சனியோடு கூட்டணி சேரப்போகும் செவ்வாயால் காத்திருக்கும் மிக பெரிய ஆபத்து? ஆட்டிப்படைக்கும் உக்கிர சனி…. விபரீத ராஜயோகம் யாருக்கு ?

செவ்வாய் சனி கிரகங்களின் சேர்க்கை உலகில் போர்க்களத்தை உருவாக்கும் என்று ஜோதிடர்கள் எச்சரிக்கின்றனர்.

செவ்வாய்க்கு மார்ஸ் என்று பெயர் வைத்ததற்கு காரணம், மார்ஸ் என்பது போர்க்கடவுளின் பெயர். செவ்வாய் கிரகத்திற்கு அடுத்தப்படியாக மிகமிக முக்கியமான கிரகம் சனி.

ஈஸ்வரனையும் விடாததால் சனிஸ்வரர் என்று சிறப்பு பெயரை பெற்றவர் சனி பகவான். பல தலைமுறைக்கும் சொத்துகளை வாரி வாரி வழங்கும் கிரகம் சனி. செவ்வாய்-சனி மட்டும் ஒன்றாக இணைந்திருக்கும் போது அவை ஒரு ஜாதகருக்கு எந்த இடத்தில் அமைந்திருக்கிறதோ அந்த பாவத்தை பலவீனப்படுத்துகிறது.

மார்ச் 22 ஆம் தேதி முதல் செவ்வாய் பகவான் மகரம் ராசியில் சனியோடு இணையப்போகிறார். இந்த கிரகங்களின் கூட்டணியால் பொதுமக்களின் போராட்டம் இனி அதிகரிக்கும். மின்சாரத் துறை, காவல் துறை பாதிக்கப்படும். அரசியல் கட்சிகள் இடையே கட்சிகள் அணி மாறுவதும் கூட்டணியில் சில சிக்கல்களும் ஏற்படும் என்கின்றனர் ஜோதிடர்கள்.

ஜோதிட சாஸ்திரத்திலேயே இந்த இரண்டு கிரகங்களின் கூட்டணிதான் மிகவும் சிக்கலானது, சவால்கள் நிறைந்தது ஆபத்தானதும் கூட. சனி செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்களும் எந்த வீட்டில் எந்த ராசியில் கூட்டணியாக இருந்தாலும் ஆபத்தானது என்கிறது ஜோதிட நூல்கள்.

இவை இரண்டும் சேருவது, பார்ப்பது அந்த வீட்டிற்கு சிக்கலை ஏற்படுத்தும். நந்தி வாக்கியம், பிருஹத் ஜாதகம், உத்தரகாலாமிர்தம் போன்ற ஜோதிட நூல்கள் சனி செவ்வாய் சேர்க்கை மற்றும் பார்வை பற்றி பலவித விளக்கங்களை கூறியுள்ளன.

புராதன யுத்தக் கடவுள் என செவ்வாயைப் போற்றி வணங்குகிறார். செவ்வாய் கிரகத்துக்கு சுய ஒளி கிடையாது. சூரிய ஒளியையே பெற்று பிரதிபலிக்கிறது.

தீயுள்ள இடங்கள், தீயினால் இயக்கப்படும் எந்திரங்கள். மற்றுமுள்ள சாதனங்கள், கொல்லன் பட்டறை, எந்திரக் கருவிகள், ஆயுதக் கிடங்குகள், சூளை, கொலை நடக்குமிடம், போர் மைதானம், போர்ப் பயிற்சிப் பள்ளிகள், பொறியியல் கூடங்கள், அறுவை சிகிச்சை செய்யும் இடங்கள் செவ்வாய் கிரகத்தின் வாசஸ்தலமாகும்.
செவ்வாய் ரத்தக்காரகன், சகோதர காரகன், வீரதைரியகாரகன், நவக்கிரக பரிபாலனத்தில் சேனாதிபதி என்ற பட்டத்தை பெற்றவர். பன்னிரண்டு ராசிகளில் முதல் வீடான மேஷமும் அதற்கு எட்டாமிடமான விருச்சிகமும் செவ்வாய் ஆட்சி பெறும் ஸ்தானங்களாகும்.

இருபத்தேழு நட்சத்திரங்களில் மிருக சீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்றும் செவ்வாய் உரியன. செவ்வாய் முருகப்பெருமானை தனது அதிதேவதையாக கொண்டவர். செண்பக மலர் இவருக்கு உகந்த மலர்.

துவரை இவருக்கு மிகவும் பிடித்த தானியம். செவ்வாய்க்கு துவர்ப்புச் சுவை பிடிக்கும். செம்பு, உலோகம் செவ்வாயின் உலோகம். செந்நிற ஆடையையே செவ்வாய் பகவான் விரும்பி அணிவார். நவரத்தினங்களில் இவருக்கு உரியது பவளம் ஆகும்.

மகரத்தில் கிரகங்கள் கூட்டணி
செவ்வாய் இப்போது தனுசு ராசியில் இருக்கிறார். ஒரு மாதத்தில் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு மாறுகிறார். மகரம் ராசியில் சனிபகவான் சஞ்சரிப்பதால் இந்த கூட்டணியால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு. இந்தியா மகரம் ராசிக்கு உட்பட்ட நிலப்பகுதி. ஏற்கனவே இந்தியாவில் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. இந்த கிரகங்களின் சேர்க்கையால் போராட்டங்கள் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது.

வேகம், விரைந்து முடிவெடுத்தல், தன் சுதந்திரத்தில் யாரும் தலையிடக் கூடாது என்று நினைத்தல், முரட்டுத்தனம். இவையெல்லாம் செவ்வாய் தரும் குணங்கள். இதற்கு எதிர்மாறான தன்மைகளைக் கொண்டிருக்கும் கிரகம். செவ்வாய் வேகமாகப் பேசி விரைந்து முடிக்கும் கிரகமென்றால், சனி எதிரே இருப்பவரின் பொறுமையைச் சோதிக்கும் அளவிற்கு நிதானம் தரும் கிரகம். மந்தமாக போகும்.

செவ்வாய் சனி ஆதிக்கம் ஆயுட்காரகன் சனி என்றால், ஆரோக்யகாரகன் செவ்வாய். அதர்மத்தையும் தாங்கிக் கொள்ளுமளவுக்கு சகிப்புத்தன்மைக்குரியவர் சனி என்றால், தர்மத்தைக் காக்க அதர்மத்தை வேரோடு பெயர்க்கும் கிரகமே செவ்வாய்.செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்கள் எரிமலை போல வேகமாக வெளிப்படுத்துவார்கள். அணுகுண்டே வெடிச்சாலும் எதுவும் நடக்காதது போல ஆகாயம் பார்த்தபடி இருப்பவர்களே சனி ஆதிக்கமுள்ளவர்கள்.

என்ன பாதிப்பு வரும்
இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் மனதில் மட்டுமல்லாமல் உடலிலும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக பெண்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து எந்த வீட்டில் செவ்வாயும் சனியும் சேர்ந்திருந்தாலும், சமசப்தமாய் பார்த்துக் கொண்டாலும் பூப்பெய்துதலிலிருந்து பிரச்னைகள் தொடங்கும். மாதவிடாய்க் கோளாறு, தைராய்டு பிரச்னை, கர்ப்பப்பையில் நீர்க்கட்டி, அல்சர், நீண்ட வறட்டு இருமல், ஹீமோக்ளோபின் குறைதல், சிறுநீரகக் கோளாறு, முகத்தில் கண்ணுக்குக் கீழ் மேல் கன்னப் பகுதியில் கருநீலத் திட்டுகள் உருவாதல் என பல பிரச்னைகள் அடிக்கடி ஏற்படும்.

குரு சேர்க்கையால் பலம்
ஜாதகத்தில் செவ்வாய் சனி கூட்டணி இருந்தாலும் சுக்கிரன் பலமாக இருக்கும் பட்சத்தில், குரு போன்ற சுப கிரகங்கள் தொடர்பு கொள்ளும் போதும் பாதிப்புகள் ஏற்படாது. இந்த கூட்டணி சேர்ந்து சில தினங்களில் குரு அதிசாரமாக மகரம் ராசியில் சென்று நீச பங்க ராஜயோக அமைப்பை பெறப்போகிறார்.

இதனால் போராட்டங்கள் கட்டுப்படும் பாதிப்புகள் குறையும்.

பரிகாரம்
ஜாதகத்தில் செவ்வாய்-சனி சேர்க்கையினால் ஏற்படும் பாதிப்புக்கு முருகப்பெருமானையும், விநாயகரையும், மகா விஷ்ணுவையும் வணங்க வேண்டும். செவ்வாய்கிழமைகளில் கந்த சஷ்டி கவசம் படிக்கலாம் இதன்மூலம் செவ்வாய்-சனி சேர்க்கையால் உண்டாக்கக்கூடிய பாதிப்புகள் கட்டுப்படும். ஜாதகத்தில் செவ்வாய்-சனி சேர்க்கை பெற்றவர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் முருகப் பெருமானையும், ஸ்ரீமன் நாராயணனையும் வழிபட்டு வர வேண்டும்.