மாத்திரையுடன் வாழ வைக்கும் உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம் கண்டறியப்பட்டால் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிடுவது அவசியம். அதுபோன்ற சமயங்களில் டாக்டரின் ஆலோசனையின்றி மாத்திரைகளை மாற்றக் கூடாது.

குடும்பத்தில் ஒருவருக்கு உயர் அழுத்த பாதிப்பு இருந்தாலும் மற்றவர்களுக்கு பாதிப்பு வர வாய்ப்புள்ளது. உணவில் உப்பின் அளவை 50 சதவீதம் குறைப்பது நல்லது. உயர் இரத்த அழுத்த பாதிப்பு உள்ளோர் கவனிக்காமல் அலட்சியம் காட்டினால் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுவதோடு உயிரிழப்புக்கும் வழிவகுத்துவிடும்.
உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?
இரத்த அழுத்தம் 80/120 என்ற அளவில் இருப்பது இயல்பானது. இது 90/140 என்ற அளவில் அதிகரிப்பதை உயர் இரத்த அழுத்தம் என்கின்றோம். இது எதனால் ஏற்படுகிறது என்ற காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மரபு ரீதியாக குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால் மற்றவர்களுக்கு வரலாம். உடல் எடை கூடுதல், உடற்பயிற்சி செய்யாதிருத்தல், புகைப்பிடித்தல், மது அருந்துதலாலும் உயர் இரத்த அழுத்த பாதிப்பு வர வாய்ப்புள்ளது.
இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் என்ன?
காலையில் எழுந்ததும் தலைவலி இருக்கும். லேசான மயக்கம், தலை சுற்றல் இருப்பது இதன் அறிகுறிகள். இந்த அறிகுறிகள் இருந்தால் தான் உயர் இரத்த அழுத்தம் உள்ளது என்று அர்த்தம் இல்லை. எந்த அறிகுறிகளும் இல்லாமலும் இதன் பாதிப்புகள் இருக்கும். அதனால் இதை “சைலன்ட் கில்லர்’ என டாக்டர்கள் சொல்கின்றனர்.
உயர் இரத்த அழுத்தத்தால் எந்த மாதிரியான பாதிப்புகள் வரும்?
உயர் இரத்த அழுத்தத்தை கவனிக்காமல் விட்டால் இதய நோய்கள், சிறுநீரக கோளாறு, கண் பாதிப்பு, பக்கவாதம் மற்றும் மன அழுத்தம் சார்ந்த நோய் பாதிப்புகள் வரும். ஆரம்பத்தில் இரத்த அழுத்தத்தை கண்டறிந்து மருத்துவரின் ஆலோசனை பெற்று உரிய மாத்திரைகளை எடுத்துக் கொள்வது நல்லது. அலட்சியம் காட்டினால் பல்வேறு நோய் பாதிப்புகள் வந்து உயிரிழப்புக்கு வழிவகுத்துவிடும். மருத்துவமனை பக்கம் எதற்குச் சென்றாலும் இரத்த அழுத்த அளவை பார்த்துக் கொள்வது நல்லது.
வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டும் என்கின்றனரே?
உயர் இரத்த அழுத்தம் கண்டறியப்பட்டால் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிடுவது அவசியம். அதுபோன்ற சமயங்களில் டாக்டரின் ஆலோசனையின்றி மாத்திரைகளை மாற்றக்கூடாது. நமக்குத் தான் உடல் நலம் சரியாகிவிட்டதே என்று மாத்திரைகளை
சாப்பிடுவதை பாதியில் நிறுத்தினாலும் ஆபத்துவரும். அலட்சியம் வேண்டாம். இதில் விழிப்போடு இருக்க வேண்டும்.
இந்தப் பாதிப்பு கிராமப்புறத்தைக் காட்டிலும் நகர்ப்புறங்களில் அதிகமா?
சராசரியாக மூன்றில் ஒருவருக்கு இந்த பாதிப்புள்ளது. நம் நாட்டில் பரிசோதனை செய்தவர்களில் நகர்ப்புறங்களில் 23 சதவீதமாகவும் கிராமப்புறங்களில் 15 சதவீதமாகவும் பாதிப்புள்ளது. பாதிப்பே அறியாமல் நிறைய பேர் உள்ளனர். உயர் இரத்த அழுத்தம் பாதித்தோரில் ஐந்தில் ஒருவர் மட்டுமே உரிய சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர்.
குழந்தைகள், சிறார்களுக்கும் உயர் இரத்த அழுத்த பாதிப்பு வருமா?
குழந்தைகளுக்குக் கூட இரத்த அழுத்த பாதிப்பு வரலாம். சிறுநீரக பாதிப்பு, இரத்தக் குழாயில் அடைப்பு இருந்தாலும் பாதிப்பு வரும். 25 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இதுபோன்று பாதிப்பு இருந்தால் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இது இரண்டாம் வகையானது என்பதால் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் சரியாகிவிடும். வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டிய அவசியம் வராது.
மன அழுத்தமும் இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறதே?
மன அழுத்தத்தாலும் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. இயந்திர மயமான உலகில் மன அழுத்தம் ஏற்படுவது இயல்புதான். அதேநேரத்தில் வேலைப்பளுவுக்கு ஏற்ப ஓய்வு, நல்ல தூக்கம், யோகா, தியானத்தாலும் இந்த பாதிப்பைக் குறைக்கலாம்.
இந்த பாதிப்பில் இருந்து தப்ப என்ன தான் வழி?
சாப்பாடு சுவையாக இல்லை என்று உப்பின் அளவைக் கூட்டக் கூடாது. வழக்கமாக சாப்பிடும் உப்பில் 50 சதவீதத்தை குறைக்க வேண்டும். இது தவிர ஊறுகாய், அப்பளம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். காய்கறி, பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். அதற்காக உப்பின் அளவை மொத்தமாக குறைத்தால் சோடியம் அளவு குறைந்து அதனாலும் பாதிப்புகள் வர வாய்ப்புள்ளதால் கவனமாக இருப்பது நல்லது.
அளவான உணவு, உப்பின் அளவில் குறைப்பு, தேவைக்கேற்ப ஓய்வு, நல்ல தூக்கம், அளவான உடற்பயிற்சி இருந்தால் உயர் இரத்த அழுத்த பாதிப்பின் பிடியிலிருந்து தப்ப முடியும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like