பெண்களை அவதிப்படுத்தும் எண்டோ மெற்றியோசிஸ்

பெண்களுக்கு தாய் என்ற ஸ்தானத்தை வழங்கி பெருமை கொள்ள வைப்பதில் பெண்ணின் இனவிருத்தித் தொகுதியின் பங்களிப்பு அபரிதமானது.பத்து மாதங்கள் குழந்தை இந்த கர்ப்பப்பையினுள் வளர்ந்து முழு உருவம் பெற்று வரும் வரை பெண்ணின் கர்ப்பப்பையே அதன் வதிவிடமாகின்றது.
குழந்தையின் வளர்ச்சிக்கும் விருத்திக்கும் தேவையான அனைத்தும் தாயின் குருதிச் சுற்றிலிருந்து கர்ப்பப்பை சுவரில் பதிந்திருக்கும் தொப்புள்கொடி ஊடாக கிடைக்கிறது.
கருப்பை சுவரின் உட்புறம் அமைந்திருக்கும் இழையத்தை எண்டோமெற்றியம் (Endometrium) என்று அழைக்கிறோம். இதன் மேற்புறமே மாதாமாதம் விரிவடைந்து பின்னர் குழந்தை தரிக்காத போது மாதவிலக்காக வெளியேறுகிறது.
பெண் கருத்தரிக்கும் பட்சத்தில் கருவானது பலோப்பியன் குழாயிலிருந்து கீழ் இறங்கி கர்ப்பப்பைக்குள் வந்து அதன் சுவரிலுள்ள எண்டோமெற்றியத்தில் பதிகின்றது. பின்னர் தொப்புள்கொடியும் இங்கேயே உருவாகின்றது. மாதவிலக்கு ஏற்படாது.
கர்ப்பப்பையினுள் இருக்கும் இந்த முக்கியமான இழையம் போன்ற எண்டோ மெற்றிய இழையம், சிலவேளை கர்ப்பப்பைக்கு வெளியே தோன்றி இருப்பதுண்டு. இவ்வாறு ஏற்படும் பெண்கள் வயிற்று வலி, குருதிப்போக்கு, மகப் பேற்றின்மை முதலான பல உபாதைகளுக்கு உள்ளாவார்கள்.
இவ்வாறு எண்டோமெற்றியம் கர்ப்பப்பைக்கு வெளியே இருக்கும் நோய் நிலைமையையே எண்டோ மெற்றியோசிஸ் (Endometriosis) என்று அழைக்கின்றோம். இவ்வாறு சில பெண்களிலேயே ஏற்படுகிறது. இவர்களில் மாதாமாதம் மாதவிடாய் ஏற்படும் போது கடும் வயிற்று வலி ஏற்படும். இதற்குக் காரணம் வெளியேயுள்ள எண்டோமற்றிய இழையங்கள் வீக்கமுற்று (பெருத்து ) பின்னர் மாதவிலக்கு நாட்களில் சுருங்குதலே (Shed Off) ஆகும்.
இதன்போது மாதாமாதம் மாதவிடாய் ஏற்படும் போது கர்ப்பப்பைக்கு வெளியேயுள்ள எண்டோமெற்றியத்திலிருந்தும் குருதிக் கசிவு ஏற்படுகிறது. எனினும் இது வெளியேறுதல் சாத்தியம் அற்றதால், வெளியே இருக்கும் உறுப்புகளான பலோப்பியன் குழாய்கள், சூலகப் பகுதிகள் , குடல் பகுதிகள் என்பவற்றில் படிகிறது. இதனால் புள்ளி புள்ளி போன்ற வீக்கங்களுடன் அவை ஒன்றுடன் ஒன்று ஒட்டுப்படுகின்றன. (Adhesion) அவற்றின் தொழிற்பாடுகளும் குழப்பமடைகின்றன.
இதனால் வயிற்று வலி, சூலகத்தில் ஒழுங்கற்ற முட்டை வளர்ச்சியும் அவை வெளிப்படுத்தலில் தடங்கலும் ஏற்படலாம். பலோப்பியன் குழாயின் அடைப்பும் ஒழுங்கற்ற தொழிற்பாடும் சிலரில் ஏற்படலாம். எண்டோமெற்றியோசிஸ் உள்ள பெண்களில் குழந்தைப் பாக்கியம் தாமதமாகின்றது. எனினும் இந்த நோயின் பாதிப்பின் தன்மையைப் பொறுத்தே குழந்தைப் பாக்கியம் தடைப்படுகிறது.
இந் நோய் ஆரம்ப நிலை , இடைப்பட்ட நிலை, பிந்திய அதிக பாதிப்புள்ள நிலை என நோயின் தீவிரம் வேறுபடுகிது. பிந்திய நிலையில் உள்ளவர்களில் எண்டோமெற்றியோசினால் இதர உறுப்புகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டப்பட்டு சீராக தொழிற்படாத நிலையில் குழந்தை பாக்கியமின்றி இப் பெண்கள் ஏமாற்றம் அடைகிறார்கள். எனினும் இந் நோய்க்கு தீர்வு உண்டு. அபூர்வமாகவே சிகிச்சை வெற்றியளிக்காமல் குழந்தைப் பாக்கியம் வெற்றியடையாமல் இருக்கும்.
எண்டோ மெற்றியோசிஸ் நோயை லாப்பிரஸ்கோப்பி (Laprascopy) பரிசோதனை மூலம் உறுதிப்படுத்த முடியும். இதற்கான சிகிச்சையும் லாப்பிரஸ்கோப்பி முறையில் கருப்பைக்கு வெளியேயுள்ள எண்டோ மெற்றிய இழையங்களை அகற்றுதலே ஆகும். எண்டோமற்றியோஸின் விளைவாக பிந்திய மோசமான நிலையில் உள்ளவர்களில் ஒட்டுப்பட்ட (Adhesion) உறுப்புகளை ஒட்டுப்பட்டிருப்பதிலிருந்து விடுவித்து உங்கள் மகப்பேற்று மற்றும் பெண் நோய் வைத்திய நிபுணர் லாப்பிரஸ்கோப்பி சத்திர சிகிச்சை மூலம் தீர்வு காண்பார். இதை அடுத்து சில பெண்களில் கர்ப்பம் தரிப்பதுண்டு.
வேறு சிலரில் இதன் பின்னரும் குழந்தைப்பேறு தாமதமடைவதுண்டு. எண்டோ மெற்றியோசிஸ் நோயை ஆரம்பத்தில் இனங்கண்டு சிகிச்சை அளித்தால் வெற்றி நிச்சயம்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like