ஆனைக்கோட்டை மற்றும் கொக்குவில் ஆகிய இடங்களில் வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசம்.

ஆனைக்கோட்டை மற்றும் கொக்குவில் ஆகிய இடங்களில் 3 வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் பெறுமதியான பொருள்களை அடித்து உடைத்து அட்டூழியத்தில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது.

ஆனைக்கோட்டை ஆறுகால்மடம் – புது வீதியில் ஒரு வீடும் ஆறுகால்மடம் -பொன்னையா வீதியில் ஒரு வீடும் மற்றும் கொக்குவில் பிரம்படி லேனில் ஒரு வீடுமே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகின.

4 மோட்டார் சைக்கிள்களில் வந்த முகமூடி அணிந்த 8 பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.வீடுகளின் முன்னால் நின்ற மோட்டார் சைக்கிள்களைத் தாக்கியும் தீ வைத்தும் வீடுகளுக்குள் இருந்த பெறுமதியான தளபாடங்களைச் சேதப்படுத்தியும் கும்பல் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை (29) மாலை 4.30 மணி முதல் 5.30 மணிக்குள் இந்த அட்டூழியங்கள் கும்பலால் அரங்கேற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.கூலிக்கு வன்முறையில் ஈடுபடும் கும்பலே இந்த தாக்குதல்களை முன்னெடுத்தது என்று தெரிவிக்கும் பொலிஸார், அதனைக் கைது செய்யும் நடவடிக்கை தொடர்பில் எதுவுமே குறிப்பிடவில்லை.

சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like