பெரும்பாண்மை சிங்கள உறவுகளே !!!!

ஒன்றை மட்டும் உணர்ந்துகொள்ளுங்கள். அடிமைத்தனத்தாலும் அடக்குமுறையாலும் கட்டியாளப்படவேண்டிய காரியம் இதுவல்ல.இது உணர்வு சம்மந்தப்பட்டது. உரிமை சம்மந்தப்பட்டது. இது உயிருக்கும் உடலுக்குமான மகோண்ணதமான உணர்வு.
இதை அடக்குமுறையால் தற்காலிகமாக தடுக்கலாமேயொழிய நிரந்தரமாக கிள்ளியெறிய எவராலும் முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இவர்கள் என்றென்றும் இந்த மாவீரர்கள் தான் எங்கள் மீட்பர்கள், இனம் காக்க வந்த நாயகர்கள் என்று போற்றுவதை அதிலுள்ள நியாயத்தை ஆயினும் உணருங்கள். நீங்களும் கூர்ப்படைந்த மனிதர்கள் என்பது எங்களுக்கு தெரியும் . உங்களுக்குள்ளும் மனிதாபிமானம் உண்டென்றும் எங்களுக்கு தெரியும் .

இவர்கள் உங்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கவில்லை. உங்களுக்கெதிராக ஆயுதம் தூக்க நீங்களே நிர்ப்பந்தித்தீர்கள். வரலாற்றுத் தவறுகளை அறிய முற்படுங்கள். முப்பது கால ஆயுதப்போராட்டத்துக்களுள் சிக்குண்டது தமிழர்கள் அல்ல அழிந்தது தமிழர்கள் மட்டுமல்ல .. அழகிய இந்த நாடும் இந்த நாட்டின் பொருளாதாரமும் தான்.
நாங்கள் உங்கள் மொழி,கலை,கலாசாரம்,பண்பாடு,விழுமியங்களை மதிக்கிறோம். அதுபோல எங்கள் உரிமை ,சமத்துவம்,கலை,கலாச்சாரம்,பண்பாட்டு விழுமியங்களை நாங்கள் பேண ஆசைப்படுகிறோம். நீங்கள் அதிலுள்ள நியாயத்தை அறிந்து கொள்ள ஆவல்படுகிறோம்.

இந்த நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சியின் பின் நீங்கள் பெரும்பாண்மை,நாங்கள் சிறுபாண்மை என்ற சனத்தொகை வேறுபாட்டுக்கப்பால் நாங்கள் மனிதர்கள் என்று மனத்தால் ஒன்றிணைவோம். இனவாதத்தால் இந்த நாடு சுமந்த வடுக்களை மறக்காமல் இனியொரு வடுவும் ,போரும் ,பிரிவும் ,அவலமும் ஏற்ப்படாதிருக்க அனைவரும் பொறுப்புடன் சேர்ந்து உழைப்போம்.

நாங்கள் கோருவது வன்முறையையல்ல சமத்துவத்தை,
நாங்கள் கோருவது உங்கள் உரிமையையல்ல எங்கள் உரிமையை,
நாங்கள் விரும்புவது பயங்கரவாதத்தையல்ல எங்களுக்கான உரித்துரிமையை.
விளங்கிக்கொள்ளுங்கள்.

“சமஷ்டி” எனும் சமத்துவத்தை தாருங்கள்.
உங்கள் தேசத்தில் நீங்கள் முடிவெடுங்கள். எங்கள் தேசத்தில் நாங்கள் முடிவெடுக்க விடுங்கள்..எம் நாட்டில் நாங்கள் இருவரும் சேர்ந்தே முடிவெடுப்போம். சமத்துவமான ஆரோக்கியமான நாட்டை கட்டியெழுப்புவோம். அனைத்து துறையிலும் இணைந்தே பயணித்து வளர்வோம். பல்லிண கலாச்சார விழுமியங்களை பேணி ஒன்றிணைந்து பயணித்து உலக அரங்கில் மேலுயர்ந்து நிற்ப்போம்.

வரலாறுகளிலிருந்தும் காலம் கற்றுத்தந்த பாடங்களில் இருந்தும் பாடங்களை விளங்கி அப்பிழைகளை மீண்டும் மீண்டும் விடாது வீறு கொண்டு எழுவோம்.

அரசியல் சுயலாபங்களுக்காகவும், ஆட்சிப்பீடம் ஏறி சிறுகால பதவி சுகம் காண்பதற்காகவும் உங்கள் மக்கள் மத்தியில் இனவாத்த்தை விதைக்காதீர்கள். அது நாட்டுக்கிழைக்கும் பெரும் பாவம். உங்கள் சிறுகால பதவிக்காக நாட்டில் பல நூற்றாண்டு கால சரித்திரத்தை இரத்தக் கறைபடிய வைக்காதீர்கள். அது இந்த கடலில் மிதக்கும் அழகிய தீவு தாங்காது.

இத்துணை அழிவையும், ஏமாற்றத்தினையும், சோகத்தையும் சுமந்து கொண்டுதான் ஏதோ ஒரு விடிவெள்ளி நம்பிக்கைகாக தமிழர்கள் உங்கள் அனைவருக்கும் உங்கள் வாக்கை நம்பி வாக்களித்திருக்கிறார்கள் என்பதை சாமி கும்பிடும்போதோ அல்லது கழிவறையில் நீங்கள் இருக்கும் போதோ சற்று சிந்தித்து பாருங்கள்.

நீங்கள் இன்றைய மாவீரர் நிகழ்வுகளை பார்த்து மூக்கில் விரல் வைக்கக்கூடும். வியக்கக் கூடும் . ஏனென்றால் இத் தமிழர்கள் எப்படி இத்தனை இழப்புக்கும் பின்னரும், அடித்து விழுந்த பின்னும் இப்படி உணர்வுடன் கூடுகிறார்கள்.?எது இவர்களை ஒன்று சேர்க்கிறது? என்று யோசித்து இவர்களை எப்படி அடக்கலாம்,உணர்வுகளை மழுங்கடிக்கலாம் என்று சிந்திக்கும் நேரத்துக்கப்பால் இவர்களின் பிர்ச்சனை என்ன? இவர்கள் வெட்ட வெட்ட முளைப்பதன் தேவைப்பாடு என்ன? இவர்கள் எத்தனை அடக்குமுறை வந்தாலும் அடங்காது இருப்பதன் காரணம் என்ன? நாட்டில் ஏன் இரத்த வாடை வீசியது? அழகிய நாடு ஏன் ஐ.நா வரை போனது? அனைத்தையும் கேள்வியாய் கேளுங்கள். அதற்கான முடிவுகளை எடுக்க முற்படுங்கள்.

அனைத்தும் இழந்த பின்னும் இவர்கள் தங்களுக்காக போராடிய மாவீரர்களுக்காக எந்த எதிர்பார்ப்பில்லாமல் கூடி குமுறுகிறார்கள்.ஏன்?
சிங்கள மக்களே!! ஒரு வேளை உங்களை பல ஆண்டு காலம் நாங்கள் அடக்கியாண்டிருந்தால் உங்கள் மனநிலை எவ்வாறிருந்திருக்கும்? அதை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.

வரலாற்றின் முன் பாதிகளில் இலங்கையை பல தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்துள்ளார்கள்.அப்போது அவர்கள் உங்களை அடக்குமுறைக்குட்படுத்தவில்லை. எல்லாள மன்னன் உங்களை ஆட்சி செய்த விதம் தான் இன்றும் நீங்கள் அவருக்கு தீபமேற்றி வழிபடக் காரணம். அவர்கள் ஆட்சி செய்த போது உங்களுக்கான அனைத்து உரிமைகளும் தரப்பட்டது. அதனால் தான் இலங்கையில் இன்று உங்களுக்கோர் மகோண்ணதமான மத,மொழி,கலாச்சாரமொன்று எச்சமுள்ளது என்பதை விளங்கிக்கொள்ளுங்கள்.
நாங்கள் உங்கள் புத்த மதத்திலும் அவரது போதணைகளிலும் கரிசணை கொண்டுள்ளோம். மக்கள் குறை கண்டு அரசு துறந்து துறவறம் சென்ற அந்த மகானின் போதனைகளை பின்பற்றும் உங்களிடமிருந்து நாங்கள் நல்லவற்றையும், சிறப்பானவற்றையும் ,நல்லிணக்கத்தையும் காண விரும்புகிறோம்.

காலங்கள் கற்றுத்தந்த பாடங்களை விளங்காது விடின் அது இன்னொரு பாடத்தை எங்களுக்கு ஏலவே தயாரித்து வைத்திருத்திருக்கிறது. அதையும் அது தந்துவிடும் என்பதையும் புரிந்து கொள்ளோம். புதிதாய் உங்களிடமிருந்து ஒன்றை எதிர்பார்க்கிறோம்.!!!!!!!!

நன்றி
கு.மதுசுதன் B.Sc(Hons)

University of Jaffna
27.11.2017