குரு சனி வக்ரம்! ஆட்டிப்படைக்கும் நவ கிரகங்கள்…. தொடரும் மரணங்கள் – எத்தனை தலைமுறைக்கும் எந்த பரிகாரம் செய்தாலும் தீராது?

யானைகளின் மரணம் தொடர்கதையாகி வருகிறது. விபத்தில் சிக்கி மரணமடைவது ஒருபக்கம் இருக்க, விஷம் வைத்தும் மின்சார வேலியில் கரண்ட் பாய்ச்சியும், இப்போது வெடி வைத்தும் கொல்லத்துணிந்து விட்டனர்.

இப்போது கேரளாவில் நடந்த சம்பவம் விலங்குகள் ஆர்வலர்களை மட்டுமல்ல அனைவரின் நெஞ்சையும் பதைபதைக்க வைத்துள்ளது.

வயிற்றில் கரு உடன் இருந்த கர்ப்பிணி யானை பசிக்காக உணவு தேடி வந்த இடத்தில் அன்னாசி பழத்தை பார்த்து மகிழ்ச்சியடைந்தது.

அதை ஆசையோடு தும்பிக்கையில் எடுத்து சாப்பிட்ட நொடியில் வாய் வெடித்து நெருப்பு வயிற்றுக்குள் செல்ல செல்ல தண்ணீருக்குள் இறங்கியது அந்த களிறு.

உயிர் போகும் போது வலி எப்படி இருந்திருக்கும். கதறிய அந்த யானையின் வயிற்றில் இருந்த கரு எப்படி துடித்திருக்கும்.

இந்த கொடூர பாவத்தை செய்தவர்களுக்கு தண்டனை நரகத்தை விட கொடுமையானதாக இருக்க வேண்டும் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

தலைமுறைக்கும் தீராத பாவம்
கொரோனா வைரஸ் தாக்குதல் ஒருபக்கம், புயல் தாக்குதல் மறுபக்கம், பசி, பட்டினி என மக்கள் கூட்டம் அல்லாடிக்கொண்டிருக்கின்றனர்.

விலங்குகளும் பசிக்காகவும் தாகத்திற்காகவும் உணவு, தண்ணீர் தேடியும் வருகின்றன.

அந்த யானையும் அப்படித்தான் தனக்கும், தன் வயிற்றில் இருந்த குழந்தையின் பசிக்காகவும் உணவு தேடி வந்த போது வெடி வைத்து கொலை செய்திருப்பது பெரும் பாவம்.

இது எத்தனை தலைமுறைக்கும் எந்த பரிகாரம் செய்தாலும் தீராது.

ஆட்டிப்படைக்கும் குரு, சனி
குருவின் வாகனம் யானை. குருவும் சனியும் பார்த்துக்கொண்டால் பலவித ஆபத்துக்கள் யானைக்கு நேர்ந்திருக்கின்றன. இப்போது மகரம் ராசியில் குரு சனி சேர்ந்திருப்பது குரு சண்டாள யோகமாகும்.

இப்போது இரண்டு கிரகங்களுமே வக்ர நிலையில் சஞ்சரிக்கின்றன. குரு சனி சேர்க்கை, பார்வை நிகழும் போதெல்லாம் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. கடந்த 2010ஆம் ஆண்டு குரு சனி சம சப்தம பார்வை ஏற்பட்டபோது யானைகளுக்கு போதாத காலமாக இருந்தது.

2010ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் யானைகளால் சேதமும் உயிரிழப்பும் ஏற்பட்டது. மதுரையில் யானை தன்னை வளர்த்த பாகனை தாக்கியது. ரயிலில் மோதியும் விபத்தில் சிக்கியும் உயிரிழந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

குருவை சனி பார்த்ததற்கே குருவின் வாகனமான யானைக்கு பாதிப்பு ஏற்பட்டது. இப்போது குருவும் சனியும் இணைந்திருப்பதால் பல யானைகள் தொடர் விபத்தில் சிக்கியுள்ளன. மனிதர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த வாரம் திருப்பரங்குன்றத்தில் கோவில் யானை தனது பாகனை கொன்றது பலருக்கும் நினைவிருக்கலாம்.

நவ கிரகங்களால் பாதிப்பு
நவகிரகங்களின் சஞ்சாரத்திற்கு ஏற்ப இந்த நாட்டில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. மனிதர்களுக்கும் நன்மைகளும், தீமைகளும் ஏற்படுகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பும் பரவியதும் கூட மிதுனம் ராசியில் ராகு திருவாதிரை நட்சத்திரத்தில் சஞ்சரித்ததுதான். அதோடு தனுசு ராசியில் ஆறு கிரகங்கள் இணைந்து கூடவே சூரிய கிரகணமும் ஏற்பட்டதே காரணம் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

சனி குரு வக்ரம்
சனிபகவான் ஆயுள்காரகன், குரு பகவான் புத்திரகாரகன், குருவின் வாகனம் யானை. குரு சனி சேர்ந்து மகரம் ராசியில் வக்ர நிலையில் சஞ்சரிப்பதால் இப்போது தொடர்ந்து யானை பற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கொரோனா பரவல் அச்சத்தையும் தாண்டி கேரளாவில் யானை வெடி வைத்து கொல்லப்பட்டது மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

இந்த பாவம் பிரம்மஹத்தி தோஷத்தை விட கொடிய தோஷம். இந்த தோஷத்திற்கு எந்த பரிகாரமும் இல்லை என்பதே உண்மை. இந்த பாவத்தை செய்தவர்கள் தலைமுறை தலைமுறையாக நிம்மதி இழந்து தவிக்கத்தான் போகிறார்கள்.