ஆலயங்களில் சிதறுகாய் எதற்காக உடைக்கப்படுகிறது? அறிந்து கொள்ளுங்கள்

முதற்கடவுள் எனப்படுபவர் விநாயகர். எந்த செயல் செய்தாலும் முதலில் விநாயகரை வணங்கிய பின்பே தொடங்குவது இந்து மக்களின் வழக்கம்.

தாங்கள் வேண்டும் வரத்தை அளிக்க வேண்டும். துன்பங்கள் விலக வேண்டும் என விநாயகரை வழிபாடு செய்கின்றோம்.

அதேபோல் எந்த சுப காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் விநாயகரை வேண்டி அவருக்கு ஒரு சிதறுகாய் உடைத்து தான் ஆரம்பிப்பார்கள். இது தொன்றுதொட்டு நடைபெற்று வரும் பழக்க வழக்கங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

இந்த சிதறுகாய் உடைக்கும் வழக்கம் எப்படி வந்தது?

ஒரு முறை, விநாயகர் யாகம் ஒன்றை மேற்கொள்வதற்காக கையில் தேங்காய்களுடன் யாக கூடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது வழியில் அசுரன் ஒருவன் குறுக்கிட்டு தடை ஏற்படுத்தினான். அந்த அசுரனை அழிக்க விநாயகர், தான் கையில் வைத்திருந்த தேங்காய்களை எறிந்தார்.

தேங்காய்கள் கல்லில் பட்டு சிதறுவதைப் போல, அசுரனும் பொடிப் பொடியாகிப்போனான். இதையடுத்து விநாயகருக்கு ஏற்பட்ட தடை அகன்றது.

அதன் காரணமாகத்தான் எந்த காரியத்தை தொடங்கும் முன்பும், அதற்கு தடை ஏற்படாமல் இருக்க சிதறுகாய் உடைக்கப்படுகிறது.

சிதறும் தேங்காய் போல் துன்பங்களும், தடைகளும் நம் வாழ்வாழ்வில் இருந்து சிதறி விடும் என்பதுதான் இதன் அர்த்தம்.