சார்வரி வருடம் ஆனி மாதம் 7ஆம் தேதி ஜூன் 21ம் தேதி ராகு கிரகஸ்த சூரிய கிரகணம் நிகழப்போகிறது. இப்போது கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த சூழ்நிலையில் மிதுனம் ராசியில் நான்கு கிரக சேர்க்கையும் அப்போது நிகழப்போகும் சூரிய கிரகணமும் உலகத்தில் மீண்டும் ஒரு பேரழிவை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு காரணம் இப்போது வைரஸ் பரவலுக்கு காரணமே மிதுனம் ராசியில் உள்ள ராகுவும் அதை கேது பார்வையிடுவதும்தான் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
அதே ராசியில் நான்கு கிரகணங்கள் இணைவதோடு மட்டுமல்லாமல் மிருகஷீரிடம் திருவாதிரை நட்சத்திரங்களில் நிகழப்போகும் சூரிய கிரகணம் சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த கிரகண நேரத்தில் சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்.
கிரகணங்கள் வந்தாலே இப்போதெல்லாம் அச்சம் தான். காரணம் ஒரே ராசியில் நான்கு கிரகங்கள் கூடினாலே ஏதோ நடக்கப் போகிறது என்று சிலர் பயப்படுவார்கள். கடந்த 2019ம் தனுசு ராசியில் ஆறு கிரகங்கள் கூடியிருந்த போது நிகழ்ந்த கேது கிரகஸ்த சூரிய கிரகணம் மிக நீண்ட சூரிய கிரகணமாக இருந்தது.
நெருப்பு வளைய சூரிய கிரகணம் 3 மணிநேரம் வரை நீடித்தது. இந்த கிரகணத்தால் ஏற்பட்ட பாதிப்பை இன்னமும் உலக மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். கொரோனா வைரஸ் என்னும் கொடூர அரக்கனின் கரங்கங்களில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிக்கியுள்ளனர்.
லட்சக்கணக்கான மக்களின் உயிரை குடித்துள்ளது கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் என்பதுதான் உலக மக்களின் கேள்வியாக இருக்கிறது.
மிதுனம் ராசியில் கிரகங்கள்
சார்வரி வருடம் இப்போது பிறந்துள்ளது. கிரகங்கள் அனைத்தும் ராகு கேதுவின் பிடியின் சிக்கியுள்ளன. கால சர்ப்ப தோஷ அமைப்பில் உள்ளன கிரகங்கள். ஆனி மாதம் சூரியன் மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார். அப்போது அந்த ராசியில் ராகுவும் புதனும் சேர்ந்திருக்கின்றனர். ஆனி 7ஆம் தேதி முதல் சந்திரன் மிதுன ராசிக்கு வரும் போது சூரிய கிரகணம் நிகழ உள்ளது.
ராகு கிரகஸ்த சூரிய கிரகணம்
ராகு உடன் சூரியன் சந்திரன் சேர்ந்திருக்கும் போது நிகழும் இந்த சூரிய கிரகணம் ராகு கிரகஸ்த சூரிய கிரகணமாகும். மிதுனம் ராசியில் இந்த நான்கு கிரகங்கள் கூடியிருக்கும் போது கேதுவின் பார்வை கிடைக்கிறது.
இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியும். ஆறு கிரக சேர்க்கையின் போது ஏற்பட்ட சூரிய கிரகணத்தின் தாக்கமே இன்னமும் முடியவில்லை அதற்குள் இன்னொரு கிரகணமா என்று பயப்பட வேண்டாம். இது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான்.
ஞாயிறு கிழமை சூரிய கிரகணம்
இந்த ஆண்டு நிகழப்போகும் முதல் சூரிய கிரகணம் ஆனி 7ஆம் தேதி, 21-06-2020ம் நாள் ஞாயிறு கிழமை காலை 9.16 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3.03 மணிவரை நீடிக்கிறது. மிருகஷீடம், திருவாதிரை நட்சத்திரங்களில் இந்த சூரிய கிரகணம் நிகழப்போகிறது. இந்த கிரகணத்தை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பார்க்க முடியும். இதுவும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்தான்.
கிரகண தோஷம் யாருக்கு
ரோகிணி, மிருகஷீரிடம், திருவாதிரை, புனர்பூசம், சித்திரை, சுவாதி, அவிட்டம், சதயம், ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பரிகார சாந்தி செய்து கொள்ள வேண்டும். அதேபோல ஜூன் 20ம் தேதி தொடங்கி ஜூன் 23ம் தேதி வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த ஆண்டின் இறுதியில் டிசம்பர் 14ம் தேதி நிகழப்போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது என்பதால் பயப்பட வேண்டியதில்லை.
சந்திர கிரணம்
இந்த ஆண்டில் ஜூன் 5, ஜூலை 5, நவம்பர் 30ஆம் தேதி சந்திர கிரகணங்கள் நிகழ உள்ளன. இந்த சந்திர கிரகணங்கள் இந்தியாவில் தெரியாது. அமெரிக்கா, ஐரோப்பா, கிழக்காசிய நாடுகள், ஆஸ்திரேலியாவில் இந்த சந்திர கிரகணம் தெரியும்.
கொரோனா பாதிப்பு குறையுமா?
கடந்த டிசம்பர் இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இப்போது உலகம் முழுவதும் பரவி 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை பாதித்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளன. இந்த பாதிப்பினால் உலகமே முடங்கியுள்ளது. இந்த பாதிப்பு நீங்கி உலகம் இயல்பு நிலைக்கு எப்போது திரும்பும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நோய் பற்றிய அச்சம் உள்ள இந்த சூழ்நிலையில் இறை நம்பிக்கை உள்ளவர்கள் நமக்கும் மேல் உள்ள சக்தியை வேண்டிக்கொள்வதை தவிர வேறு வழியில்லை. பாதிப்பில் இருந்து உலக மக்கள் அனைவரும் மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் நேர்மறை எண்ணங்களுடன் நாட்களை நகர்த்துவோம்.