லோஸ்லியா ஏன் பேசுபொருளாக மாறினார்…? பிக்பாஸில் மகுடம் சூட்டப்போகும் போட்டியாளர் யார்…?

பிக்பாஸ்- இது ஒரு கேம் ஷோ எனப்பட்டாலும் இதன் போக்கை மாற்றி விடுவதிலும், மாற்றி விளையாடுவதிலும் பார்வையாளர் தொடர்புற்றிருப்பது புலனாகிறது.

நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் போட்டியாளர்களின் இயல்புகள், பழக்க வழக்கங்கள், நடத்தையின் பாங்கு, போட்டிக்கென அவர்கள் தேர்வு செய்யும் உபாயங்கள் என அனைத்துமே விவாதப் பொருளாக மாறுகிறது. அதன் மூலம் ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் பார்வையாளர்களினால் முடிவுகள் கட்டமைக்கப்படுகின்றன.

தொடர்பாடல் சேவைகளும், சமூக வலைதளங்களும் இந்நிகழ்ச்சியின் போக்கில் தாக்கம் செலுத்துவதற்கான பின்னணியும் வணிக விதிகள் சூழ்ந்ததுதான்.

இதனை பல கோடி பார்வையாளர்கள் ஏக காலத்தில் பார்த்து ரசிக்கின்றனர். இந்த பார்வையாளர்களில் ஒரு பகுதியினரே தொலைபேசியூடாகவும் hotstar வழியாகவும் வாக்களித்து போட்டியாளர்களை வெளியேற்றுவதாக கூறப்படுகிறது.

இதன் எல்லா வகையான ஒளிபரப்பு முறைகளூடாகவும் பெரும் பணம் ஈட்டும் தந்திரோபாயங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர் எந்தளவிற்கு பார்வையாளர்களை வசீகரிக்கிறார் என்பதினூடாக அந்நிகழ்ச்சியின் வணிக பரிமாணம் தீர்மானிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட ஒரு போட்டியாளரின் நடத்தையும், உபாயங்களும், உடல்மொழியும் பார்வையாளரை வசீகரிக்கும் பொழுது அவரை மையப்படுத்திய சமூக வலைதள பரபரப்புகள் உருவாகின்றன. இன்டர்நெட் வெளியில் அமைந்திருக்கும் வேர்ச்சுவல் இலாபமீட்டலுக்கு துணையாக அமையக் கூடிய போட்டியாளரே இறுதி வரை நிகழ்ச்சியில் தொடர்வதற்கான வாய்ப்பு ஏற்படும்.

இது உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு தெரியாத வண்ணமும், வெளியில் இருக்கும் பார்வையாளர்கள் உணராத வண்ணமும் மர்மமாக பேணும் காரியங்களை தொலைக்காட்சி திட்டமிடும்.

இன்றைய செய்மதி தொலைக்காட்சி யுகத்தில் தமிழ் பார்வையாளர்களின் வெளி மிக பரந்தது. உலகெல்லாம் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்கள் தொலைக்காட்சிகளின் பாரிய சந்தை நுகர்வாளர்களாக இருக்கிறார்கள்.

இவர்களைக் குறி வைத்து நிகழ்ச்சிகளை வடிவமைத்த முதல் தொலைக்காட்சி விஜய் T V தான்.

கடந்த 2007 களிலேயே புலம்பெயர் தமிழ் போட்டியாளர்களை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சேர்த்துக் கொண்டார்கள். அதற்கு பெரும் வரவேற்பும் கிடைத்திட அது தொடர் நடைமுறையாயிற்று.

இந்தப் பின்னணியில்தான் இம்முறை பிக்பாஸ் சீசன் 3 ல் வெளிநாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் மூவர் பங்கேற்றிருக்கிறார்கள். அவர்கள் மலேசியாவைச் சேர்ந்த முகேன் மற்றும் இலங்கையைச் சேர்ந்த தர்ஷன், லோஸ்லியா . இலங்கை போட்டியாளரான லோஸ்லியா தமிழக இளைஞர், யுவதிகளால் கொண்டாடித் தீர்க்கப்படுவதை சமூக வலைதளங்கள் சாட்சி பகர்கின்றன.

அதேவேளை இலங்கை பார்வையாளர்களால் அதிகம் விமர்சிக்கப்படுபவராகவும் லோஸ்லியா மாறியுள்ளார். ஆக மொத்தத்தில் இந்நிகழ்ச்சியின் சந்தைப் பெறுமானமுள்ள நிழலுருவாக லோஸ்லியா திகழ்கிறார். ஒரு மணிநேர ஒளிபரப்பில் இவரது பூட்டேஜ் காட்சிகள் பதினைந்து நிமிடங்களுக்கு மேலாக தினமும் காண்பிக்கப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டினுள் இவரை மையப்படுத்திய துணைப் பாத்திரங்களாகவே இதர போட்டியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளது போலவே ஒளிபரப்புக் காட்சிகள் வடிவமைகின்றன.

வெளியில் பார்வையாளர்கள் மத்தியில் அதிக ஈர்ப்பை பெறும் நிழலுருவை சந்தை இலாபம் கருதி அதிக நேரம் காட்ட வேண்டும் எனும் தேவை விஜய் தொலைக்காட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது.

இத்தனை விசேடத்துவமான ரசனைச் சாகசங்களுக்கிடையிலும் இலங்கை பார்வையாளர்களில் மிக அதிகமானவர்கள் லோஸ்லியாவை பாராட்டும் நிலையில் இல்லாமல் போயிருப்பதற்குப் பின்னால் பெண்களுக்கு எதிரான சமூக வக்கிர உணர்வே காரணமாய் இருக்க முடியும்.

பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களில் நேர்மையுடனும், மனசாட்சியுடனும் விளையாடி அவசியமான தருணங்களில் போராடி தனது சிறந்த பண்புகளை வெளிப்படுத்தும் ஒரு இளம் பெண்ணை கொண்டாட மனம் இல்லையென்பது கொடூரம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தன்மை எத்தகையது என்பதைப் புரியாத நிலையில் இருந்துதான் பல அபிப்பிராயங்கள் வெளிப்படுகின்றன. தர்ஷனைப் புகழ்ந்து அவரை வெற்றியாளராக்கும் முயற்சியின் பின்னணியில் லோஸ்லியாவை இழிவு படுத்துவதும் ஒரு உபாயமாக இருந்திருக்கிறது.

தர்ஷன்- எல்லா சந்தர்ப்பங்களிலும் நேர்மையாக நடந்து மக்களிடம் நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தினாரா?

அவரைச் சுற்றி எப்போதும் ஒரு விவாதம் இருக்கும் வண்ணம் சூழலை வைத்துக் கொண்டாரா?

சமூக வலைதளங்களில் அவரது வீடியோ காட்சிகளை பார்வையாளர்கள் அதிகம் பார்க்கும் வகையில் சுவாரசிய கன்டன்ட்களை உருவாக்கினாரா?

அல்லது அவரை பெருமளவில் வெறுக்கும் பார்வையாளர்களையாவது உருவாக்கி நிகழ்ச்சியின் போக்கை திசை திருப்பினாரா? எதுவுமில்லை.

டாஸ்க் மட்டுமே டைட்டிலை தீர்மானிக்கின்ற விடயம் என்றால் அதற்கு பலசாலியானவர்களை தெரிவு செய்யும் போட்டிகள் போதும். அந்த வகையில் தர்ஷன் வெளியேற்றப்பட்டது நியாயமானதே. ஆனால் லோஸ்லியாவை இலங்கையர்கள் கண்டு கொள்ளாமல் தவிர்ப்பதுதான் அநியாயமானது.

இதுவரையிலுமான மூன்று சீசன்களையும் விட இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சியானது ஒரு தொடர் போல வடிவமைந்திருக்கிறது.

குதூகலம், பாசம், நட்பு, அன்பு, காதல், பழியுணர்வு, பிரிவு, சோகம் எனும் பல வகையான உணர்வுக் கதம்ப வார்ப்பாக அமைந்து விட்டது. இதில் நாயகன், நாயகி, நகைச்சுவையாளன், வில்லன் தந்தை, உறவுகள் போன்ற பாத்திரங்களும் இயல்பாக உருவாகி ஒரு திரைக்கதையாயிற்று. இதனால் இந்த சீசனுக்கு முன்னெப்போதும் இல்லாத வரவேற்பு உண்டாயிற்று.

இது போன்ற நிகழ்ச்சிகளின் பிரதான நுகர்வு ஆதாரமாக விளங்கும் இளைஞர் தலைமுறையினர் இந்நிகழ்ச்சியை கொண்டாடுவதற்கும் இதுவே காரணம். இந்தக் கொண்டாட்டங்களே இந்நிகழ்ச்சியின் வணிக வெற்றி.

இந்த தொலைக்காட்சி குதூகலத்தின் மைய நிழலுருவாக இருக்கும் லோஸ்லியா வேறொரு நாட்டைச் சேர்ந்தவராக இருந்த போதும் அங்கிருக்கும் புதிய சூழலை ஆற்றலுடன் எதிர்கொள்ளும் விதம் பாராட்டுக்குரியது.

2007 ல் இங்கிலாந்து தொலைக்காட்சியின் பிக்பிரதர் நிகழ்ச்சியில் ஷில்பா செட்டி கலந்து கொண்டதற்கு சற்றும் குறைவில்லாத ஒப்பீடுகளைக் கொண்டிருக்கிறார் லோஸ்லியா.

தான் மிகுந்த பாரம்பரிய பின்னணி கொண்ட சமூகத்தின் பிரதிநிதியாக அந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பதை வலிமையாக ஜேட் கூடியிடமும் ஏனைய போட்டியாளர்களிடமும் சிரித்த முகத்துடன் எடுத்துரைத்தார் ஷில்பா செட்டி.

அவரது முதிர்ச்சியான அணுகுமுறைகளே பார்வையாளர்களைக் கவர்ந்து டைட்டிலை வெல்வதற்கும் காரணமாயிற்று.

இம்முறை லோஸ்லியாவும் அது போன்ற சவால்களுடன்தான் பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியிடுகிறார் என்ற பின்னோக்கிய பார்வைகள் வழியே அவதானிக்கையில் டைட்டிலை யார் வெல்வார் என்பதை நாம் அனுமானிக்க முடியும்.