வெள்ளை வேன் கடத்தல்: நீதியை தாமதப்படுத்தும் திரைமறைவு காய் நகர்த்தல்களும் மிரட்டல்களும்!!-(சிறப்பு கட்டுரை)

ஐந்து மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் வெள்ளை வேனில் கடத்­தப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்ட விவகாரம் இடம்பெற்று இன்றுடன் 10 வரு­டங்­க­ளா­கின்­றன.

எனினும் இத்­தனை நாட்களா­கியும் இந்த விவ­கா­ரத்தில் இன்னும் நீதியும் நியா­யமும் மெளனம் காக்­கி­றது. ஏன், இவ்வளவு நாட்களாகியும் நீதி நிலைநாட்­டப்­ப­டாமல் இழுத்­த­டிக்­கப்­ப­டு­கின்­றது என எல்­லோ­ருக்கும் எழும் கேள்விகளுக்கு பதில் தேடும் போது தான், இந்த கடத்தல் மற்றும் காணாமல் ஆக்­கப்­பட்ட விவ­கா­ரத்தில், திரைமறைவில் குற்­ற­வா­ளி­களைக் காக்கும் காய் நகர்த்­தல்­களும் நீதியை பெற்­றுக்­கொ­டுக்க போரா­டு­கின்றவர்­க­ளுக்கு எதி­ரான அச்­சு­றுத்­தல்கள், மிரட்­டல்கள் தாரா­ள­மாக இடம்­பெ­று­வதும் அவ­தா­னிக்­கப்­பட்­டது.

இந்த காய் நகர்த்­தல்கள், மிரட்­டல்கள் இன்று நேற்றிலிருந்து அல்­லாமல் கடந்த 7 வரு­டங்­க­ளுக்கு மேலாக இடம்பெறுவ­தை இந்த விவ­கா­ரத்தில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரின் தக­வல்களினூடாக உறுதி செய்ய முடி­கின்­றது.

குற்றப் புல­னாய்வுப் பிரிவு, கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 8 ஆம் திகதி கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்னவுக்கு இந்த காணாமல் ஆக்­கப்பட்ட விவ­காரம் தொடர்பில் விசேட விசா­ரணை அறிக்கை ஒன்­றை சமர்ப்பித்திருந்­தது.

அதில் “இந்த விவ­கா­ரத்தில் இரண்டாம் சந்­தேக நபர் கொமாண்டர் சுமித் ரண­சிங்க, கடந்த 2013 ஆம் ஆண்டு மாலை வேளை ஒன்றில் தனது சட்­டத்­த­ரணி அசித் சிறி­வர்­த­ன­வுடன் அப்­போது குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகரும் தற்­போது சி.ஐ.டி. பணிப்­பா­ள­ரு­மான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் ஷானி அபேசேகரவை சந்­திக்க வந்தார்.

சம்பத் முன­சிங்க

அப்­போது அவரால் புரி­யப்­பட்ட யுத்த பங்­க­ளிப்பு குறித்து விளக்­கப்­பட்ட நிலையில், பின்னர் இந்த கடத்­தல்­களை லெப்டினன்ட் கொமாண்டர் சம்பத் முன­சிங்க ( முத­லா­வது சந்­தேக நபர்) செய்­த­தா­கவும் பின்னர் அவர் அவர்­களை தன்னிடம் கைய­ளித்­த­தா­கவும் பின்னர் அவர்கள் காணாமல் ஆக்­கப்­பட்­ட­தா­கவும் கூறினார்.

எனினும் இதற்கு சம்பத் முன­சிங்­கவே பொறுப்புக் கூற வேண்டும் எனவும் தன்னை விடு­வித்து இந்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கு­மாறும் சட்­டத்­த­ரணி ஊடாக ரண­சிங்க பேச்­சு­வார்த்தை நடத்­தினார்”எனவும் அறி­வித்­தி­ருந்­தனர்.

அத்­துடன் அதே மேல­திக விசா­ரணை அறிக்­கையில், சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் பிரதி சொலி­சிட்டர் ஜென­ர­லாக அக்­கா­லத்தில் பதவி வகித்த ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சவேந்ர பெர்னாண்­டோவும் இவ்­வி­வ­கா­ரத்தில் சந்­தேக நபர்­களைப் பாது­காக்க பல அழுத்­தங்­களை தமக்கு பிர­யோ­கித்­த­தாக குற்றப் புல­னா­ய்வுப் பிரிவு குறிப்­பிட்­டி­ருந்­தது.

இந்த இரு விட­யங்கள் தொடர்­பிலும் கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி கோட்டை நீதி­மன்றில் வாதப் பிர­தி­வா­தங்கள் வெளிப்­பட்­டன.

இந்த 5 மாணவர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்தி காணாமல் ஆக்­கப்­பட்ட விவ­கா­ரத்தில் திரை மறைவு நடவ­டிக்­கை­களும் அழுத்தம் மற்றும் அச்­சு­றுத்­தல்­க­ளுடன் கூடிய செயற்­பா­டு­களும் தொடர்ந்து இடம்பெற்று வந்­துள்­ளதை அவை வெளிப்­ப­டுத்­தின.

அன்­றைய தினம் அதா­வது, கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி நீதி­மன்­றுக்கு குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் ஷானி அபே­சே­கர, குற்றப் புல­ன­ாய்வுப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி ரஞ்சித் முன­சிங்க மற்றும் இவ்­வி­வ­கா­ரத்தில் விசா­ரணை அதி­கா­ரி­யான பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா, பொலிஸ் பரி­சோ­தகர் இலங்­க­சிங்க ஆகி­யோ­ருடன் ஆஜ­ரா­கி­யி­ருந்தார்.

அப்­போது, சட்­டத்­த­ரணி அசித் சிறி­வர்­தன மேல­திக விசா­ரணை அறிக்கையினூடாக தன்னை தொடர்­பு­ப­டுத்தி கூறப்பட்டுள்ள விட­யங்­களை மறுத்து நீதி­வானுக்கு விட­யங்­களை தெளி­வு­ப­டுத்­தினார்.

“குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு போனது உண்மை. ஆனால் குற்றப் புல­னா­ய்வுப் பிரிவு கூறு­வதைப் போல், குற்­றங்­களிலிருந்து எவ­ரையும் பாது­காக்க நாம் செல்­ல­வில்லை.

இவ்­வ­ளவு நாள் இது குறித்து எதுவும் பேசா­த­வர்கள், சி.ஐ.டி.யிலி­ருந்து இந்த விசா­ர­ணை­களை மாற்­று­மாறு நான் கோரிய பின்­ன­ரேயே எனக்கு எதி­ராக குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக்­கின்­றனர்.

நான் அப்­படி நடந்து கொண்­டி­ருந்தால் அது தொடர்பில் பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கு கொடுக்­கப்பட்­டுள்ள பொலிஸ் பதிவுப் புத்­த­கத்தில் பதி­விட்­டி­ருக்­கலாம்.

அல்­லது என்னை தண்­டனை சட்டக் கோவை பிர­காரம் கைது செய்­தி­ருக்­கலாம். அப்­படி எதுவும் நடக்­கா­மை­யா­னது குற்றப் புல­னாய்வுப் பிரிவு கூறு­வதைப் போன்று எதுவும் நடக்­க­வில்லை என்­ப­தற்கு சான்று” என சட்­டத்­த­ரணி அசித் சிறி­வர்­தன கூறினார்.

எனினும் அதனை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் ஷானி அபே­சே­கர மறுத்தார். அசித் சிறி­வர்­தனவை தான் அறிந்திருந்த கார­ணத்தால் எந்தப் பதி­வையும் பொலிஸ் பதிவுப் புத்­த­கத்தில் இட­வில்லை என்று தெரி­வித்த அவர் கொமாண்டர் ரண­சிங்­க­வுடன் என்னை சந்­திக்க வந்தார்.

இந்த விவ­கா­ரத்தில் லெப்­டினன்ட் கொமாண்டர் சம்பத் முன­சிங்க மீது அனைத்துக் குற்­றங்­க­ளையும் சுமத்தி தன்னை விடு­விக்­கு­மாறு கோரினார்.

அது மட்­டு­மல்ல, கொமாண்டர் டி.கே.பி. தஸ­நா­யக்­கவைக் காப்­பாற்ற சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்­துக்கும் அவர் உள்­ளிட்ட சந்­தேக நபர்­களை அழைத்துச் சென்றார் என்று குறிப்­பிட்டார்.

இந்த வாதப் பிர­தி­வா­தங்­களை வைத்து பார்க்கும் போது எது உண்மை, எது பொய் என்­ப­தற்கு அப்பால் கடந்த 2013 ஆம் ஆண்டே இந்த விவ­கா­ரத்தில் சந்­தேக நபர்கள் தொடர்பில் சி.ஐ.டி. வெளிப்­ப­டுத்திக் கொண்­டி­ருந்­துள்­ள­மை­யையும் அப்­போது முதலே இந்த விவ­கா­ரத்தில் நியா­யத்தை அழிக்க ஏதோ முயற்­சிகள் இடம்­பெற்­றுள்­ள­மை­யையும் ஊகிக்கக் கூடிய வகையில் விட­யங்கள் வெளி­ப்ப­டு­கின்­றன.

இந்த வாதங்­களில் ஒரு கட்­டத்தில், சட்­டத்­த­ரணி அசித் சிறி­வர்­தன, சி.ஐ.டி. பணிப்­பாளர் ஷானி அபே­சே­க­ரவை நோக்கி, “இப்­போது நீங்­கள்­தானே பல­மிக்­க­வர்கள் …” என்று கூற பதி­லுக்கு ஷானி அபே­சே­கர “எமக்கு எதிர்­கா­லத்தில் என்ன நடக்கும் என்­பதைத் தெரிந்­து­கொண்டே நாம் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கின்றோம்” என்றார்.

உண்­மையில் இந்த வார்த்தைப் பிர­யோ­கங்கள் வாதத்தின் போது ஆழ்மனதில் இருந்து வெளிப்­பட்ட வார்த்­தை­க­ளா­கவே மன்றில் நேரில் அவ­தானி­த்­தவர்­களால் பார்க்­க­ப்ப­டு­கின்­றது.

அதா­வது, சட்­டத்­த­ரணி சி.ஐ.டி. பணிப்­பாளர், “இப்­போது நீங்கள் அதி­கா­ர­மிக்­க­வர்கள். நாம் அதி­கா­ரத்­துக்கு வரும் போது பார்த்­துக்­கொள்­கிறோம்” என்னும் தோர­ணையில் கூறுவதா­கவும் அதற்கு “எமக்கு என்ன நடக்கும் என்­பதை நாம் அறிந்து வைத்­துள்ளோம்” என்று ஷானி அபே­சே­கர கூறு­வதனூடாக விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு கொடுக்­கப்­படும் அழுத்தம், நெருக்­கடி, அச்­சு­றுத்தல் என்பன பிர­தி­ப­லிப்­ப­தா­க­வுமே தோன்­று­கின்­றது.

இந் நிலை மிக ஆபத்­தா­னது. நீதி, நியா­யத்தை நிலை நாட்ட ஆட்­சியில் யார் இருக்­கின்றார், எவர் அதி­கா­ர­மிக்­கவர் என்பதை­யெல்லாம் சேர்த்துப் பார்த்தால் 10 வரு­டங்கள் அல்ல, 100 வரு­டங்­க­ளா­னாலும் நியாயம் கிடைக்­காது. மாறாக நாள் கடத்தும் செயற்­பா­டுகள் மட்டுமே தொடரும்.

இதே போல்தான் முன்னாள் பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் சவேந்ர பெர்னாண்டோ தொடர்பில் 2018 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 18 ஆம் திகதி மேல­திக அறிக்­கையில் முன்­வைக்­கப்­பட்ட விட­யங்­க­ளையும் பார்க்க வேண்­டி­யுள்­ளது.

சவேந்ர பெர்னாண்டோவின் தக­வல்­க­ளுக்கமைய அவர் சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்திலிருந்த போது முப்­படை தொடர்­பி­லான விட­யங்­களைக் கையாளும் பொறுப்பு அவ­ரிடம் இருந்­துள்­ளது.

இக்­கா­லப்­ப­கு­தியில் காணாமல் ஆக்­கப்பட்ட 3 மாண­வர்கள் சார்பில் தொட­ரப்­பட்ட ஆட்­கொ­ணர்வு மனுவில் சவேந்ர பெர்னாண்டோ பொறுப்புக் கூறத்­தக்க தரப்பு சார்பில் ஆரம்­பத்தில் ஆஜ­ரா­கி­யுள்ளார்.

இங்கு தான் சிக்கல் ஆரம்­பித்திருப்­ப­தாகத் தோன்­று­கின்­றது.

“ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சவேந்ர பெர்னாண்டோ சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தில் இருந்த போது இந்த விவ­கா­ரத்தில் சந்­தேக நபர்­களை விசா­ரணை மற்றும் கைது செய்­வ­தற்கு பல்­வேறு தடங்­கல்­களை ஏற்­ப­டுத்­தினார்.

இந்த விசா­ரணைக் கோவை தற்­போ­தைய பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் ஹரிப்­பி­ரியா ஜய­சுந்­த­ரவின் கைகளில் இருந்த போது, அவரின் ஆலோ­ச­னைக்கமைய டி.கே.பி. தஸ­நா­யக்க உள்­ளிட்­ட­வர்கள் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட இருந்தனர்.

எனினும் சவேந்ர பெர்­னாண்டோ அவ் ­வி­சா­ர­ணை­களைத் தடுத்தார்” என சி.ஐ.டி. பணிப்­பாளர் ஷானி அபே­சே­கர கூறு­கின்றார்.

எனினும் “இந்த குற்­றச்­சாட்­டுக்கள் அடிப்­ப­டை­யற்­றவை. நான் இந்த விவ­கா­ரத்தின் ஆட்­கொ­ணர்வு மனு மீதான விசா­ர­ணை­களின் போது பொறுப்புக் கூறத்­தக்க தரப்­பினர் சார்பில் ஆஜ­ரானேன்.

எனினும் இங்கு இவர்கள் கூறு­வது போன்று விசா­ர­ணைகள் எதிலும் தலை­யி­ட­வில்லை. இவை முற்­றிலும் பொய்­யா­னவை” என ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சவேந்ர பெர்னாண்டோ கூறு­கின்றார்.

உண்­மையில் இந் நிலை மிகப் பயங்­க­ர­மா­னது. நீதிக்­காக ஒரு தரப்பு ஏங்கும் நிலையில், சட்­டத்தை நிலைநாட்டி சுயாதீன­மாக செயற்­பட வேண்­டிய கடப்­பாடுள்ள சட்ட மா அதிபர் திணைக்­கள மட்­டத்திலிருந்து சந்­தேக நபர்­க­ளுக்கு உதவி – ஒத்­தாசை புரி­யப்­பட்­டதா என்ற கேள்­விகள் எழும் நிலையில், அவை சட்ட மா அதிபர் திணைக்­களம் மீதான நம்­பிக்­கையைக் கூட தகர்க்கும் வல்­லமை கொண்­டவை. எனவே இது குறித்து கண்­டிப்­பாக உரிய விசா­ரணை மற்றும் நட­வ­டிக்கை தேவை.

இவை எல்­லா­வற்­றுக்கும் மேலாக இவ்­வா­தத்­துக்கு சி.ஐ.டி. பணிப்­பாளர் ஷானி அபே­சே­க­ரவின் ஒரு வார்த்தைப் பிர­யோகம் முற்றுப்புள்ளி வைத்­தது.

“இந்த விவ­காரம் தொடர்பில் பாது­க­ாப்புச் சபைக் கூட்­டத்தில் பேசப்பட்­ட­வற்றை என்னால் இங்கு வெளி­ப்ப­டுத்த முடி­யாது” என்ற கூற்றே அது.

அப்­ப­டி­யானால் மேலே நாம் அதி பயங்­க­ர­மாக கருதி பேசிய விட­யங்­களை விஞ்சும் கலந்­து­ரை­யா­டல்கள் அப்­போது பாது­கா­ப்புச் சபை கூட்­டத்தில் இடம்­பெற்­றுள்­ளன.

நிச்­ச­ய­மாக ஷானி அபே­சே­கரவின் கூற்று, அவர் அதனை வெளி­ப்படுத்­தி­ய நிலை, விதம் தொடர்பில் பார்க்கும் போது அக் கலந்து­ரை­யாடல் பாதிக்­கப்பட்­ட­வர்­க­ளுக்கு நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்க இடம்­பெற்­ற­தாகத் தோன்­ற­வில்லை.

மாறாக சந்­தேக நபர்­களை பாதுகாக்கும் கலந்­து­ரை­யா­ட­லாக இருந்­திருக்க வேண்டும் என்றே எண்ணத் தோன்­று­கின்­றது. அப்ப­டி­யானால் இந்த விவ­கா­ரத்தில் நீதி, நியாயம் வேண்­டு­மென்றே திட்­ட­மிட்டு இழுத்­த­டிக்­கப்பட்டு வரு­கின்­றதா என்ற கேள்­வியை எழுப்­பாமல் இருக்க முடி­யாது.

இந் நிலையில் நீதி நிலை­நாட்­ட­ப்படு­வதை இழுத்­த­டிக்­கத் திட்­ட­மிட்ட சக்­திகள் திரைமறைவில் செயற்­பட்­டுள்­ளன. அவர்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை எடுக்க யாருக்கு துணிச்சல் இருக்கும் என்­பது தெரி­ய­வில்லை.

உண்­மையில் கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, தெஹி­வளை, வத்­தளை மற்றும் கட்­டு­நா­யக்க உள்­ளிட்ட பல பிர­தேசங்களில் பல்­வேறு உத்­தி­களைக் கையாண்டு வெள்ளை வேன் கடத்­தல்கள் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக தெஹி­வ­ளையில்17.09.2008 அன்று பெர்­னாண்டோ மாவத்­தையிலுள்ள அலி ஹாஜியார் அன்வர் என்­ப­வ­ரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஸ்­வரன் ராம­லிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய 5 மாண­வர்­களும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

இத­னை­விட கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆரச்­சி­லாகே ஜோன் ரீட், அரிப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையை சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆரச்சி, திரு­கோ­ண­ம­லையை சேர்ந்த தியா­க­ராஜா ஜெகன் உள்­ளிட்­டோரும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

இவ்­வாறு கடத்­தப்­பட்ட அனை­வரும் திரு­கோ­ண­மலை கடற்­படைத் தளத்தில் உள்ள இர­க­சிய வதை முகா­மான கன்சைட் என்னும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்­கப்பட்­டி­ருந்­த­மையை குற்றப் புல­னா­ய­்வா­ளர்கள் கண்­டு­பி­டித்­தனர்.

இந்த விடயம் சர்­வ­தேச அளவில் அவ­தா­னிப்­புக்கு உள்­ளா­கி­யுள்ள நிலையில், சிறப்பு புல­னாய்வுப் பிரிவின் பொறுப்­பா­ள­ராகக் கட­மை­யாற்­றி­யி­ருந்த லெப்­டினன்ட் கொமாண்டர் சம்பத் முன­சிங்க, கன்சைட் நிலத்­தடி இர­க­சிய வதை முகாமின் பொறுப்­பா­ள­ராக அப்­போது இருந்த லெப்­டினன்ட் கொமாண்டர் தரத்­தை உடைய தற்­போது கொமாண்டராக பதவி உயர்த்­தப்பட்­டுள்ள சுமித் ரண­சிங்க, கடற்­படை சிப்பாய் லக் ஷ்மன் உத­ய­கு­மார, நலின் பிர­சன்ன விக்­ர­ம­சூ­ரிய, தம்­மிக தர்­ம­தாஸ , கித்­சிறி மற்றும் சிறப்புப் புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பா­ள­ரா­கவும் கடற்­படை ஊடகப் பேச்­சா­ள­ரா­கவும் அப்­போது பதவி வகித்த கொமாண்டர் டி.கே.பி. தஸ­நா­யக்க, கடற்­படை புல­ன­ாய்வுப் பிரிவின் முன்னாள் வீர­ரான கஸ்­தூ­ரிகே காமினி, அரு­ண­து­ஷார மெண்டிஸ் ஆகியோர் கைதாகி பிணையில் உள்­ளனர்.

இக் கடத்­தல்கள் அனைத்தும் கடற்­ப­டை­யி­னரால் முன்­னெ­டுக்­கப்பட்­டவை என்­பதை சி.ஐ.டி. கண்­ட­றிந்­துள்ள நிலையில் பெற்­றோரும் அது தொடர்பில் கடற்­ப­டை­யி­ன­ரையே குற்றஞ்சாட்­டு­கின்­றனர். அவர்­க­ளது கண்ணீர் நிறைந்த பிரார்த்­தனை கடத்­தப்பட்ட தமது பிள்­ளைகள், உற­வுகள் தம்மை வந்து சேர வேண்டும் என்­பதே.

காணாமல் ஆக்­கப்­பட்ட ரஜீவ் நாக­நா­தனின் தாய் சரோ­ஜினி நாக­நாதன் தனது துய­ரத்தை இவ்­வாறு கூறு­கின்றார்.

“கடந்த 2008 ஆம் ஆண்டு செப்­டம்பர் மாதம் 17 ஆம் திகதி எனது மகன் கடத்­தப்­பட்டார். எனக்கு இருந்­தது ஒரே ஒரு மகன். உயர் கல்­விக்­காக வெளி­நாடு செல்லவிருந்த நிலையில் அவர் கடத்­தப்­பட்டார்.

தில­கேஸ்­வரன், டிலான் ஆகிய தனது இரு நண்­பர்­க­ளுடன் அவர் வீட்டிலிருந்து காரில் சென்­ற­போதே தெஹி­வ­ளையில் வைத்துக் கடத்­தப்­பட்­டுள்ளார்.

கடற்­ப­டை­யி­னரால் அவர் கடத்­தப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த போது தொலை­பேசியினூடாக எங்­க­ளுடன் கதைத்தும் உள்ளார். அவர் பேசும் தொலை­பேசி இலக்­கத்­துக்கு நாமே “ரீலோட்”டும் செய்­துள்ளோம்.

மகனை விடு­விக்க என்­னிடம் ஒரு கோடி ரூபா கப்பம் கோரப்­பட்­டது. நான் 75 இலட்சம் ரூபா­வுடன் நாரம்­ம­லைக்கு செல்ல முற்­பட்ட போது அப்­போ­தைய அமைச்சர் பீலிக்ஸ் பெரே­ராவின் அறி­வு­றுத்­த­லுக்கமைய நான் அங்கு செல்­ல­வில்லை.

பீலிக்ஸ் பெரேரா அப்­போது கடற்­படைத் தள­பதி கரண்­ணா­கொ­ட­வுடன் பேசி எனது மகனை விடு­விக்க நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தார். எனினும் இன்று வரை எனது மகன் விடு­விக்­கப்­ப­ட­வில்லை.

இன்று அர­சியல்வாதிகள், கடத்­தல்­க­ளுக்கு பொறுப்புக் கூற வேண்­டிய தஸ­நா­யக்க என்னும் கடற்­படை அதி­கா­ரியைக் கைது செய்­ததும் தஸ­நா­யக்­கவின் மனைவியும் பிள்­ளைகளும் அழு­வ­தாகப் பேசு­கின்­றனர்.

உங்கள் மன­சாட்­சியைத் தொட்டு சொல்­லுங்கள். கடந்த 8 வரு­டங்­க­ளாக நாம் அழுத அழு­கையும் உங்­க­ளிடம் விடுத்த வேண்­டு­கோள்­களும் உங்­க­ளுக்குத் தெரி­ய­வில்­லையா? எமது பிள்­ளை­க­ளுக்­காக நாமும் இப்­படித்தானே 8 வரு­டங்­க­ளாக அழு­து­கொண்­டி­ருக்­கின்றோம்.

எனது மகனை கடத்திச் சென்று முதலில் வெலி­சறை முகாமில் வைத்­தி­ருந்­தனர். பின்னர் சைத்­திய வீதியிலுள்ள மறை­வி­டத்­திலும் பின்னர் திரு­மலை இர­க­சிய முகா­மிலும் வைத்­தி­ருந்­தனர்.

இவை சம்பத் முன­சிங்க, ஹெட்டி ஆரச்சி மற்றும் ரண­சிங்க ஆகி­யோரின் கீழேயே இடம்­பெற்­றன. இதனை மகன் எனக்கு தொலை­பே­சியில் கதைக்கும் போதே தெரி­வித்தார். தய­வு­செய்து எமது பிள்­ளை­களை எம்­மிடம் தாருங்கள்” என்று கண்ணீர் மல்க தெரி­வித்தார்.

கடத்­தப்­பட்ட ஐவரில் உள்­ள­டங்கும் டிலான் மொஹம்மட் என்னும் மாண­வனின் பெற்றோர் கூறு­கையில்:

“எமது பிள்­ளையைக் கடத்­தி­ய­வர்கள் கடற்­ப­டை­யினர் என்­பது தெரி­ய­வந்த போது மிகவும் கவ­லை­யாக இருந்­தது. ஏனெனில் நாமும் இரா­ணுவ குடும்­பத்தைச் சேர்ந்­த­வர்கள்.

எனது கணவர் ஓய்­வு­பெற்ற இரா­ணுவ வீரர். எனினும் இவ்­வா­றான கடத்­தல்­களை ஒருபோதும் உண்­மை­யான இரா­ணுவ வீரர்கள் புரி­ய­மாட்­டார்கள்.

எமது பிள்­ளைகள் புலிகள் இல்லை. அதனை நான் அடித்துச் சொல்வேன். எனது மகன் புலி என நிரூ­பித்தால் நான் எனது முறைப்­பாட்டை மீளப் பெற்­றுக்­கொள்வேன். அப்­பா­வி­களைக் கடத்தி காணாமல் ஆக்­கி­ய­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை வேண்டும்.

எமது பிள்­ளை­களை கடத்­தி­யோரை நாம் அடை­யாளம் காண­வில்லை. ஆனால் புல­னாய்வுப் பிரி­வி­னரே கடற்­படை அதி­கா­ரி­களின் சாட்­சி­யங்­க­ளுக்கு அமை­வா­கவே அவற்றை வெளிப்­ப­டுத்திக் கொண்­டுள்­ளனர். அதன்­படி கைது செய்­யப்­பட்­டுள்­ள­வர்கள் எமது பிள்­ளை­களை கடத்­தி­ய­மைக்கு பொறுப்புக் கூற வேண்டும்” என்­கிறார்.

தனது கணவன் மற்றும் மகன் ஆகியோர் கடற்­ப­டை­யி­னரால் கடத்­தப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்­டமை தொடர்பில் சம்சுன் நிஹாரா என்னும் பெண் இப்­படி கூறு­கின்றார்.

“தனது காத­லி­யுடன் வேனில் போகும் போது எனது மகன் 11.09.2008 அன்று கடத்­தப்­பட்டார். பின்னர் வீட்­டுக்கு வந்­த­வர்கள் எனது கண­வரை 17.10.2008 அன்று கடத்திச் சென்றனர். மகன், கணவர் இருவர் தொடர்­பிலும் இது­வரை தகவல் இல்லை.

என்­னிடம் மக­னையும் கண­வ­ரையும் விடு­விக்க கடற்­ப­டையின் “அண்­ணாச்சி” என தன்னை அறி­முகம் செய்த ஒருவர் கப்பமாக 15 இலட்சம் ரூபா கோரினார். என்­னிடம் அவ்­வ­ளவு பணம் இல்லை என்றேன்.

இறு­தியில் 5 இலட்சம் ரூபா கோரி அதனை 3 இலட்­ச­ம் ரூபாவாக குறைத்­துக்­கொண்டு பணத்­தையும் எடுத்துக் கொண்டு நாரம்­மல பகு­திக்குச் சென்று கொடுத்தேன்.

அப்­போதும் அவர்­களை விடு­விக்­க­வில்லை. கொடுத்­ததில் ஒரு 1000 ரூபா குறை­வ­தாகக் கூறினர். மக­னையும் கண­வ­ரையும் திருப்பித் தர­வில்லை.

அண்­மை­யி­லேயே மகன் பய­ணித்த வேன் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது. அதிலும் எஞ்சின், செஸி இலக்­கங்கள் வேறாக்­கப்­பட்­டுள்­ள­தாக புல­னாய்வுப் பிரி­வினர் கூறு­கின்­றனர். என்ன நடக்­கி­றது என்றே தெரி­ய­வில்லை.

தயவு செய்து எனது கண­வ­ரையும் மக­னையும் மீட்டுத் தாருங்கள்” என்­கிறார். இவை 3 பெற்­றோர்­களின் கதறல்கள் மட்­டுமே. இப்­படி 11 பேரின் பெற்­றோர்கள், உற­வி­னர்கள் தினம் தினம் அழுது மன வேத­னையில் துடித்­துக்­கொண்­டி­ருக்கும் சூழ­லி­லேயே அதி­காரம், பணம், உள்­ளிட்­ட­வற்றை வைத்­துக்­கொண்டு அப்­பா­வி­களின் உரி­மை­யான நீதி, நியாயத்தை விலை பேசி திரை­ம­றைவில் காய் நகர்த்­தல்கள் இடம்­பெ­று­கின்­றன.

இவ்­வா­றான சட்டம் சார்ந்த காய் நகர்த்­தல்கள் மட்டும் நீதியை தாம­தப்­ப­டுத்­த­வில்லை. மாறாக விசா­ர­ணை­யா­ளர்கள் நீதியைக் கேட்டுப் போரா­டு­வோரை அச்­சு­றுத்தி அவர்­களை அடக்­கு­வதனூடாக நியா­யத்தை வழங்­காமல் இருக்­கவும் முயற்­சிகள் முன்­னெ­டுக்­க­ப்படு­கின்­றன. அதற்கு இரு உதா­ர­ணங்­களை எடுத்­துக்­காட்ட முடியும்.

ஒன்று பிர­தான விசா­ரணை அதி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்­வாவை கொலை செய்யத் திட்­டமிடப்­பட்­ட­தாகக் கூறப்­படும் விடயம். இன்­னொன்று பாதிக்­கப்பட்ட தரப்பு சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவுக்கு தொலைபேசி ஊடாக விடுக்­கப்­பட்ட அச்­சு­றுத்தல்.

நிசாந்த சில்­வாவை கொலை செய்ய சிறை­யி­லி­ருந்து தீட்­டப்­பட்ட திட்டம் தொடர்பில் குற்றப் புல­னாய்வுப் பிரிவு விசா­ரிக்கும் நிலையில், சட்­டத்­த­ரணி அச்­சலா சென­வி­ரத்­ன­வுக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டமை குறித்து வாைழத்­தோட்டப் பொலிஸார் விசா­ரிக்­கின்­றனர்.

இந்த விவ­கா­ரத்தில் சந்­தேக நபர்­களை வெளிப்­ப­டுத்தி சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட இவ்­வி­ரு­வரின் பங்­க­ளிப்பு அளப்­ப­ரி­யது.

அவ்­வா­றான சூழலில், பிர­தான விசா­ரணை அதி­கா­ரியின் பாது­காப்பை உறுதி செய்ய பொலிஸ் திணைக்­க­ளமோ அர­சாங்­கமோ இன்று வரை உரிய நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை.

சட்­டத்­த­ரணி ஒரு­வ­ருக்கு விடுக்­கப்­பட்ட அச்­சு­றுத்தல் தொடர்பில் கூட பொலிஸார் கண்டும் காணா­மலும் இருப்பதைப் போன்று நடந்துகொள்வதாகவே தோன்றுகின்றது.

இவ்வாறான பின்னணியில், தமது பிள்ளைகளையும் உறவுகளையும் கண்ணீரோடு தேடும் இந்த பெற்றோர், உறவுகளுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வருவதாகத் தோன்றவில்லை.

நியாயத்தை பெற்றுக்கொடுக்க முன்வரும் அதிகாரிகளின் பாதுகாப்புக் கூட கேள்விக்குறியாகியுள்ள நிலையில், எப்போது இந்த நியாயம் கிடைக்கும் என்ற வினா மட்டுமே இறுதியில் எஞ்சியுள்ளது.

– தாமதமாகக் கிடைக்கும் நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமன்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like