இதுல ஏதாவது ஒரு பழக்கம் உங்களுக்கு இருக்கின்றதா? அப்போ கொரோனா வேகமாக தாக்குமாம்! ஜாக்கிரதை

தற்போது உலகம் முழுவதும் பேசப்படும் ஒரு முக்கியமான பேச்சாக இருப்பது என்றால் அது கொரோனா வைரஸ் பரவல் குறித்து தான். சீனாவில் இருந்து உலகின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பரவி, பீதியைக் கிளப்பியுள்ளது. தற்போது இந்தியாவில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா வைரஸின் தாக்கத்தால் உயிரிழந்தோரைப் பார்த்தால், அது பலவீனமாக இருக்கும் முதியவர்களாகத் தான் இருக்கும்.

ஏனெனில் இந்த வைரஸ் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பைக் கொண்டவர்களைத் தான் விரைவில் தாக்குகிறது. எனவே கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க நினைத்தால், நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை அதிகரிக்க வேண்டும். பொதுவாக ஒருவரது நோயெதிர்ப்பு சக்தி ஒருசில பழக்கங்கள் மற்றும் வழிகளால் பலவீனமடைகிறது. அதைத் தெரிந்து திருத்திக் கொண்டால், வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வாய்ப்புள்ளது.

இப்போது ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும் பழக்கங்கள் எவையென்று காண்போம். அதைப் படித்து தெரிந்து அப்பழக்கத்தை உடனே மாற்றிக் கொள்ளுங்கள்.

மன அழுத்தம்
இன்று மன அழுத்தத்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலத்தில் பெரிய தாக்கத்தை மன அழுத்தம் ஏற்படுத்தும். அதுவும் நாள்பட்ட மன அழுத்தத்தைக் கொண்டிருந்தால், அது உடலில் கார்டிசோல் அளவை அதிகரித்து, ‘நல்ல’ புரோஸ்டாக்லாண்டின்களின் உற்பத்தியைக் குறைக்கிறது.

புரோஸ்டாக்லாண்டின்கள் என்பவை செல்லுலார் மெசஞ்சர்கள் போன்ற உள்ளூர்மயமாக்கப்பட்ட ஹார்மோன் ஆகும். இவை நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்கின்றன, இரத்த நாளங்களை நீர்த்துப்போகச் செய்கின்றன, ‘தடிமனான’ இரத்தத்தைத் தடுக்கின்றன மற்றும் அழற்சி எதிர்ப்புத் தன்மை கொண்டவை. எனவே நீங்கள் மன அழுத்தத்தில் இருப்பது போன்று உணர்ந்தால், உடனே அதைப் போக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள். அதுவும் யோகா, தியானம், குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுங்கள்.

மோசமான உணவுப் பழக்கம் அல்லது டயட்
அதிகம் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பூச்சிக்கொல்லிகள், கெமிக்கல்கள், செயற்கை சுவையூட்டிகள் மற்றும் பதப்படுத்தும் பொருட்கள் போன்ற நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும் உட்பொருட்கள் இருக்கும். இப்படிப்பட்ட மோசமான உணவுகளை ஒருவர் அடிக்கடி உட்கொண்டு வந்தால், அது பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு வழிவகுத்து, அடிக்கடி நோய்வாய்ப்படச் செய்யும்.

தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால், முடிந்தவரை வீட்டிலேயே ஆரோக்கியமான உணவை சமைத்து சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். மேலும் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்து வாருங்கள்.

அதிகமாக மது அருந்துவது
சர்க்கரையைப் போன்றே ஆல்கஹாலையும் அதிகமாக உட்கொண்டால், அது உடலைத் தாக்கும் கிருமிகளை அழிக்கும் இரத்த வெள்ளையணுக்களின் திறனை குறைத்து, நோயெதிர்ப்பு சக்தியை பலவீனமாக்கிவிடும். எனவே உங்களுக்கு மது பழக்கம் இருப்பின், அப்பழக்கத்தை முடிந்தவரை கைவிட முயற்சி செய்யுங்கள்.

போதிய தூக்கம் இல்லாமை
போதுமான தூக்கம் ஒருவருக்கு இல்லாவிட்டால், அது நோயெதிர்ப்பு மண்டலம் மீண்டும் கட்டமைப்பதற்கான வாய்ப்பு கிடைக்காமல், பலவீனமாவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். மோசமான தூக்க பழக்கத்தைக் கொண்டவர்களின் உடலில் T-செல்கள் மற்றும் இரத்த வெள்ளையணுக்களின் அளவு குறைந்து, நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாகிவிடும். இதன் விளைவாக அடிக்கடி நோய்வாய்ப்படக்கூடும்.

உடல் பருமன்
உடல் பருமன் பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு வழிவகுக்கும். அதுவும் இது இரத்த வெள்ளையணுக்கள் பெருகும் திறனை பாதித்து, ஆன்டிபாடிகளின் உற்பத்தியைக் குறைத்து, அழற்சி ஏற்படுவதை அதிகரித்துவிடும். ஆகவே உங்கள் உடல் எடையை எப்போதும் சரியான அளவில் பராமரித்து வர முயற்சி செய்யுங்கள். இதுவே உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும்.

உடற்பயிற்சியின்மை
மிதமான அளவில் உடற்பயிற்சி செய்யும் போது, உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, உடலில் உள்ள அதிகப்படியான நச்சுக்களை வெளியேற்றும் செயல்பாடு ஊக்குவிக்கப்படும். உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருந்தால், கிருமிகளை எதிர்த்துப் போராடுவதற்கு முக்கியமான இரத்த வெள்ளையணுக்கள் மற்றும் ஆன்டி-பாடிகளின் சுழற்சி ஊக்குவிக்கப்படும்.

ஒருவர் உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால், இந்த செயல்கள் தடைப்படும். ஆய்வு ஒன்றில், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பவர்கள் ஒரு மாதத்திற்கு இரண்டு முறையாவது உடல்நல குறைவால் பாதிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. எனவே தினமும் குறைந்தது 20 நிமிடம் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

மருந்துகள்
சில பரிந்துரைக்கப்பட்ட மற்றும் பரிந்துரைக்கப்படாத மருந்துகள், உடலில் நச்சுக்களின் அளவை அதிகரித்துவிடுவதோடு, அதிகமாக பயன்படுத்தும் போது, உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பலவீனமாக்கும். அதுவும் அளவுக்கு அதிகமாக ஆன்டிபயாடிக்குகளை எடுத்தால், அது சளி மற்றும் இருமலுக்கான மருந்துகளை எதிர்த்துப் போராடி, நோயெதிர்ப்பு மண்டலத்தை பலீவனப்படுத்திவிடும். ஆகவே அதிகளவு ஆன்டி-பயாடிக்குகளை எடுப்பதைத் தவிர்த்திடுங்கள்.

சுகாதாரமின்மை
போதுமான சுகாதாரமின்மை உடலைத் தாக்கும் கிருமிகளின் அளவை அதிகரித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கிவிடும். எனவே தினமும் இரண்டு முறை பற்களைத் துலக்குவது, உணவு உண்பதற்கு முன் கைகளைக் கழுவுவது, நகங்களை அவ்வப்போது வெட்டுவது, தினமும் தவறாமல் குளிப்பது போன்ற அடிப்படை சுகாதாரப் பழக்கங்களை தவறாமல் பின்பற்றுங்கள்.

கதிரியக்க வெளிபாடு
அதிகப்படியான கெமிக்கல் வெளிபாடு, புறஊதாக் கதிர்கள் மற்றும் கதிரியக்க வெளிபாடுகள் நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பாதித்து பலவீனப்படுத்திவிடும். எனவே இந்த பழக்கத்தை உடனே தவிர்த்திடுங்கள்.

புகைப்பிடிப்பது
சிகரெட்டில் சுமார் 4000-த்திற்கும் அதிகமான கெமிக்கல்கள் உள்ளன. இவை அனைத்துமே உடலை மோசமாக பாதிக்கும் நச்சுப் பொருட்களாகும். ஒருவர் அதிகமாகவோ அல்லது ஒன்று இரண்டோ சிகரெட் பிடித்தாலும், அது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை தான் முதலில் பலவீனமாக்கும். மேலும் புகைப்பிடிப்போரின் அருகில் இருந்து, அந்த புகையை சுவாசித்தாலும், நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகும். எனவே இந்த பழக்கம் இருந்தால், உடனே கைவிடுங்கள்.

உடல் வறட்சி
உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாமல் இருந்தால், உடலில் நச்சுக்கள் ஆங்காங்கு தேங்கி, கிருமிகளை எதிர்த்துப் போராடும் நோயெதிர்ப்பு மண்டலத்தை தான் முதலில் பாதிக்கும். மேலும் உடலில் போதிய நீர்ச்சத்து இல்லாவிட்டால், அது ஆற்றலை பாதிப்பதோடு, பல அன்றாட செயல்பாடுகளையும் பாதிக்கும். எனவே தினமும் தவறாமல் போதுமான நீரைப் பருகும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். குறிப்பாக தாகம் எடுத்தால், உடனே தண்ணீரைக் குடியுங்கள். தாகம் தான் உடலில் நீர் குறைவாக இருப்பதை உணர்த்தும் அறிகுறி. எனவே கவனமாக இருங்கள்.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like