நோய்கள் தரும் நவீன கழிப்பறைகள்

மனிதன் உலகில் தோன்றிய நாள் முதலாக அன்றாட காலைக்கடன் முடிக்க தேர்ந்தெடுத்தது குந்த வைத்து உட்காரும் நிலைதான். தங்குமிடம், உடை மற்றும் உணவு போன்றவற்றில் மேற்கத்திய நாகரிகத்தைப் பின்பற்றும் நாம் அவர்களது கழிப்பறை முறையையும் பின்பற்றத் தொடங்கினோம். இதன் விளைவால் இன்று நாம் பல நோய்களை சந்திக்கிறோம்.
மேற்கத்திய நாடுகளில் 20 ஆண்டுகளாக மூலநோய், மலச்சிக்கல் மற்றும் அப்பென்டிசைட்டிஸ் போன்ற குடல் சம்பந்தமான நோய்களின் பாதிப்பு அதிகரித்திருக்கிறது.
அந்நாடுகளின் விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் மேற்கொண்ட தீவிர பரிசோதனைகள் மற்றும் ஆராய்ச்சிகளின் முடிவில் குடல் நோய்கள் அதிகரிப்பதற்கு உட்கார்ந்த நிலையிலுள்ள மேற்கத்திய கழிப்பறையைப் பயன்படுத்துவதே காரணம் என்றும் அது மனித உடற்கூற்றியலுக்கு எதிராக அமைந்திருப்பதையும் கண்டறிந்தனர்.
19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அந்த நாடுகள் நமது முறைக்குத் தங்களை மாற்றிக் கொள்ளத் தொடங்கிவிட்டன. நாமோ மேற்கத்திய முறையில்
சிக்கிக் கொண்டோம்.
நவீன கழிப்பறைகளை பயன்படுத்தும்போது குடலிலிருந்து கழிவுகள் வெளியேற்றப்படுவது தடைபடுகிறது. இதில் உடகார்ந்த நிலையில் முழங்கால்கள் அடிவயிற்றுக்கு நேராக அதாவது 90 டிகிரி கோணத்தில் இருக்கின்றன.
இப்படி அமரும்போது குடல் கழிவுகளை வெளியேற்ற கூடுதல் அழுத்தம் கொடுக்க வேண்டியிருப்பதால் இதயத்துக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படுவதோடு, குடல் இயக்கத்தில் அழுத்தம் அதிகரிப்பதால் மூலநோய் வருகிறது.
தொடர்ந்து நவீன கழிப்பறையைப் பயன்படுத்துபவர்களுக்கு தண்ணீரை பிரித்தெடுத்து கழிவுகள் முழுவதும் வெளியேறாமல் பெருங்குடல் சுவரில் தங்கிவிடுகின்றன. அவை நச்சுகளாக மாறி பெருங்குடல் சுவரை சுருங்கச் செய்து பெருங்குடல் (Colon) நோய்களுக்கும் மலக்குடல் புற்றுநோய்க்கும் (Colon cancer) காரணமாகின்றன.
கழிப்பறை முறையில் முழங்கால்கள் அடிவயிற்றுப் பகுதிக்கு அழுத்தம் கொடுப்பதால் மலக்குடல் செங்குத்தாக நின்று ஆசனவாய் உறுப்புகளையும் தசைகளையும் இலகுவாக்கி, கழிவுகள் குடலில் தங்காமல் முழுவதும் எளிதில் வெளியேறுகின்றன. இனப்பெருக்கம், கருப்பை மற்றும் சிறுநீர்ப்பை போன்றவற்றின் இயக்கத்துக்குக் காரணமான நரம்புகள் பாதுகாக்கப்படுகின்றன.
பெருங்குடலுக்கும் சிறுகுடலுக்கும் இடையே உள்ள வாய்வானது சீல் வைத்தது போன்று மூடிக்கொள்வதால் மலம் வெளியேறும்போது பெருங்குடலில் ஏற்படும் கசிவுகள் சிறுகுடலில் கலக்காமல் தடுப்பாக செயற்படுகிறது. அதிக சிரமமின்றி மலம் வெளியேற்றப்படுவதால் குடலிறக்கம், இடுப்பு எலும்புகள் வலுவிழத்தல் போன்றவையும் தடுக்கப்படுகின்றன.
மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும் மூலநோய் உள்ளவர்களுக்கும் சரியான குடல் இயக்கம் தேவைப்படுவதால் இவர்களுக்கு குந்தியிருக்கும் முறை கழிப்பறையே சிறந்தது.
கர்ப்பிணிகளுக்குக் கருப்பை அழுத்தம் குறைவதோடு , சுகப்பிரசவத்துக்கும் வழிசெய்கிறது. கால்களை நன்கு மடக்கி உட்காருவதால் இரு மூட்டுகளுக்கிடையே விறைப்புத்தன்மை குறைந்து மூட்டுவலி, மூட்டுத் தேய்மானம் உண்டாவதும் தடுக்கப்படுகிறது.
அறிவியல் மற்றும் மருத்துவ ரீதியான நன்மைகள் நமது கழிப்பறைப் பயன்பாட்டில் உள்ளதால், இப்போது வெளிநாட்டினரும் அதைப்போன்றே வடிவமைக்கப்பட்ட சாதனங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.
அமெரிக்காவிலுள்ள ஜோனத்தன் தனது ஆராய்ச்சியின் பலனாக நமது கழிப்பறை போன்று ஒரு ஸ்டூலை வடிவமைத்து அதற்கான பேடன்ட் உரிமையையும் பெற்றுள்ளார். வாஷிங்டனைச் சேர்ந்த ரொபர்ட் எட்வர்ட்ஸ் மூலநோய் மற்றும் மலச்சிக்கலால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த தன்னுடைய தாய்க்காக வடிவமைத்த “ஸ்க்வாட்டிப்பாட்டி’ என்ற சாதனம் மிகவும் பிரபலமடைந்துள்ளது.
தாயின் கருவிலிருக்கும்போதுள்ள உட்கார்ந்த நிலை மனிதனிடம் இயற்கையாகத் தொடர வேண்டுமென்பதையே யோகாசனப் பயிற்சியில் மேற்கொள்ளும் “சஷாங்காசனா’ நிலை வலியுறுத்துகிறது. இந்த ஆசனத்தைச் செய்வதால் அடிவயிற்று உறுப்புகளை மசாஜ் செய்து இயக்கத்தை இலகுவாக்கி வயிற்று நரம்புகளின் வேலையைத் தூண்டுகிறது.
நமது முறைக் கழிப்பறையில் மலம் கழிக்கும்போதும் இதே விளைவுகள் ஏற்படுகின்றன. சஷாங்காசனா நிலையிலுள்ள ஒரு புகைப்படத்தை 90 டிகிரியில் திருப்பிப் பார்த்தால் குந்தவைத்து உட்காரும் நிலையிலிருப்பதைக் கவனிக்கலாம்.