காற்றில் இருக்கும் சத்தை சேகரித்து கொடுக்கின்ற Azolla Plant பற்றிய அறிமுகம்

விலங்குகளின் உணவாக பயன்படுத்தப்படும் Azolla Plant (அசோலா) ஆரம்ப காலத்தில் நெற்பயிருக்கான தழைச்சத்து வளமாக்கியாக அறிமுகப்படுத்தப்பட்டது. தழைச்சத்து நெற்பயிரின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது ஆகும்.

இரசாயன வளமாக்கியில் கிடைத்த தழைச்சத்து விவசாயிகளுக்கு அதிக செலவு பிடிக்கக் கூடியதும், சூழலுக்கு மாசு விளைவிக்கக் கூடியதும் ஆகும். இந்த இரசாயன வளமாக்கியின் தவறான பயன்பாட்டை மட்டுப்படுத்தி, இயற்கையிலேயே நெல் வயல்களில் வளரக்கூடிய நுண்ணுயிர்கள் மூலமும், சில தாவரங்கள் மூலமும் தழைச்சத்து நெற்ப்பயிருக்கு கிடைக்கச் செய்ய அதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆய்வுகளின் இறுதியில் அசோலா (Azolla Pinnata) எனும் நீரில் மிதந்து வளரும் தாவரத்தை நெல் வயல்களின் தேங்கி நிற்கும் நீர்மேற்பரப்பில் நேரடியாக வளர்க்கலாம் என கண்டறியப்பட்டது. அசோலா நெல் வயல்களில் இருக்கும் தண்ணீரில் மிதந்து காற்றில் இருக்கும் தழைச்சத்தை சேகரித்து நெற்பயிருக்கு கொடுக்கின்றது.

பெரும்பாலும் நல்ல பச்சை நிறத்திலும், அபூர்வமாக லேசான பழுப்பு நிறத்தில் காணப்படும். அசோலாவின் இலைகளானது முக்கோன வடிவத்திலிருந்து பல கோண வடிவம் வரையும் இருக்கும். இந்த அசோலாவின் இலைகள் 1 cm முதல் 2.5 cm வரை விட்டமுடையவை.

இதன் வேர்கள் 2 cm முதல் 10 cm வரையில் நீளமுடையவை. இது சிறு இலைகளை உடைய மிதக்கும் தண்டைக் கொண்டது. தண்டின் இரண்டு பக்கங்களிலும் ஒன்றன் மீது ஒன்றாக இலைகள் மாற்று வரிசையில் அடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு இலையும் மேற்புறம், கீழ்புறம் என இரண்டு பாகங்களை உடையது.

இலைகளின் மேல்புறம் தழைச்சத்தை சேகரித்து பசுமையாக பச்சை நிறத்தில் இருக்கின்றது. கீழ்ப்புறம் பச்சையம் அற்றும் நீரில் அமிழ்ந்தும் காணப்படுகின்றது. இலையில் மேற்புறத்தின் உட்பகுதியில்தான் தழைச்சத்தை கிரகிக்கும் அனாபினா அசோலே (Anapena Azollae) எனும் நீலப் பச்சைப்பாசி காணப்படுகின்றது. இது தழைச்சத்தை (N) கிரகித்து அசோலாவிற்கு அளிக்கிறது.

அசோலா அதிக அலைகள் இல்லாத, அதிக நீரோட்ட வேகம் இல்லாத அமைதியான நீர் நிலைகளில் வளரக் கூடிய இயல்புடையவை. குளங்கள், சிறு ஓடைகள், நெல் வயல்கள் ஆகிய இடங்களில் வளரக்கூடிய அசோலா மிதக்கும் வகைத் தாவரம்தான் என்ற போதிலும் வயலில் சேற்றுடன் கலந்த மண் பரப்பிலும் வளரும் தன்மையுடையது.

அசோலாவில் உள்ள வகைகள்.

  1. அசோலா பின்னேட்டா
  2. அசோலா மெக்சிகானா
  3. அசோலா பிலிக்குலாய்டஸ்
  4. அசோலா கரோலினியானா
  5. அசோலா மைக்ரோபில்லா
  6. அசோலா நைலோட்டிகா

பரவலாக காணப்படுவது அசோலா பின்னேட்டா வகைத்தாவரம். இந்த வகை அதிக தழைச்சத்தைக் (N) கிரகித்து அதிக வெப்பநிலையைத் தாங்கி நன்கு வளரும் இயல்புடையது.
அசோலா பிலிக்குலாய்டஸ் எனும் ரகம் 10-15 செமீ ஆழமாக வேர்விட்டு மண்ணில் சத்துக்களை உறிஞ்சிக் கொடுக்கும்.

அசோலாவில் என்னென்ன சத்துக்கள் உள்ளன

  • 21 – 24 % புரதச்சத்து (Crude Protein)
  • 9 – 21 % நார்ச்சத்து (Crude Fibre)
  • 2.5 – 3 % கொழுப்பு (Ether Extract)
  • 10 – 12 % சாம்பல் (Ash)
  • 1.96 – 5.30 % தழைச்சத்து N
  • 0.16 – 1.59 % மணிச்சத்து P
  • 0.31 – 5.9 % சாம்பல் சத்து K
  • 0.45 – 1.70 % சுண்ணாம்புச் சத்து
  • 0.22 – 0.73 % கந்தகச் சத்து
  • 0.22 – 0.66 % மெக்னீசியம்
  • 0.04 – 0.59 % இரும்புச் சத்து