மிருசுவிலில் வாள்வெட்டுக் கும்பல் அடாவடி: வன்முறையில் ஈடுபட்டோர் பயணித்த கார் மீட்பு!

மிருசுவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட வாள்வெட்டுக் கும்பல் தப்பித்துச் சென்ற கார் மீட்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த வாள்வெட்டுக் கும்பல் அடாவடியில் ஈடுபட்டு தப்பித்த போது, அந்தப் பகுதியைச் சேரந்த இளைஞர்கள் துரத்திச் சென்றனர். எனினும் கும்பல் ஓடித் தப்பித்தது.

கும்பல் பயணித்த காரின் சக்கரம் ஒன்று காற்றுப் போனதால் அதனை வீதியில் கைவிட்டு கும்பல் தப்பித்தது. இந்த நிலையிலேயே காரை கொடிகாமம் பொலிஸார். மீட்கப்பட்டுள்ளனர்.

மிருசுவில் வடக்கு வீதியில் உள்ள தம்பு ஜெயானந்தம் என்பவரது வீட்டுக்குள் வாள்கள் பொல்லுகளுடன் பத்துக்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் நேற்றிரவு (2) புகுந்தது.

வீட்டில் இருந்தவர்களையும் அயல் வீட்டில் வசித்தவர்களையும் சரமாரியாக கும்பல் தாக்கியது.

அப்போது அயலில் உள்ளவர்கள் கூக்குரல் இட்டதுடன் கிராம மக்கள் திரட்டனர். அதனால் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் கும்கல் தப்பி ஓடியது. மக்கள் கும்பலை விரட்டிச்சென்றனர்.வீதியால் உழவு இயந்திரத்தில் பயணித்த பாலேந்திரன் றஜீபன் என்பவரையும் அந்தக் கும்பல் தாக்கியது. அவரது உழவு இயந்திரத்தையும் சேதமாக்கிவிட்டு கும்பல் தப்பித்தது.

மிருசுவில் பகுதி இளைஞர்கள் கொடிகாம பொலிஸாருடன் இணைந்து அந்தக் கும்பலை விரட்டிச்சென்றனர்.
இதன்போது கும்பலைச் சேர்ந்த சிலர் பயணித்த காரினுடைய சக்கரம் ஒன்று காற்றுப்போனதனால் அதனைக் கைவிட்டுவிட்டு அதில் பயணித்தோர் தப்பிச்சென்றுவிட்டனர்.

கார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு கொடிகாமம் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.அந்தக் காரினுடைய உரிமையாளர் சாவகச்சேரி சரசாலை வடக்கைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டார்.

கார் வாடகைக்கு கொடுக்கப்பட்டதாக உரிமையாளரினால் தெரிவிக்கப்பட்டது.இதனடிப்படையில் இன்று அதிகாலை கொடிகாமம் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வன்முறைச் சம்பவத்தில் மிருசுவில் வடக்கு வீதியைச் சேர்ந்த தம்பு ஜெயானந்தன் (வயது 57) படுகாயமுற்றநிலையில் யாழ்போதனா வைத்தியசாலையிலும், மிருசுவிலை ஆயத்தடியைச் சேர்ந்த பாலேந்திரன் றஜீபன் (வயது 23) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like