இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கியது யார்?

கடற்படையினர் சிலரால் 11 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொழும்பு சைத்ய வீதியில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் திருகோணமலையில் உள்ள முகாமொன்றின் நிலக்கீழ் அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக வழக்கு விசாரணைகளில் கண்டறியப்பட்டு சம்பவம் நடைபெற்ற காலப்பகுதியில் கடற்படையின் புலனாய்வுப் பிரிவிற்கு கொமடோர் D.K.P. தசநாயக்க பொறுப்பாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கடற்படை புலனாய்வுப்பிரிவின் அதிகாரிகள் இருவரும் கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதனுடன் தொடர்புடைய வழக்கு கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி , சந்தேகநபர்களை தலா ஒரு இலட்சம் ரூபாய் ரொக்க பிணையிலும் மற்றும் 5 இலட்சம் ரூபாய் சரீர பிணைகளிலும் விடுவிக்க நீதிபதி இதன்போது உத்தரவிட்டார்.

கடந்த 2008-2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பின் பல பிரதேசங்களில் 11 இளைஞர்களை கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.