மாதவிடாய் நிற்கும் காலத்தில் எடை அதிகரிப்பதை தவிர்க்க முடியாதா?

“உங்கடை நிறை கூடிக்கொண்டு போகுது. அதைக் குறைக்க வேண்டும்’ என்றேன்.
“உங்களுக்குத் தெரியும்தானே டாக்டர். எனக்கு இந்த பீரியட் நிண்டாப் போலைதான் உடம்பு போட்டுட்டுது’ என்றார்.

அது ஏற்கனவே எனக்குத் தெரிந்ததுதான். குடும்ப மருத்துவர்களுக்கு இத்தகைய விடயங்களைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அது தெரிந்திருந்தும் அவரது எடையக் குறைப்பது அவசியம் என்பதை உணர்ந்ததாலேயே எடை குறைப்பு பற்றிப் பிரஸ்தாபித்தேன். அவர் சொன்னதிலும் உண்மை உள்ளதுதான். ஆனால் மாற்ற முடியாதது அல்ல.
பெரும்பாலன பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலங்களிலும் அதைத் தொடர்ந்து மாதவிடாய் முற்றாக நின்ற பின்னரும் எடை அதிகரிக்கவே செய்கிறது. இடை அழகியாக இருந்தவர்கள் சள்ளை தொங்கும் குண்டுப் பீப்பாய்களாக மாறுவார்கள். இடுப்பில் மட்டுமின்றி வயிறும் பெரிதாகும். அன்ன நடை நடந்த பெண்கள் ஆயாச நடையில் அரங்கி அரங்கி நடப்பார்கள்.
இது உங்களுக்கும் வரவேண்டுமா?
மாதவிடாய் பொதுவாக 50இற்கு சற்றுப் முன் பின்னராக நின்று போகிறது. 50 முதல் 59 வயதுவரையான பெண்களில் 30 சதவிகிதமானவர்களின் எடை அதிகரிக்கிறது. சாதாரணமான அதிகரிப்பு உள்ளவர்களாக (Over Wight) மட்டுமின்றி அதீத எடை (Obesity) உள்ளவர்களாகவும் அவ் வயதுப் பெண்கள் மாறுவது அவதானிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறாயின் மாதவிடாய் நின்ற பெண்களில் எடை அதிகரிப்பது நியதியா என்று கேட்டால். இல்லை என்றே சொல்லலாம். போஷாக்கான உணவு முறைகளையும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் கடைப்பிடித்தால் அந்நேரத்திலும் எடை அதிகரிப்பைத் தடுக்க முடியும்.
ஏன் அதிகரிக்கிறது?
மாதவிடாய் நிற்கும் போது பெண்களில் உடலிலுள்ள பெண் ஹோர்மோனான ஈஸ்ரோஜன் அளவுகளில் வீழ்ச்சி ஏற்படுகிறது. இந்த மாற்றமானது உடலின் இயக்கத்தின் வேகத்தைக் குறைத்து சோம்பலைக் கொண்டு வருவதுடன் அதிகமாக உண்ணவும் வைக்கிறது என எலிகளில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது. இது பெண்களுக்கும் ஏற்புடையதாக இருக்கலாம்.
அதேபோல ஈஸ்ரோஜன் அளவு குறையும்போது உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் (metabolic rate) தாழ்ச்சியுறுகிறதாம். மாதவிடாய் நின்ற பெண்களின் சில பிரச்சனைகளுக்காக ஈஸ்ரோஜன் மாத்திரைகளை மருந்தாகக் கொடுக்கும்போது அவர்களது உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அத்தகைய ஹோர்மோன் மாற்றம் ஏற்படும்போது உடலானது மாப்பொருளையும் குளுக்கோசையும் பயன்படுத்தும் ஆற்றல் குறைகிறது. இதனால் அவை உடலில் கொழுப்பாக சேமிக்கப்பட்டு எடை அதிகரிக்கிறது என்கிறார்கள்.
மாதவிடாய் நிற்கும் கால எடை அதிகரிப்பிற்கு ஹோர்மோன் மாற்றங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டபோதும் அது தவிர்ந்த வேறு பல காரணங்களும் இருக்கின்றன. வயதாகும்போது உடல் உழைப்புச் செயற்பாட்டிலும் வாழ்க்கை முறையிலும் ஏற்படும் மாற்றங்கள் முக்கியமானவை.
உதாரணமாக வயதாகும்போது தசைகளின் திணிவு குறைகிறது. அதே நேரம் அதிலுள்ள கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது. தசைத் திணிவு குறையும்போது அவற்றால் முன்னரைப் போல கலோரிச்சத்தை பயன்படுத்த முடிவதில்லை.
ஆனால் இவை தவிர்க்க முடியாத விடயங்கள் அல்ல. உட்கொள்ளும் உணவைச் சற்றுக் குறைத்து உடற் செயற்பாட்டை அதிகரிப்பதன் மூலம் எடை ஏறுவதை நிச்சயமாக் குறைத்துக் கொள்ள முடியும்.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால் இளவயதில் உட்கொண்டது போன்ற அளவுகளில் உணவுகளைத் தொடர்ந்து உட்கொண்டபடி உடலுக்குப் போதியளவு வேலையைக் கொடுக்கவிட்டால் எடை அதிகரிக்கவே செய்யும்.
பரம்பரை அம்சங்களும் அந்நேர எடை அதிகரிப்பிற்கு காரணமாகலாம். உதாரணமாக உங்கள் அம்மா அல்லது அப்பா தொந்தியும் சள்ளையுமான கொண்ட பருத்த உடல்வாகு உள்ளவரானால் நீங்களும் அவ்வாறு ஆவதற்கான சாத்தியம் அதிகமே.
மன உளைச்சல்களும் காரணமாகலாம். அந்த வயதில் பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரிய நேரலாம், கணவன் மரணமடையலாம், மணமுறிவு ஏற்படலாம். இத்தகைய சம்பவங்களால் மன உளைச்சல்கள் ஏற்படலாம்.
அதன் காரணமாக ஒருவர் தனது உணவு முறையில் அக்கறை செலுத்தாது விடுவார்கள். மனம் தளர்ந்து சுறுசுறுப்பாக இயங்காது சோர்ந்து கிடக்கவும் செய்வர். இவற்றால் எடை அதிகரிக்கும்.
60 சதவிகிதமானவர்கள் தங்கள் முதுமையில் போதுமான உடற்பயிற்சி செய்வதில்லை என அறிக்கைகள் கூறுகின்றன. தொடர்ந்து வயது அதிகரிக்கும்போது உடல் இயக்கத்தில் குறைபாடும் அதிகரிக்கிறது. இதைத் தவிர்த்து உள பூர்வமாக உடற் பயிற்சிகளில் ஈடுபடுவது அவசியமாகும்.
எடை அதிகரிப்பால் ஏற்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் எவை?
உடல் எடையானது தேவைக்கு அதிகமாக அதிகரிக்கும் போது உடலில் பல்வேறு சிக்கல்களும் நோய்களும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. பிரஸர் அதிகரிக்கும், நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியம் அதிகமாகும். மாரடைப்பு நோய்க்கான சாத்தியமும் அதிகமாகும். அதைபோல மூட்டு வருத்தங்களுக்கான சாத்தியம் அதிகரிக்கும். குண்டான பலர் முழங்கால் மூட்டில் தேய்வு, வீக்கம் என அவதிப்படுவதை நீங்களே அவதானித்திருப்பீர்கள்.
எடை அதிகரிப்பானது கொழுப்பு அதிகரிப்பதோடு தொடர்புடையதுதானே. இந்த கொழுப்பானது வயிற்றறைப் பகுதியில் அதிகமாகவே சேரும். அதனால் வயிறு பானைபோலாகும். வயிற்றறைச் சுற்றளவானது 35 அங்குலத்திற்கு அதிகமானால் அது மேலே கூறியது போன்ற பலவித ஆபத்துகளை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே. எனவே அதைத் தவிர்க்க வேண்டும்.
எடை அதிகரிப்பதைத் தடுப்பது எப்படி?
எடை அதிகரிப்பதைத் எடையைக் குறைப்பதற்கு மாயாஜால முறைகள் எதுவும் கிடையாது. மருத்துவர்கள் கிறுக்கித்தரும் மாத்திரைகளோ, ஊடகங்களில் விளம்பரப்படுத்தும் மருந்துகளோ, கிறீன் ரீயோ, கொள்ளுச் சாப்பிடுவது போன்றவையோ மட்டும் உதவப் போவதில்லை. உங்கள் முயற்சிதான் அதிமுக்கிய விடயாகும்.
1. சோர்ந்திருக்காதீர்கள்
கூடியவளவு உடல் உழைப்பில் ஈடுபடுங்கள். சோர்ந்து கிடக்காதீர்கள். நடந்தால் கால் உளைவு, கை உளைவு என்று சாட்டுச் சொல்லாதீர்கள். முயற்சியில் இறங்குங்கள். அந்த வயதிற்கு ஏற்றது நடைப் பயிற்சி. வாரத்தின் பெரும்பாலான நாட்களில் 30 நிமிடங்களுக்கு குறையாது கை, கால்களை விசுக்கி வீசி நடங்கள். துள்ளல் நடை, நீச்சல் பயிற்சிகளும் நல்லது. 
வீட்டுத் தோட்டம் செய்யுங்கள். மாடிப்படிகளில் ஏறி இறங்குங்கள். இவற்றைத் தவிர நாளாந்த வீட்டு வேலைகளிலும் ஈடுபடுங்கள். கூட்டுங்கள், கழுவுங்கள், தூசு தட்டுங்கள்.
2. உணவில் கவனம் எடுங்கள்.
சாப்பிடுங்கள், பட்டினி கிடக்காதீர்கள், உணவைத் தவிர்க்காதீர்கள். ஆனால் உணவின் அளவிலும் எத்தகை உணவு உண்பது என்பதிலும் மாற்றங்கள் செய்யுங்கள். எண்ணெய், பொரியல், கொழுப்பு போன்றவற்றை மிகவும் குறையுங்கள். சோறு, இடியப்பம் ,பிட்டு, பாண் போன்ற மாப்பொருள் உணவுகளை அளவோடு உண்ணுங்கள். அல்லது சற்றுக் குறையும். அதற்கான மொத்த உணவின் அளவைக் குறைக்க வேண்டியதில்லை. காய்கறிகள் பழவகைகளை அதிகம் சேருங்கள்.
3. கலோரி வலு
அதே போல அருந்தும் பானங்களும் அதிக கலோரி வலு அற்றதாக இருக்க வேண்டும். மென்பானங்கள், இனிப்பூட்டிய பழச் சாறுகள், போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். நாளாந்தம் அருந்தும் தேநீர், கோப்பி போன்றவற்றிக்கு சேர்க்கும் சீனியின் அளவையும் குறைப்பது அவசியமாகும்.
தண்ணீர், மோர், அதிகம் இனிப்பு சேர்க்காத உடன் பிழிந்த பழச்சாறுகள், இளநீர் போன்றவற்றை கூடியளவு உபயோகியுங்கள்.
இவற்றைக் கடைப்பிடித்தால் மாதவிடாய் நின்ற பின்னரும் மோகவைக்கும் குமரிபோல உங்கள் உடல் வனப்பைப் பேணிக்கொள்ளலாம்.