விருகம்பாக்கத்தில் விஜயகாந்த் வீடு இருக்காது: திமுக வழக்கறிஞர் மிரட்டல்!

தமிழக அரசியல் களத்தில் தற்போது திமுக – தேமுதிக மோதலே அனலை கிளப்பிவருகிறது. பாஜக – அதிமுக கூட்டணியில் இணைந்துகொள்ள பாஜகவின் நடுவண் அமைச்சரோடு ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே, திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டிற்கு கூட்டணி குறித்து பேசுவதற்காக தமது கட்சியின் நிர்வாகிகளை தேமுதிக துணைச்செயலாளர் சுதீஷ் அனுப்ப, பழைய கணக்கு ஒன்றை தீர்க்க துரைமுருகன் அதை அம்பலப்படுத்திட, திமுக மீது கடும் அதிருப்தியில் உள்ளது தேமுதிக தலைமை.

திமுக மீதான அதிருப்தியில் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் திமுக தலைமையை விளாசியிருந்தார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா. அதேபோல், நேற்று காலை காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீட்டையும் முற்றுகையிட முயன்றனர் தேமுதிகவினர்.

இந்த நிலையில், நேற்றைய தினம் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற திமுக வழக்கறிஞர் சிவ ஜெயராஜ், ” தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவரான துரைமுருகனை ஒருமையில் பேசுவதும், அவரது வீட்டை முற்றுகையிட முயல்வதும் தேமுதிகவினருக்கு அழகல்ல. அதே போன்று நாங்கள் செயல்பட நினைத்தால் சென்னை விருகம்பாக்கத்தில் விஜயகாந்த் வீடு இருக்குமா?” என மிரட்டல் விடுக்கும் தொனியில் தேமுதிகவினரை எச்சரித்துள்ளார்.