சளி பிடித்திருக்கும் போது குழந்தைகளுக்கு வாழைப்பழம் கொடுக்கலாமா?

தமிழர்களின் வீட்டு விசேஷத்தில் முன்னணி வகிக்கும் வாழைப்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன, எளிதாக செரிமானம் ஆகக்கூடியதுடன் குழந்தைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது.

எனினும் குழந்தைகளுக்கு எப்போது வாழைப்பழம் கொடுக்கலாம்? சளி பிடித்திருக்கும் போது வாழைப்பழம் சாப்பிட்டால் என்னவாகும்? என பல கேள்விகள் தாய்மார்களுக்கு எழாமல் இல்லை.

இதற்கான பதிலை இந்த பதிவில் பார்ப்போம்.

வாழைப்பழம் ஏன் சாப்பிட வேண்டும்?
* இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கிறது.
* இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றது.
* செரிமானத்திற்கு உதவுகிறது.
* சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
* இரத்த சோகையை எதிர்த்துப் போராட உதவுகிறது.
* ஆற்றலை அதிகரிக்கிறது மற்றும் சோர்வை போக்க உதவுகிறது.
* மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகின்றது.

எந்த வயதிலிருந்து தொடங்கலாம்?
குழந்தைகளுக்கு ஆறு மாதம் தொடங்கியவுடனேயே வாழைப்பழத்தை கொடுக்கலாம், ஆவியில் வேகவைத்து மசித்து கொடுக்க வேண்டும், எட்டு மாதம் தொடங்கிவிட்டால் குழந்தைகளுக்கு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொடுத்து சாப்பிட பழக்கலாம்.

முதலில் கொடுக்கும் போது மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கொடுத்து வரவும், அப்போது தான் அதனால் எதுவும் தொந்தரவுகள் வருகிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம், இந்த விதி முதன்முதலில் பழக்கப்படுத்தும் அனைத்து உணவுகளுக்கும் பின்பற்ற வேண்டிய ஒன்று.

சளி பிடித்திருக்கும் நேரத்திலும் வாழைப்பழத்தை சாப்பிடக் கொடுக்கலாம், இதிலுள்ள விட்டமின் சி குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதால் அளவாக சாப்பிடக் கொடுக்கலாம், இரவில் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

ஒரு வயதிற்கு கீழ் சர்க்கரை சேர்க்க கூடாது என்பதால் சர்க்கரைக்கு பதிலாக வாழைப்பழத்தினை உணவுகளில் சேர்த்தும் கொடுக்கலாம்.