நீங்கள் பிறந்த இந்த தமிழ் மாதம் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது? இவர்களின் உறவு வாழ்நாள் வரை நீடிக்கும்…!

தமிழ் வருடப் பிறப்பின் முதல் மாதமாக வரும் சித்திரை மாதத்தின் சிறப்புகள் மற்றும் சித்திரையில் பிறந்தவர்களின் பொது குணம், அவர்கள் எப்படி இருப்பார்கள், அவர்கள் எதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

நிறைய பேர் சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்துவிட்டால் ஏதோ பெரிய தவறு நடந்ததை போல் இதற்கு ஏதாவது வழிபாடு இருக்கிறதா ,பரிகாரம் இருக்கிறதா என கேட்பார்கள்.

இவ்வாறு தவறாக புரிந்து கொண்டிருப்பவர்களை தெளிவுபடுத்தும் விதமாக இந்த தகவல் அமையும்.

தமிழ் புத்தாண்டின் முதல் மாதமாக வருவது சித்திரை மாதம். நம்முடைய ஜோதிட முறை சூரியனை மையமாக கொண்டு கணக்கிடப்படுகிறது.

அதாவது ஒவ்வொரு ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது ஒரு மாதம் தொடங்கும். அந்த வகையில் சூரிய பகவான் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் காலம் தான் சித்திரை மாதமாகும்.

சித்திரை மாத சிறப்புகள்

  • சித்திரை மாதம் தமிழ் மாதத்தின் முதல் மாதம். இந்த மாதத்தின் தொடக்கத்தில் சூரியனை வழிபடக்கூடிய சிறப்புமிக்க நாளாக கொண்டாடப்படுகிறது.
  • சித்திரை தொடக்க நாள் வருடத்தின் தொடக்க நாள் என்பதால் அன்றைய தினம் அந்த வருடத்திற்குரிய பஞ்சாங்கத்தை வாசிப்பது அவசியம்.
  • வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்துவது போல நம் முன்னோர்கள் இந்த தமிழ் வருட பிறப்பு நாளில் வேப்பம் பூ பச்சடி செய்வது வழக்கம். வேப்பம் பூ உடன், வெல்லம், புளி, உள்ளிட்டவை சேர்த்து செய்யப்படும் இது இனிப்பு, கசப்பு, புளிப்புடன் இருக்கும். இது வாழ்க்கை தத்துவத்தை உணர்த்தும் விதமாக இருக்கின்றது.
  • எதை செய்தாலும் பல மடங்கு பலன் பெறக் கூடிய நாளாக அட்சய திருதியை பார்க்கப்படுகிறது. இந்த பொன்னான நாள் சித்திரை மாதத்தில் தான் வருகிறது.
  • நாம் இந்த அட்சய திருதியை நாளில் செய்யக் கூடிய தான தர்மங்கள், பித்ருக்களுக்கு நாம் செய்யும் தர்ப்பணம் உள்ளிட்டவை நமக்கு பல மடங்கு பலனை தர வல்லது.
  • இந்த தினத்தில் அரிசி, கோதுமை, தானியங்கள். பழங்கள். தயிர், மோர், ஆடைகள் உள்ளிட்டவற்றை ஏழைகளுக்கு தானம் செய்வதால் நமக்கு மன அமைதியும், செல்வமும் பெருகும்.
  • சித்திரை மாதத்தில் திருவோணம் நட்சத்திரத்தில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடப்பது வழக்கம்.
சித்திரை மாதத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணம்

சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள், புது வருடத்தை வரவேற்பதைப் போல் வரவேற்கப்படக் கூடிய நபர்களாக இருப்பார்கள். அனைவராலும் விரும்பப்படக் கூடிய நபர்களாக இருப்பார்கள்.

ஒரு காரியத்தை எடுத்தால் அதில் வெற்றி அடைய தன் முழு முயற்சிகளை ஈடுபடுத்தக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் எந்த துறையில் இருந்தாலும் அதில் பிரகாசிக்கக் கூடிய நபர்களாக இருப்பார்கள்.

போர் குணம் பொருந்திய செவ்வாய் அதிபதியாக கொண்ட மேஷ ராசியில் பிறப்பதால், இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் அறிவியல் துறை மற்றும் காவல் துறையில் அதிகம் இருப்பார்கள்.

இவர்கள் எந்த ஒரு செயலையும் மிக வேகமாக செய்துமுடிக்க வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள். எதைக் கண்டும் கலங்காத எதிர்த்து போராடக் கூடியவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் ஒரு தொழிலதிபராக இருக்கும் பட்சத்தில், ஊழியர்களை விரட்டி வேலை வாங்கும் ஆற்றலைப் பெற்றிருப்பார்கள். அவர்களும் இவர் ஒரு அக்னி என நினைத்து ஒதுங்கி செல்வார்கள். இதனால் பல திட்டுக்கள் வாங்கும் நபராக இருப்பார்கள். இருப்பினும் இவை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல். தன் மூளையில் போட்டுக் கொள்ளாமல் முன்னேறிக் கொண்டே இருப்பார்.

சூரியனின் பலத்தால் ஆற்றலும், செவ்வாயால் சக்தியை வெளிப்படுத்தக் கூடிய தன்மையும், சுக்கிரனால் உங்கள் எதிரியை விரட்டியடிக்கும் திறமையும் கொண்டவராக இருப்பார்கள்.

எதையும் அடுத்து செய்வோம் என ஒரு காரியத்தை ஒதுக்கக் கூடிய குணம் இல்லாதவர். எதையும் வேகமாக செய்துமுடிக்க வேண்டும். அதுவும் இப்போதே செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்தவராக இருப்பார்கள்.

எதையும் செய்து முடிக்கும் ஆற்றல் இருந்தும், என்னால் முடியுமா என்ற ஒரு சில தயக்கம் மனதில் இருக்கும். அதிக உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாகவும், கோபப்படுபவரான இவர்கள், கோபத்தில் இருக்கும் போது யாரெனும் பாராமல் வார்த்தைகளால் சுட்டுவிடுவீர்கள்.

இவர்கள் கோபத்தை குறைத்துக் கொள்வது, அதிகம் பேசாமல் இருப்பதே சிறப்பு. உணர்ச்சி வசப்படுவதை கட்டுப்படுத்த நல்ல பயிற்சி எடுத்துக் கொள்ளுதல் அவசியம். இவர்கள் பெரும்பாலும் டென்சன், நரம்புதளர்ச்சி உடையவர்களாக இருப்பார்கள்.

இவர்களுடனான நட்பு அல்லது உறவு இருந்தால், நாம் அவரை நன்கு புரிந்து வைத்திருந்தால், சற்று விட்டுக் கொடுப்பதும் இருக்கும் பட்சத்தில் இவர்களின் உறவு வாழ்நாள் வரை நீடிக்கும்.