புதுமணப் பெண் பலி

திருமணமான 45 நாளில் காட்டுத்தீக்கு இரையாகியுள்ள ஐ.டி ஊழியர் புனிதாவின் மரணம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம் பெண்ணான புனிதாவிற்கும் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி அவின்யூவைச்சேர்ந்த பாலாஜி என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 28ந்தேதி திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பின் தன் கணவருடன் ஸ்ரீபெரும்புதூரில் வசித்து வந்த புனிதா சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள சேப்பல் எனும் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் நண்பர்களுடன் இணைந்து குரங்கணி மலைக்கு சென்றிருந்த நிலையில் காட்டுத் தீக்கு இரையாகி உயிரிழந்துள்ளார்.

புனிதாவின் கணவரும் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றுபவர்தான். அவரும் மலையேற்றத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் கடைசி நேரத்தில் அதனை அவர் ரத்து செய்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்ததாகக் கூறப்படுகிறது.

புனிதா பலியான தகவலை தொலைகாட்சிகளில் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக குரங்கணி மலைப் பகுதிக்குச் சென்று புனிதாவின் உடலை அடையாளம் காட்டினர்.

உடற்கூறு ஆய்விற்கு பின்னர் நேற்றிரவு புனிதாவின் உடல் செங்கல்பட்டில் உள்ள அவரது பெற்றோர் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக சிறிது நேரம் வைக்கபபட்டது.

பின்னர் ஸ்ரீபெரும்பத்தூரில் உள்ள அவரது கனவர் பாலாஜியின் இல்லத்திற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. திருமணமான 45 நாட்களில் புனிதா தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தது அவரது குடும்பத்தினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.