இடப்பெயர்ச்சி அடைந்துவிட்டார் குரு! ராஜயோகத்தை பெற போகும் அதிர்ஷ்டகார ராசிக்காரர் யார்?

குரு பெயர்ச்சி வாக்கியப்பஞ்சாங்கப்படி நிகழ்ந்துள்ளது. தனுசு ராசியில் இருந்த குரு பகவான் மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார்.

குரு பகவான் தனுசு ராசியில் உள்ள உத்திராடம் 1ம் பாதத்திலிருந்து மகரத்தில் உள்ள உத்திராடம் நட்சத்திரம் 2ம் பாதத்திற்கு பெயர்ச்சி அடைந்துள்ளார்.

திருக்கணித பஞ்சாங்க முறைப்படி கார்த்திகை 5 ஆம் தேதி நவம்பர் 20ஆம் வெள்ளிக்கிழமை நிகழ்கிறது.

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் குரு பெயர்ச்சியால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று சுருக்கமாக பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்கு 10ம் இடமான தொழில், கர்ம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் தொழில், உத்தியோகத்தில் சற்று கவனமாக செயல்பட வேண்டிய ஆண்டாக இருக்கும்.

ஒரு வேலையிலிருந்து மற்றொரு வேலைக்கு மாறும் போதும் எச்சரிக்கையாக இருக்கவும்.

தொழில் சார்ந்த பயணம், ஒப்பந்தங்களில் ஆலோசனையும், எச்சரிக்கையும் அவசியம். அதிசாரமாக வரக்கூடிய குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது உங்கள் தொழில், உத்தியோகத்தில் சிறப்பான மேன்மைப் பலன்களை அள்ளித்தருவார்.

மேலும் தொழில் ஸ்தானத்தில் சனி பகவான் வரும் போது உங்களுக்கு ஆறுதலான பலன்களை அளிப்பார்.

பரிகாரம் – உங்கள் ராசியைப் பொருத்த வரை முருகப் பெருமானை வணங்கி வர எல்லா வகையிலும் சிறப்பான பலனைப் பெறலாம்.

ரிஷபம்
குருவின் 5ம் பார்வை உங்கள் ராசி மீது விழுவது மிக சிறந்த அதிர்ஷ்ட பலனைத் தரும். பாக்கிய குருவாக ரிஷப ராசிக்கு 9ம் இடத்தில் அமர்கிறார். மகரத்தில் குரு சஞ்சரிக்கக்கூடிய காலம் மிக பொன்னானதாக இருக்கும்.

ஆடை, தங்க நகை ஆபரணங்கள் வாங்கக்கூடிய அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கும். குடும்பம், தொழில் என சகல விதத்திலும் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். அரசு மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான நிலை உண்டாகும்.

பரிகாரம் – சுக்கிரனை ராசி நாதனாக கொண்ட ரிஷப ராசியினர் மகாலட்சுமியை வணங்கி வருவது அவசியம். வெள்ளிக்கிழமை, சுக்கிர ஹோரையில் வழிபாடு செய்வது மேலும் விசேஷம்.

மிதுனம்
அஷ்டமத்தில் குரு அமைவது பெரிய நல்ல பலனைத் தராது. இருப்பினும் எந்த ஒரு செயலாக இருந்தாலும் புதிய சிந்தனை, திறமைகளை பயன்படுத்தி விடா முயற்சி செய்தால் கண்டிப்பாக நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

அடுத்து அஷ்டம சனி வரக்கூடிய காலம் என்றாலும் அங்கு குரு இருக்கும் சூழலால் சனியின் பாதிப்பை குறைப்பார்.

தொழில், உத்தியோகத்தில் எந்த ஒரு குறை இல்லாமல் முன்னேற்றம் இருக்கும். 2021ல் உங்களுக்கு நம்பிக்கை தரும் ஆண்டாக இருக்கும். குரு அதிசாரத்திற்கு வரும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

பரிகாரம் – வியாழக்கிழமைகளில் குருவையும், சனிக்கிழமைகளில் சனிபகவான் என நவகிரக வழிபாடு செய்து வரவும்.

சிவ வழிபாடு உங்கள் சிரமங்களையும், சிக்கல்களையும் தீர்க்கும்.

கடகம்
கடக ராசிக்கு 7ம் இடமான களத்திர ஸ்தானம் எனும் துணை, மனைவி, தொழில் கூட்டாளி ஸ்தானத்தில் குரு அமர்கிறார்.

குருவின் சிறப்பு பார்வை ராசி மீது விழுகிறது. இதனால் இதுவரை நீங்கள் அனுபவித்த துன்பங்கள், துயரங்கள், இக்கட்டான சூழல் நீங்கும்.

இருப்பினும் குடும்ப உறவில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். தம்பதியிடையே மனக்கசப்புகள் அதிகம் தோன்ற வாய்ப்புள்ளது.

நீங்கள் அன்பைக் கொடுத்து அனுசரித்துச் சென்றால் இனிக்கும். குரு அதிசார காலங்களில் பிரச்னைகள் தீரும். மற்றபடி பல வகையில் அதிர்ஷ்டத்தை கடக ராசியினர் பெறுவார்கள்.

பரிகாரம் – முன்னோர் வழிபாடு செய்வதும், வியாழக்கிழமைகளில் குரு, சித்தர்கள், மகான்களின் ஜீவசமாதி வழிபாடு செய்வதும். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது சிறந்தது.

முருகனை வழிபாடு செய்வதால் குடும்ப பிரச்னைகள் தீரும்.

சிம்மம்
ராசிக்கு 6ம் இடத்தில் குரு அமர்வதால் சற்று கவனமாக இருக்க வேண்டிய நிலை இருக்கும். நோய், எதிரி ஸ்தானம் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். உணவு விசயத்தில் கவனமாக இருப்பதோடு, வெளி உணவுகளை தவிர்க்கவும்.

எதிர்பாராத செலவுகள், அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும் நீங்கள் எதிர்பார்த்த வெற்றியை அடையலாம்.

செலவுகள் அதிகமாக இருந்தாலும், அதற்கேற்ற வருமானம் இருக்கும். கடன் தொல்லை குறையும். அதே சமயம் எந்த ஒரு முதலீடு செய்வதற்கு முன் நல்ல ஆலோசனை தேவை.

முடிந்த வரை முதலீடு வேண்டாம். கடன் கொடுத்தால் திரும்ப வருவது சந்தேகமே. குருவின் பாரவையால் எதிரிகள் கட்டுக்குள் இருப்பார்கள்.

பரிகாரம் – ஞாயிறு தோறும் சூரிய போற்றி, ஆதித்திய கவசம் பாடி சூரிய பகவானை வழிபடவும். வியாழக்கிழமைகளில் குரு வழிபாடு சிறப்பான பலனைத் தரும்

கன்னி
ராசிக்கு குரு பகவான் 5ம் இடமான பூர்வ, புண்ணிய குருவாக வருவது மிக சிறந்த அதிர்ஷ்டத்தை அளிப்பதாக இருக்கும்.

குருவின் 5ம் பார்வை பலனால் நீங்கள் எடுத்த காரியங்கள் வெற்றி தரும். இதுவரை இருந்த இக்கட்டான சூழல் மாறும்.

உங்களின் பெரிய இலக்கை அடைவதற்கான மிக உன்னத காலம். குரு 5ம் இடத்தில் இருக்கும் அமைப்பை சரியாக திட்டமிட்டு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இருப்பினும் குரு அதிசாரமாக ஏப்ரல் மாதம் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

பரிகாரம் – வியாழக்கிழமைகளில் சித்தர்கள், மகான்கள் ஆலயத்திற்கு சென்று வரவும். நவகிரக குருவை வணங்கி வாருங்கள்.

துலாம்
துலாம் ராசிக்கு 4ம் இடமான சுகஸ்தான குருவாக சஞ்சரிக்க உள்ளார். உங்களின் சுகமான வாழ்க்கை சற்று சிக்கலுக்கு உள்ளாகும்.

அதாவது உங்கள் குடும்ப அமைதியில் சலசலப்பு ஏற்படும். விட்டுக் கொடுத்து செல்வதும், அன்பை மறக்காமல் பரப்புவதால் மட்டும் சுமூகமான சூழல் நிகழும்.

தொழில், உத்தியோகஸ்தர்கள் கவனமாக செயல்படுவது அவசியம். எந்த முடிவெடுக்கும் போது சிந்தித்து செயல்படுங்கள். இருப்பினும் உங்களின் விடாமுயற்சிக்கு சிறப்பான பலனும், முன்னேற்றமும் கிடைக்கும்.

பெண்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம். ஆரோக்கியம், குடும்ப பிரச்னைக்கு வழிவகுக்கும். புதிய முயற்சிகளில் கவனமாக செயல்படுவது நல்லது.

பரிகாரம் – மகாலட்சுமியை வணங்கி வருவதும், வியாழக்கிழமைகளில் குரு பகவானை வழிபடுவது நல்ல முன்னேற்றத்தைத் தரும்.

விருச்சிகம்
இந்த குரு பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். அதாவது உங்கள் செயல்பாடுகளில் பல தடங்கள், மன வேதனை தந்தாலும், உங்களுக்கு கிடைக்க வேண்டிய வெற்றியும், மன மகிழ்வும் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

ராசிக்கு 3ம் இடமான தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு அமர்வதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் விடாமுயற்சி இருக்கும். கடந்த காலங்களில் நீங்கள் சந்தித்த சிக்கல்கள் நீங்கி நன்மையைப் பெறலாம்.

உங்களின் புது முயற்சிகள், திட்டங்கள் வெற்றி அடையும். சிலருக்கு அடிக்கடி பயணங்கள் செய்ய வேண்டிய நிலை இருக்கும். பொருளாதாரத்தில் எந்த சிக்கலும் இருக்காது. மேலும் கடன் தொல்லை கட்டுக்குள் இருக்கும்.

இளைய சகோதரர் உறவில் கவனம் தேவை. கருத்து வேறுபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்.

பரிகாரம் – செவ்வாய்க்கிழமை தோறும் அம்பாள் கோயிலுக்கு சென்று வருவதும்.

செவ்வாய் கிழமைகளில் முருகன் கோயிலுக்கு சென்று அவரின் ஆசி பெறுவதால் பொருளாதாரத்தில் இருந்துவந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

தனுசு
இந்த குரு பெயர்ச்சி தனுசு ராசிக்கு மிக யோகமான, பல அதிர்ஷ்டங்களைப் பெறக்கூடியதாக இருக்கும்.

2ம் இடமான குடும்ப குரு எனும் பாக்கிய, தந்தை ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளதால் குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிகழும். திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் நினைத்தபடி நடக்கும். எண்ணிய செயல்கள் வெற்றி அடையும்.

உங்கள் தொழில், வேலையில் லாபமான பலன்கள் நிச்சயம் கிடைக்கும். இருப்பினும் யாருக்காகவும் ஜாமின் கையெழுத்து போடவேண்டாம்.

பரிகாரம் – முருகப்பெருமானை வணங்கிவர உங்கள் ராசிக்கு மேலும் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம்.

மகரம்
ஜென்ம குருவாக உங்கள் ராசியில் குரு சஞ்சரிப்பவதால் உங்களுக்கு சற்று எதிர்மறையான நிகழ்வுகள் நடக்கும். என்றாலும் அது வருங்காலத்தில் உங்களை மேம்படுத்தக்கூடிய அனுபவத்தைத் தரும்.

ஜென்ம குருவைத் தொடர்ந்து, ஜென்ம சனி நடக்கும் காலத்தில் சனி பகவனின் மோசமான பலன்களை குரு பகவான் கட்டுப்படுத்துவார். தம்பதிகளிடையே மன கசப்பு ஏற்படக்கூடும்.

பேச்சு, செயலில் கவனமாக இருப்பதும். வீண் வாக்கு வாதங்களை தவிர்த்தால் அமைதி கூடும். பெரிய முதலீடுகளை செய்ய வேண்டாம்.தொழில் ரீதியான முயற்சிகள் வெற்றியைத் தரும்.

பரிகாரம் – குரு பெயர்ச்சியைத் தொடர்ந்து, சனிப் பெயர்ச்சியும் நடக்க உள்ளதால் எந்த விஷயமாக இருந்தாலும் கவனமாக செயல்படுவது அவசியம்.

வியாழக்கிழமைகளில் குரு பகவான் வழிபாடு செய்வதும், சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்றி சனி பகவானை வழிபடவும்.

கும்பம்
விரய குருவாக கும்ப ராசிக்கு வந்துள்ளதால் உங்கள் ராசிக்கு சுப செலவுகள் நிகழும். உங்களின் தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றமான நிகழ்வுகள் நடக்கும்.

இருப்பினும் உங்களுக்கு லாபகரமான பலன்கள் கிடைக்க பல சோதனைகளை கடக்க வேண்டி வரும். திருமணம், வீடு, மனை கட்டுவதற்கான சுப விரயங்கள் ஏற்படக்கூடும்.

பரிகாரம் – சனிக்கிழமைகளில் சிவ ஆலய தரிசனம் செய்வது நல்லது. வியாழக்கிழமைகளில் சித்தர்கள், மகான்களின் ஜீவசமாதியில் வழிபாடு செய்வது நல்லது.

முடிந்தால் குருவின் அருள் நிறைந்த திருச்செந்தூர் சென்று வரலாம். அல்லது அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று வருவதும், நவகிரகங்களில் குருவை வணங்கி வருவது நல்லது.

மீனம்
ராசிக்கு 11ம் இடத்தில் லாப குருவாக அமர்வதால் உங்களுக்கு அனைத்து விதத்திலும் லாபமான பலன்கள் கிடைக்கும்.

உங்களுக்கு வீடு, மனை, வாகனங்கள் வாங்குதல் போன்ற லாபகரமான, சொத்து சேர வாய்ப்புள்ளது.

சிலருக்கு தொழில் ரீதியான வெளியூர் / வெளிநாட்டு பயணங்கள் செய்ய வாய்ப்புள்ளது. தொழில், உத்தியோகத்தில் உங்களுக்கு லாபகரமான பலனும் ஏற்படலாம்.

பரிகாரம் – நவகிரக வழிபாடு செய்வதும், சிவ வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும்.

கணபதிக்கு அறுகம்புல் மாலை சாற்றி வழிபட வினைகள் தீரும். சந்திரன், குரு, சுக்கிர ஹோரைகளில் உங்களுக்கான புதிய செயல்களை ஆரம்பிக்க எல்லாம் ஜெயமாகும்.