போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை இளையோர் குழாம்

நிபுன் தனஞ்சய – தலைவர் (ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ), பசிந்து சூரியபண்டார (றோயல் கல்லூரி, கொழும்பு), நுவனிது பெர்னாண்டோ (புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவை), நவோத் பரணவிதான (மஹிந்த கல்லூரி, காலி), நிஷான் பெர்னாண்டோ – விக்கெட் காப்பாளர் (மொரட்டு வித்தியாலயம்), லக்சித்த ரசன்ஜன (நாலந்த கல்லூரி, கொழும்பு), துனித் வெல்லாலகே (புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு), சதுன் மெண்டிஸ் (ரிச்மண்ட் கல்லூரி, காலி), அவிஷ்க லக்ஷான் (களுத்தர வித்தியாலயம்), ஷஷிக்க துல்ஷான் (புனித செர்வதியஸ் கல்லூரி, மாத்தறை), நவோத்ய விஜேகுமார (புனித அந்தோனியார் கல்லூரி, கடுகஸ்தொட்டை), கலன பெரேரா (புனித தோமியர் கல்லூரி, கல்கிசை), நிபுன் மாலிங்க (மஹிந்த கல்லூரி, காலி), ருவின் பீரிஸ் (திரித்துவ கல்லூரி, கண்டி), நவின் பெர்னாண்டோ (மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு)

மேலதிக வீரர்கள்

விஜயகாந்த் வியாஸ்காந்த் (யாழ் மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம்), கமில் மிஷார (றோயல் கல்லூரி, கொழும்பு), சொனல் தினுஷ (மஹானாம கல்லூரி, கொழும்பு), முதித் லக்ஷான் (டி.எஸ். சேனநாயக்க கல்லூரி, கொழும்பு), சிஹான் கலிந்து (புனித செர்வதியஸ் கல்லூரி, மாத்தறை)

போட்டிகள் விபரம்

ஜூலை 30 – முதல் ஒருநாள் போட்டி, கொழும்பு – பி. சரா ஓவல்

ஓகஸ்ட் 02 – 2ஆவது ஒருநாள் போட்டி, கொழும்பு – SSC

ஓகஸ்ட் 05 – 3 ஆவது ஒருநாள் போட்டி, கொழும்பு – SSC

ஓகஸ்ட் 07 – 4 ஆவது ஒருநாள் போட்டி, மொரட்டுவை

ஓகஸ்ட் 10 – 5 ஆவது ஒருநாள் போட்டி, மொரட்டுவை

Get real time updates directly on you device, subscribe now.

You might also like