இந்த ஆண்டின் குருப் பெயர்ச்சியில் குரு பகவான் எந்த ராசியில் இருந்து எந்த ராசிக்கு மாற்றம் அடைகிறார்? மாற்றம் அடைவதினால் எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை ஏற்படும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.
நம் வாழ்வில் சுபநிகழ்ச்சிகள் உதாரணமாக திருமணம் அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமானது. திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக குரு பகவான் திகழ்கிறார்.
குரு பார்வை என்று சொல்லப்படும் வியாழ அனுகூலம் திருமணத்துக்கு முக்கியமாக தேவைப்படுகிறது. வியாழ நோக்கம் வந்துவிட்டதா என்று பார்த்த பிறகே திருமண விஷயங்களை ஆரம்பிக்க முடியும்.
ஸ்ரீசார்வரி வருஷம், ஐப்பசி மாதம் 30ம் நாள் (15.11.2020) ஞாயிற்றுக்கிழமையும் – அனுஷ நக்ஷத்ரமும், சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் இரவு 09.48க்கு மிதுன லக்னத்தில் குரு பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறுகிறார்.
மகர ராசிக்கு வரும் குரு பகவான் தொடர்ந்து 1 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். மகர ராசிக்கு வரும் குரு பகவான் கும்ப ராசிக்கு பிலவ வருடம் ஐப்பசி மாதம் 27ம் தேதி 13.11.2021 சனிக்கிழமையன்று மாறுகிறார்.
தற்போது, மாறக்கூடிய குருபகவான் மகர ராசியிலிருந்து தனது ஐந்தாம் பார்வையால் ரிஷப ராசியையும் – ஏழாம் பார்வையால் கடக ராசியையும் – ஒன்பதாம் பார்வையால் கன்னி ராசியையும் பார்க்கிறார்.
குரு பகவானுக்கு ஸ்தான பலத்தை விட த்ருக் பலமே அதிகம். அதாவது இருக்கும் இடத்தின் பலத்தினை விட பார்க்கும் பலமே அதிகம். எனவே குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண பலன்கள் பெறும்.
நன்மை பெறும் ராசிகள்:
ரிஷபம் – கடகம் – கன்னி
நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்:
துலாம் – தனுசு – மகரம் – மீனம்
பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்:
மேஷம் – மிதுனம் – சிம்மம் – விருச்சிகம் – கும்பம்
குரு பலம்
எந்த ஒரு ஜாதகத்திலும் குருவின் இருப்பு மிக மிக முக்கியம். இதை வைத்துதான் குல தெய்வ அனுக்ரஹம் – முன்னோர்கள் ஆசீர்வாதம் ஆகியவற்றைக் கணிக்க முடியும்.
குரு திரிகோணத்தில் இருந்தால் பெரிய பலம் என்றும், கேந்திரத்தில் இருந்தால் மத்திம பலம் என்றும், மறைவு ஸ்தானத்தில் இருந்தால் அதம பலம் என்றும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சார பலம் மிக முக்கியம்.