இதயநோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு தக்காளி மாத்திரை (Tomato Pill) எனும் புதிய மருந்து உதவுவதாக பிரித்தானிய விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளதாக பீ.பீ.சி. தெரிவித்துள்ளது.
இதயநோய்களைக் குணப்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சிகளை இந்த விஞ்ஞானி மேற்கொண்டிருந்தார். இதற்காக அந்த விஞ்ஞானி இதயநோயுள்ள இளம்பராயத்தினர் 72 பேரைத் தேர்ந்தெடுத்து. அவர்களுக்கு சாதாரண மாத்திரைகளையும், தக்காளி மாத்திரைகளையும் வழங்கியுள்ளார்.
இந்த ஆராய்ச்சியின் முடிவின்படி சாதாரண மாத்திரை உட்கொள்வதைவிட தக்காளி மாத்திரை உட்கொள்ளும்போது இதய நோய்களுக்கு சிறந்த நிவாரணம் கிடைப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தக்காளி மாத்திரையில் லைகோபீன், இயற்கையான ஒக்சிஜனேற்றம் அடங்கியுள்ளன. இதனால்தான் தக்காளி இந்த நிறத்தைப் பெற்றுள்ளது. சில வேளைகளில் இதிலுள்ள லைகோபீன் நோய்களைத் தடுக்க சிறந்தது. அத்தோடு புற்றுநோய், சுவாசம் தொடர்புபட்ட நோய்களைத் தடுக்கவும் உகந்தது. தக்காளி உணவுக்கட்டுப்பாட்டுக்கு சிறந்ததொன்றாகும்.
அதாவது ஏனைய மரக்கறிகள், பழங்கள், ஒலிவ் எண்ணெய் போன்றவற்றைப் போல் சிறந்த ஆரோக்கியமானது.
ஆரோக்கியமான உணவுக்கட்டுப்பாடு நல்லது. எனினும் மருந்தின் மூலம் சிறந்த கட்டுப்பாட்டை மேற்கொள்ள முடியுமா என்ற ஆராய்ச்சியினை விஞ்ஞானிகள் மேற்கொள்கின்றனர்.
தக்காளி மாத்திரை:
இந்த மாத்திரைகளை கம்நட்ரா (Cam Nutra) எனும் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.
பிரித்தானிய இதய அமைப்பு மற்றும் தேசிய சுகாதார ஆய்வு நிலையம் என்பவற்றின் வெல்கம் நிதியத்தின் கீழுள்ள கம்பனியினாலேயே இந்த மாத்திரை தயாரிக்கப்படுகின்றது. இதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வுக்குழுவினரே ஈடுபடுகின்றனர்.
இதில் இதயநோயுள்ள 36 தொண்டர்களையும், ஆரோக்கியமான 36 பேரையும் பணிக்கமர்த்தி அவர்களுக்கு தினமும் தக்காளி மாத்திரை (Tomato Pill) கொடுக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டு மாதங்கள் கொடுத்த பின்னர், இதய நோயுள்ளவர்களிடமேற்பட்ட மாற்றங்களை ஆய்வின் மூலம் பெறமுடிந்தது.
இம்மாத்திரையை உட்கொள்வதன் மூலம் இரத்தம் செல்லும் வேகம் அதிகரிப்பதுடன், இரத்தக்குழாய்கள் சுருங்காமல் விரிவடையும். இதனால் மாரடைப்பு , பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவாகும்.
இதயநோயுள்ள ஒருவர் தக்காளி மாத்திரையை உள்ளெடுப்பதன் மூலம் குழாய்களினூடாக மெதுவாகச் சென்ற இரத்தத்தின் வேகம் அதிகரிக்கும். குருதி அழுத்தம், குருதியில் கொழுப்பின் அளவு, இதய வால்வு தடிப்பு போன்றவற்றைத் தடுத்து, சீர் செய்கிறது.
இயற்கையான ஒக்சிஜனேற்றம், உடல் கலங்களில் ஏற்படும் பாதிப்புகளை தடுத்து பாதுகாக்கின்ற. இவை தக்காளியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பப்பாசி, வத்தகப் பழம், திராட்சைப்பழங்களும் இவற்றிற்கு சிறந்தவை எனக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
முதன்மை ஆராய்ச்சியாளரான டாக்டர் ஜோசப் செரியன், “இது சிறந்த முறையாகும். உறுதியான தரவுகளைக் கொண்டுள்ளது. எனினும் இது ஏனைய மருந்துகளுக்கான மாற்றீடல்ல. இது ஒரு பக்கபலமாகும்.
இதய நோய்களுக்கு இவை மிகவும் ஆரோக்கியமான மாத்திரையா என்பது தொடர்பில் ஆழமான, விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.







