கோட்டாபய – மஹிந்த தொடர்பில் பரபரப்பை ஏற்படுத்திய மொடல் அழகி

கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் கொலைச் சம்பவங்களுக்கு நானே சிறந்த சாட்சியாளரென நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஹிருணிகா பிரேமசந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “எனது தந்தையை துமிந்த சில்வா கொலை செய்தது உண்மையாகும்.

ஆனால், அவரை சட்டத்திலிருந்து காப்பாற்றி பாதுகாப்பளித்தது கோட்டாபய ராஜபக்ஷதான்.

கடந்த 2011 ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தின்போது, அதாவது, 2011, ஒக்டோபர் 6 ஆம் திகதியன்று எனது தந்தை இவ்வாறானதொரு கருத்தை முன்வைத்தார். கொலன்னாவை என்பது எனது ஊராகும். இப்படியான எமது ஊரில் பல்வேறு நாசகாரிய வேலைகள் இடம்பெற்றன.

விபசார விடுதிகள் மட்டும் 500 இற்கும் அதிகமாக இருந்தன. போதைப்பொருள் வர்த்தகம் அதிகமாக காணப்பட்டது. யுத்தமொன்றை நிறைவுக்கு கொண்டுவர உதவிய கோட்டா போன்றோர், போதைப்பொருள் வர்த்தகர்களான துமிந்த சில்வா போன்றோரின் வீடுகளுக்கு பிரசாரத்திற்காக செல்கிறார் என்று எனது தந்தை அன்று வெளிப்படையாகக் கூறியிருந்தார்.

2011, ஒக்டோபர் 7ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா அனைவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும்போது, அங்கு வருகைத் தந்த கோட்டாபய ராஜபக்ஷ. எனது தந்தை அதிகமாக சத்தமிடுகிறார் என்று கடும் தொனியில் கூறியுள்ளார்.

இதனையடுத்து, மேர்வின் சில்வா எனது தந்தைக்கு தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு நடந்தவற்றைக் கூறினார். அப்போதும் எனது தந்தை அதனை கணக்கில் எடுக்கவில்லை.

ஆனால், 2011, ஒக்டோபர் 8 ஆம் திகதி மதியம் 3 மணியளவில் எனது தந்தையை இவர்கள் கொலை செய்கிறார்கள். இந்த சம்பவங்கள் அனைத்துக்கும் தொடர்புள்ளது.

இது என்னால் புனையப்பட்ட ஒரு கதையல்ல. குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் மேர்வின் சில்வா வழங்கிய இரகசிய வாக்குமூலத்தில் கூட இவை கூறப்பட்டுள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.