நவகிரகங்களில் சனி பெயர்ச்சி வந்தாலே ஒருவித பயம் எல்லோருக்கு வந்துவிடுகிறது. சனிபகவான் நீதிமான் என்பதால் அவர் சோதனைதான் கொடுப்பார். தண்டனை என்ற பெயரில் புத்தி புகட்டுவார். ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் தங்கும் சனிபகவான் 12 ராசிகளையும் சுற்றி வர 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்கிறார்.
எனவேதான் 30 ஆண்டுகள் வாழ்ந்தாரும் இல்லை தாழ்ந்தாரும் இல்லை என்கின்றனர். ஏழரை சனி காலத்தில் சனிபகவான் விரையசனி, ஜென்மசனி, பாதசனி என படிப்பினைகள் கொடுப்பார். அர்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி, என கஷ்டப்பட்டாலும் கடைசியில் நல்ல விசயங்களை கற்றுக்கொடுப்பார்.
சிலருக்கு கோடி கோடியாக கொடுப்பார். விபரீத ராஜயோகத்தையும் தருவார் சனி பகவான்.
நிகழ இருக்கும் சனிப்பெயர்ச்சியால் அவதிப்படபோகும் ராசிகள் யார் கோடீஸ்வர யோகம், விபரீத ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள் யார் என பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு லாப சனி காலமாகும். செய்யும் தொழிலில் லாபமும், அபரிமிதமான வருமானமும் கிடைக்கும். சனிபகவான் பார்வை உங்க ராசியில் விழுவதும் கூடுதல் பலம். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும்.
சிலர் விமானம் ஏறி வெளிநாடு செல்வீர்கள். அந்நிய தேசத்து வருமானம் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும்.
ரிஷபம்
சனி பகவான் ரிஷப ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் அமரப்போவதால் செய்யும் தொழில் வளர்ச்சியடையும். ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் செயல்படும். புது வேலை கிடைக்கும். பதவியில் புது உற்சாகம் கிடைக்கும். சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது.
திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். கோடீஸ்வர யோகம் வரப்போகிறது. சனி கொடுப்பதை பத்திரமாக பாதுகாத்து தான தர்மங்கள் செய்யுங்கள்.
மிதுனம்;
அஷ்டம சனியால் கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக படாத பாடு பட்டிருப்பீர்கள். அஷ்டம சனி முடிந்து பாக்கிய சனி தொடங்குகிறது. வேலையில் சம்பள உயர்வு புரமோசன் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். நகை, பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். சனியால் யோகங்கள் அதிகம் கிடைக்கும்.
பணவரவு அதிகரிக்கும். அசையும் அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். நிறைய தர்மங்களை செய்யுங்கள். ஏனெனில் இது தர்ம சனி காலம்.
கடகம்
சனிபகவான் இதுநாள் வரை கண்டச்சனியாக இருந்து கஷ்டங்களைக் கொடுத்தார் இனி எட்டாம் வீட்டில் அஷ்டம சனியாக அமரப்போகிறார். இந்த கால கட்டத்தில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அவை உங்களுக்கு சாதகமாகவே முடியும். எட்டாம் வீட்டு அதிபதி சனி எட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோக காலமாகும்.
திடீர் பணவரவு கிடைக்கும். கஷ்டமில்லாமல் இந்த 30 மாதங்களை கடந்துவிடுவீர்கள்
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே இதுநாள் வரை ஆறாம் வீட்டில் அமர்ந்து உங்களை ஆகா ஓஹோ என்று வாழ வைத்தவர் சனி பகவான். இனி சனிபகவான் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் கண்டச்சனியாக அமரப்போகிறார். சனிபகவான் ஆட்சி பெற்று அமர்ந்து உங்க ராசியை பார்ப்பதால் கண்டச்சனியையும் கஷ்டமில்லாமல் கடந்துவிடுவீர்கள்.
வேலை மாற்றம் இடமாற்றத்திற்கு காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமணம் தடைகளை தாண்டி நடைபெறும்.
கன்னி
சனி பகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து முழு ராஜயோகத்தையும் தரப்போகிறார். சனி ஆறாம் வீட்டு அதிபதி ஆறில் ஆட்சி பெற்று அமர்ந்து விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். சனி பகவான் தனது சொந்த வீட்டுக்கு வருவதால் நோய்கள் தீரும். விபரீத ராஜயோகம்.
இனி இரண்டரை ஆண்டு காலம் உங்களுக்கு ராஜயோக காலம். சுகங்கள் தேடி வரும். செல்வமும் செல்வாக்கும் கூடும். கடன்கள் கட்டுப்படும். அசையா சொத்துக்களை வாங்குவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, அர்த்தாஷ்டம சனியால் கஷ்டங்களையும் நோய்களையும் அனுபவித்த உங்களுக்கு துன்பங்களில் இருந்த விடிவுகாலம் பிறக்கப்போகிறது. ஐந்தாம் வீட்டிற்கு வரப்போகும் சனியால் பூர்வஜென்ம புண்ணியங்களை கொண்டு வந்து அறுவடை செய்வீர்கள்.
நல்லது அதிகம் நடக்கும். திருமண தடைகள் நீங்கும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். சிலருக்கு நன்மை தரும் இடமாற்றம் நடைபெறும். நல்ல வேலை கிடைக்கும். இந்த சனி பெயர்ச்சி பல நன்மைகளையும் யோகங்களையும் தரப்போகிறது.
விருச்சிகம்
நான்காம் வீட்டு அதிபதி நான்கில் ஆட்சி பெற்று அமர்வதால் பாதிப்புகள் இருக்காது. சனியின் பத்தாவது பார்வை உங்க ராசி மீது விழுவதால் தொழில் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். வீடு, கார் என வாங்குவீர்கள்.
பணவரவு அதிகரிக்கும் அதே நேரத்தில் நோய்களும் வெளிப்படும். நோய்களை குணப்படுத்துவீர்கள். தனவரவு அதிகரிக்கும். ஆசைகளை குறிக்கோள்களை சனி நிறைவேற்றுவார்.
தனுசு
ஏழரை ஆண்டுகாலமாக சனி உங்களை ஆட்டி படைத்தது. இனி நன்மைகள் தேடி வரும் காலம். கடந்த சில ஆண்டு காலமாக சாவின் கடைசி நுனிவரை பார்த்து விட்டு வந்திருப்பீர்கள். இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனி இனி லாபங்களைத் தருவார். உங்களின் துன்பங்கள், துயரங்கள் நீங்கும் காலம் வந்து விட்டது.
கொடுத்த கடன்கள் வசூலாகும். பயணங்கள் வெற்றியை கொடுக்கும். மன நிம்மதி அதிகரிக்கும். உடல் நலத்தினால் கஷ்டப்பட்டவர்களுக்கு பாதிப்புகள் குறையும்.
மகரம்
ஜென்ம சனி விலகப்போகிறது. அதே நேரத்தில் ஏழரை சனியின் கடைசி இரண்டரை ஆண்டு காலம் பாத சனியாக தொடர்வதால் கொஞ்சம் கவனம் தேவை. தன வருமானமும் லாபமும் கிடைக்கும். சனியின் பார்வை ராசிக்கு நான்காம் வீடு, எட்டாம் வீடு,பதினொன்றாம் வீடுகளின் மீது விழுவதால் கஷ்டங்களை எளிதாக கடந்து விடலாம்.
பயணங்களில் வேகத்தை விட நிதானம் அவசியம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இரண்டரை ஆண்டு காலம் ஜென்மசனி தொடங்குகிறது. சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுடைய ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். கடினமாக உழைப்பீர்கள், பொறுப்பு அதிகரிக்கும். உழைப்புக்கு முக்கியத்துவம் தருவீர்கள்.
30 வயதிற்கு மேற்பட்ட சிலர் தொழில் தொடங்குவீர்கள். கடல் கடந்து செல்லும் எண்ணம் வரும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அரசு தொடர்பான ஆதரவு கிடைக்கும். அனுபவங்களினால் பக்குவப்படுத்துவார். இந்த சனிப்பெயர்ச்சியை எளிதாக கடந்து விடுவீர்கள்.
மீனம்
சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 12, 1, 2 ஆம் வீடுகளில் இருப்பது ஏழரை சனி காலமாகும். முதல் இரண்டரை ஆண்டுகள் விரைய சனி. 2022 ஆம் ஆண்டு முதல் மீன ராசிக்கு விரைய சனியாக ஏழரை சனி காலம் தொடங்குகிறது.
இந்த கால கட்டத்தில் உங்களிடம் உள்ள பணத்தை சொத்துக்களில் முதலீடு செய்யலாம். விபரீத ராஜயோகத்தையும் தருகிறார் சனி. காரணம் சனி பகவான் உங்க ராசிக்கு 12ஆம் வீட்டு அதிபதி 12ஆம் வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போகிறார் சனி பகவான்.