சுமங்கலி பெண்களின் கவனத்திற்கு.. ஆடி மாதத்தில் என்னென்ன செய்யவேண்டும்?

தமிழ் மாதங்களில் எந்த மாதத்திற்கும் இல்லாத சிறப்பும், தனித்துவமும் ஆடி மாதத்திற்கு உண்டு. ஏனென்றால் ஆடி மாதம் அம்மன் அவதரித்த மாதம்.

அதோடு, ஆடி மாதம் மழைக்காலத்தின் தொடக்கமாகவும் கருதப்படுகிறது. அதனால்தான் ஆடி மாதம் முழுவதும் மகத்துவம் நிறைந்ததாக உள்ளது. ஆடி மாதத்தின் ஒவ்வொரு நாளும் சிறப்பானதாகும்.

மாதந்தோறும் பூரம் நட்சத்திரம் வந்தாலும், ஆடியில் வரும் பூரம் ஆண்டாளின் அவதாரத்தினால் விசேஷமாகிறது. பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவதுபோல, நம்மைப் படைத்த அன்னைக்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ந்திடும் நாளே ஆடிப்பூரம். இந்த நாளில் ஆண்டாளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஆராதிக்கப்படுவார்.

நாக சதுர்த்தி விரதம் என்பது ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் தொடங்குவதாகும். நாக சதுர்த்தி விரதம் தங்கள் கணவரின் நலனுக்காகவும், பிள்ளைகளின் நலனுக்காகவும் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் ஆகும்.

ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி கருட பஞ்சமி என அழைக்கப்படும். கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். கருட பஞ்சமியன்று கௌரி அம்மனை நாகவடிவில் அலங்கரித்து, நோன்பு இருந்து பூஜை செய்வது மிகவும் நல்லது.

ஆடி மாதத்தில் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடும் இருக்கவும்,

தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இவ்விரதத்தை சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கின்றனர். வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள் அஷ்ட போக பாக்கியங்களைப் பெறுவார்கள்.

பெருக்கு என்றால் பெருகுவது என்று அர்த்தம். ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடுகிறார்கள்.

தங்களை வாழவைக்கும், வளப்படுத்தும் காவிரியை அதன் கரையோர பகுதிகளில் இருக்கும் மக்கள் சிறப்பிப்பதற்காக துவங்கப்பட்ட இந்த விழா தமிழகம் முழுவதிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.