நோயாளியாக்கும் ஏ.சி.கள்?

நகரமயமாக் கல்மற்றும் காலநிலை மாற்றங்களினால் இன்று அலுவலகங்கள், வாகனங்கள், வீடுகளில் ஏ.சி.க்கள் (Air Conditioner) என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. ஆனால் இந்த ஏ.சி.க்கள் தொடர்பில் மக்களிடம் இருவேறுபட்ட நிலைப்பாடுகள் உள்ளன. அதாவது ஏ.சி.யை விரும்புவோர் இருக்கும் அதேயளவுக்கு அதனை விரும்பாதோரும் இருக்கின்றனர்.
அவர்களின் குற்றச்சாட்டு பல்வேறு நோய்களுக்கும் ஏ.சி. மூலகாரணம் என்பதுதான். இதுவே பெரும்பாலும் உண்மையாகவும் உள்ள நிலையில் ஏ.சி. முறையாகப் பயன்படுத்தினால் அதனால் நன்மைகளே அதிகம் என்று கூறுவோரும் உண்டு . அது தொடர்பிலேயே இக்கட்டுரை ஆராய்கின்றது.
ஓசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டுவிட்டதால் நாளுக்கு நாள் சூரியக்கதிர்களின் தாக்கம் அதிகரித்து அனைவரையும் வாட்டி வதைக்கிறது. அதிலும் கோடைகாலத்தில் என்றால் சொல்லவே வேண்டாம். அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுவோம். அந்த அளவில் வெளியே அனல் பறந்து கொண்டிருக்கின்றது. ஆகவே பலர் தங்கள் வீடுகளில் ஏ.சி.க்களை அமைத்து வீட்டின் சுற்றுச்சூழலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்கின்றனர். அதுமட்டுமின்றி தற்போது பெரும்பாலான அலுவலகங்களில் ஏ.சி.க்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இப்படி நாள் முழுவதும் ஏ.சி.யில் இருந்தாலும் நன்கு குளிர்ச்சியாக இருந்தாலும் அதனால் பல ஆரோக்கியப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பது தெரியுமா?
ஏ.சி.யினால் நல்ல குளிர்ச்சி கிடைத்தாலும் அதனால் பல பிரச்சினைகளை நாம் சந்திப்போம். இங்கு எப்போதும் ஏ.சி.யிலேயே இருப்பதால் சந்திக்ககூடிய ஆரோக்கியப் பிரச்சினைகளை பார்ப்போம் அதைப் படித்துப் பார்த்து ஏ.சி.யில் அதிகம் இருப்பதைத் தவிர்த்து கொஞ்சம் இயற்கைக் காற்றினையும் சுவாசித்து வாருங்கள்.
ஏ.சி.யில் இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சினைகளில் ஒன்று தான் நுரையீரல் பாதிப்பு .ஏனெனில் திடீரென்று வெப்பநிலை மாறுவதால் அது நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும்.
அதிக நேரம் ஏ.சி.யில் இருந்தால் அது சருமத்தில் வறட்சியை ஏற்படுத்துவதுடன், சளி சவ்வுகளிலும் வறட்சியை ஏற்படுத்தி விடும்.
மற்றொரு பிரச்சினை என்றால் சுத்தமான காற்றினை சுவாசிக்க முடியாமல் போவதுடன் மிகவும் குறைவான காற்று சுழற்சியினால் சுவாசக் கோளாறுகள் ஏற்படும்.
ஏ.சி. அறையில் சுற்றும் காற்றில் தூசிகள் மற்றும் பூஞ்சைகள் இருப்பதால் அவை அலர்ஜிகளை ஏற்படுத்தி தும்மலை அதிகரிக்கும்.
ஏ.சி.யினால் சருமத்தில் மட்டுமின்றி தொண்டையிலும் அரிப்புடன் கூடிய எரிச்சல்கள் ஏற்படக்கூடும்.
ஒரே அறையில் காற்றானது அடைக்கப்பட்டிருப்பதால் ஒருவருக்கு சளி வந்தால் அது மற்றவரை எளிதில் தொற்றக்கூடும் அதிலும் வைரஸ் தொற்றுக்கள் ஏ.சி. அறையில் எளிதில் பரவக்கூடும்.
ஏ.சி.யினால் விழி வெண்படல அழற்சி மற்றும் கண் இமை அழற்சிகள் ஏற்படக்கூடும். அதிலும் காண்டாக்ட் லென்ஸ் அணிந்திருப்பவர்களுக்கும் இத்தகைய அழற்சி ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
ஏ.சி.யிலேயே அதிக நேரம் இருப்பவர்களால் வெயிலில் சிறிது நேரம் கூட இருக்க முடியாது. அப்படி இருந்தால் சருமத்தில் எரிச்சல் ஏற்படுவதுடன், அதிகமாக வியர்க்கவும் செய்யும். அதுமட்டுமின்றி விற்றமின் டி குறைபாடுகள் கூட ஏற்படும் வாய்ப்புள்ளது.
எப்போதும் சோர்வுடன் இருப்பது போல் உள்ளதா? அப்படியானால் அதற்கு காரணம் ஏ.சி. தான். இப்படி அடிக்கடி சோர்வு மற்றும் கடுமையான தலைவலி வந்தால் அதற்கு முக்கிய காரணம் 24 மணிநேரமும் ஏ.சி.யில் இருப்பதுதான்.
அதேபோல் சருமம் அழகாகவும் பளபளப்பாகவும் இருந்தால் யாருக்குத்தான் பிடிக்காது. அப்படி சருமத்தை நன்றாக பாதுகாக்க விற்றமின் டி உதவுகிறது. அந்த விட்ற்றமின் டி எதிலெல்லாம் கிடைக்கிறது என்றால் “சூரியப்பிரகாச விற்றமின்’ என்றும் அறியப்படுகின்றது. சூரியனின் உதவியுடன் உங்கள் உடல் விற்றமின் டி யை உருவாக்க முடியும்.
கோடை காலத்தில் சன்ஸ்கிரிம் உபயோகிக்காமல் பத்து முதல் 15 நிமிடங்கள் சூரியவெளிச்சத்திலிருந்தால் உங்களுக்குத் தேவையான விட்டமின் டி சூரியனிலிருந்து கிடைக்கும் மற்றும் பால், முட்டையின் மஞ்சள் கரு போன்றவைகளிலிருந்தும் பெறப்படுகிறது.
வெளிநாட்டவர்கள் சூரியக் குளியல் செய்வதை நாம் பார்த்திருப்போம். அதற்குக் காரணம் வெளிநாட்டில் சூரியன் எட்டிப்பார்ப்பது குறைவு.
நமக்கு அதன் அருமை தெரியவில்லை என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் எப்பொழுதும் ஏ.சி.யிலேயே இருப்பதுதான்.
தோல் சுருங்காமல் இருக்கவேண்டுமானால், வயது முதிர்வு சீக்கிரமாக தோன்றாமல் இருக்கவேண்டுமானால் தோலில் ஈரப்பதம் இருக்க வேண்டும்.
நாம் பார்த்திருப்போம் பனிக்காலங்களில் தோல்வறண்டு விடும். சொறிந்தால் வெள்ளை வெள்ளையாய் கோடுகள் ஏற்படும். தோலில் ஒரு வறட்சி ஏற்படும். உதடுகள் கூட வெடித்து விடும். இதற்குக் காரணம் தோலின் ஈரப்பதத்தை பனி உறிஞ்சி விடுவதுதான்.
அதேதான் ஏ.சி.யும் செய்கிறது. ரூம் டெம்பரேச்சரை ஏ.சி. உபயோகப்படுத்தும் அறையிலிருந்து உறிஞ்சி எடுத்துவிடுகிறது. அதோடு, நமது தோலிலிருந்தும் ஈரப்பதத்தையும் எடுத்துவிடுகிறது.
பலமணி நேரம் ஏசியில் இருந்தால் நமது உடலில் இருக்க வேண்டிய வெப்பம் கூடக் குறைகிறது. நீரிழிவு வியாதி இருப்பவர்களுக்கு ஏற்கனவே சருமம் வறட்சியாகத்தான் இருக்கும். இதிலே அவர்கள் ஏ.சி.யை உபயோகித்தால் யோசித்துப்பாருங்கள். 
இவ்வாறு நாம் சருமத்தை சரியாகப் பாதுகாக்காமல் அலட்சியமாக விட்டுவிட்டால் சருமத்தின் தோலின் அடிப்பகுதி வறண்டு விடும். வெண்மையான திட்டுக்கள் மற்றும் சொறிந்தால் செதில் செதிலாக உதிரும். கோடைகாலத்தில் அரை மணி நேரம் வெயிலில் நின்றால் சருமத்திற்கு தேவையான அளவு சத்து கிடைக்கும்.
ஆனால் நாம் அதையா செய்கிறோம் சன் ஸ்கிரீன் லோஷன் இல்லாமல் வெளியே போவதே கிடையாது. வீட்டிற்கு வந்தாலும் ஏ.சி. அறையில் தான்.
ஏ.சி.உபயோகம் சருமத்திற்கு மட்டுமல்ல தலைமுடிக்கும் நல்லதல்ல.
சீக்கிரமே வழுக்கை மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்சினைக்கும் ஒரு காரணம் ஏ.சி. உபயோகம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஏ.சி.யை அலுவலகத்தில் தவிர்க்கமுடியாது. குறைந்த பட்சம் வீட்டிலிருக்கும் போதாவது சற்று காற்றோட்டமான அறையில் அமரும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
வேண்டுமானால் கடுமையான கோடைகாலங்களில் வீட்டில் ஏ.சி. அறையை பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஆனால் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி சிகிச்சை நிபுணர் டாக்டர் செல்லக்குமார் இவ்வாறு கூறுகிறார்; 
“பொதுவாக ஏ.சி.என்றாலே குளிர்ச்சியானது, சளி பிடித்துக்கொள்ளும்,காய்ச்சல் வரும் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். உண்மையில் ஏ.சி.யைப் பயன்படுத்தும் விதமாக பயன்படுத்தினால் நன்மைகளே அதிகம். ஏ.சி. அறையின் ஈரப்பதத்தைக் குறைக்க உதவுவதோடு அதை சமநிலையில் வைக்கிறது. வெளிக்காற்றில் இருந்து நுண் கிருமிகள் அறைக்குள் வரவிடாமல் பரவவிடாமல் ஏ.சி தடுக்கிறது.
மேலும் அது காற்றில் உள்ள தூசி துகள்களை வடிகட்டி அறைக்குள் அனுப்புகிறது.
ஏ.சி.யை சரியாகப் பயன்படுத்தி அதிலுள்ள ஃபில்டரை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். அடிக்கடி என்பது அதில் எந்த அளவுக்கு தூசி துகள்கள் படிகிறது என்பதைப் பொறுத்து இருக்கிறது. 
வாகனங்கள் அதிகமாகச் செல்லும் பிரதான வீதியில் வீடு இருந்தால் காற்றில் புழுதி தூசிகள் அதிகம் இருக்கும். அப்போது ஃபில்டரில் தூசி அதிகம் சேரும். அதுபோன்ற இடங்களில் இருப்பவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை ஃபில்டரை சுத்தப்படுத்துவது அவசியம் ஓரளவுக்கு சுத்தமான காற்று வீசும் பகுதிகளில் வசிப்பவர்கள் சுமார் 20 நாள்களுக்கு ஒரு முறை ஃபில்ட்டர்களை சுத்தப்படுத்தினால் போதும்.
காற்றில் கலந்திருக்கும் கிருமிகளை வீட்டிற்குள் வர விடாமல் ஏ.சி.தடுப்பதால் காச நோய் தடுக்கப்படுகிறது. காற்றில் கலந்திருக்கும் மகரந்த தூள்களை அறைக்குள் வரவிடாமலும் ஏ.சி. தடுத்துவிடுகிறது. இதனால் மனிதர்களுக்கு ஏற்படும் அலர்ஜி, தும்மல் நீர்க்கோவை போன்றவற்றை தொடர்ந்து ஏற்படும். சைனஸ் பாதிப்பு தடுக்கப்படுகின்றது.
ஏ.சி. மூலமான அறையின் வெப்பநிலை 22 முதல் 25 சென்டி கிரேட்டுக்குள் இருப்பது நல்லது. அப்படி இருக்கும் பட்சத்தில் அலர்ஜி ஆஸ்துமா பாதிப்பு தடுக்கப்படும்.
கடும் குளிர்காலத்தில் புறவெப்பநிலை மைனஸ் டிகிரிக்கு குறைவாக இருக்கும். அப்போது முதியவர்கள் எல்லாம் ஆடிப்போவார்கள். அப்போது அவர்கள் மிதமான வெப்பநிலையில் ஏ.சி. அறைக்குள் இருந்தால் பாதிப்பு இருக்காது. 
மேலும் கோடையில் கடும் வெப்பத்தை வயதானவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. அப்போதும் மிதமான வெப்பநிலைக்கு கைகொடுப்பது ஏ.சி.தான் அதாவது வயதானவர்களுக்கு உடல் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்ள ஏ.சி.கைகொடுக்கிறது. நம்மில் பெரும்பாலானோர் ஃபில்டரை ஆண்டுக் கணக்காக சுத்தப்படுத்தாமல் வைத்திருக்கிறார்கள். 
இதனால் அறைக்குள் தேவையான அளவுக்கு குளிர்ச்சி இருக்காது. மேலும் நுண் கிருமிகள் ஃபில்டருக்குள் குவிந்திருப்பதால் சுவாசக் கோளாறு மற்றும் நிமோனியா காய்ச்சல் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.
வெயிலில் சென்றுவிட்டு சிலர் வீட்டுக்குள் வந்தவுடன் ஏ.சி. அறைக்குள் தஞ்சம் புகுவார்கள். இது உடலுக்கு நல்லது இல்லை. சற்று நேரம் சாதாரண வெப்பநிலையில் மின் விசிறி காற்றில் ஓய்வு எடுத்துவிட்டு அதன்பிறகு ஏ.சி. அறைக்குள் நுழைவதே சரியானது.
சிலர் ஏ.சி.யை மிகவும் கூட்டி மிகவும் குளிர்ச்சியாக வைத்திருப்பார்கள். இதனால் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி உருவாகவும் இந்தப் பாதிப்பு இருப்பவர்களுக்கு அதன் தீவிரம் அதிகரிக்கவும் கூடும். எனவே ஏ.சி. அறை எப்போதும் மிதமான வெப்பநிலையில் இருப்பதுதான் மனிதர்களின் உடல் நலனுக்கு நல்லது.
சிலர் அலுவலகம் ,கார், வீடு என 24 மணி நேரமும் ஏ.சி.யிலேயே இருந்து பழகி இருப்பார்கள். அது போன்றவர்களுக்கு ஏ.சி.இல்லை என்றால் எதையோ இழந்ததுபோல் இருக்கும். இதைத் தவிர்க்க இடையிடையே ஏ.சி. இல்லாத இடத்திலும் இருக்கப் பழகிக் கொள்வது நல்லது. மற்றப்படி ஏ.சி.யால் ஏற்படும் தீமைகளைவிட ஏ.சி.யால் ஏற்படும் நன்மைகளே அதிகம். எல்லாம் நாம் அதனைப் பயன்படுத்துவதில்தான் இருக்கிறது“ .

Get real time updates directly on you device, subscribe now.

You might also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More