ஒருவருக்கு வெற்றி, நல்ல அதிர்ஷ்டம், தொழில், அதிர்ஷ்டம், சாதனை மற்றும் செழிப்புக்கான ஒரு காரணியாக குரு பகவானை குறிப்பிடலாம்.
ஒருவருக்கு குரு குறைபாட்டுடன் இருந்தால் அந்த நபருக்கு பல வகையில் பிரச்னைகளும், நிதி சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டி வரும்.
எனவே குரு தோஷம் உள்ளவர்கள் எந்தெந்த கோவில்களுக்கு சென்று வந்தால் பலனை பெறலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
திருத்தேன் குடித்திட்டை
குடந்தையிலிருந்து தஞ்சை செல்லும் சாலையில் 20 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு வியாழ பகவான் தனிச்சன்னிதியில் சிறப்புற காட்சி தருகிறார். மற்ற சிவாலயங்களில் குருதோஷம் நீங்க தட்சிணா மூர்த்தியே குருவாக வணங்கப்படுகிறார். திட்டையில் மட்டும் நவக்கிரக பிரகஸ்பதி தனியான அந்தஸ்தும் செல்வாக்கும் பெற்று தனி சன்னிதியில் விளங்குகிறார்.
பட்டமங்கலம்
ஞான குருவாக இருந்து கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசித்தார். அந்த இடம் தான் இப்போது பட்டமங்கலம் என்றழைக்கப்படுகிறது. அங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் குருவடிவத்தில் சிவன் அமர்ந்து அடியவர்களுக்கு வேண்டியதை வழங்குகிறார்.
மணமுடிக்கவும், குழந்தைப் பேற்றுக்காகவும் பக்தர்கள் இங்கு வந்து குரு பகவானை வழிபடுகிறார்கள். மரம் முழுவதும் மஞ்சள் கயிறுகளும் மஞ்சள் துணியாலான சிறு தொட்டில்களும் கட்டப்பட்டுள்ளன.
கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசித்த தட்சிணாமூர்த்தி இங்கு பட்டமங்கலத்தில் அமர்ந்து அருள் பாலிக்கிறார். சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூருக்கு 8 கி.மீ. தொலைவில் பட்டமங்கலம் அமைந்துள்ளது.
திருச்செந்தூர்
குருதோஷம் நீங்க தேப் பெருமாநல்லூரில் உள்ள அன்ன தான தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும். அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் குரு பகவானுக்கான விசேஷமான தலம் என்று குறிப்பிடப்படுகிறது.
திருச்சீரலைவாய் என்றும் அழைக்கப்படும் இத்தலம் வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ள முருகப்பெருமான் உறைகின்ற இடம். இங்குள்ள முருகப்பெருமானை வழி படுவதாலும் குருவின் அருள் கிடைக்கிறது.
வியாழ பகவான் வழிபட்டு பேறு பெற்ற தலம் இது. குரு தோஷம் நீங்க இங்கு முருகப்பெருமானுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
தேவூர்
கீழ்வேளூரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரிலிருந்து செல்லலாம். வனவாசத்தின் போது பஞ்ச பாண்டவர்கள் இங்கு வந்து இறைவனைப் பூஜித்ததாக வரலாறு சொல்கிறது. தேவ குருவாகிய பிரகஸ்பதி சிறப்பான வழிபாடுகள் செய்து அருள்பெற்ற சிறந்த ஊர் இது. இந்திரன், குபேரன் முதலியோரும் இங்கு வந்து வழிபட்டுள்ளனர்.
தக்கோலம்
அரக்கோணத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ளது தக்கோலம் எனப்படும் திருவூறல். இங்குள்ள தட்சிணாமூர்த்தியைப் போன்று சிறப்புடைய உருவத்தை வேறு எங்கும் காணமுடியாது. சடையோடு கூடிய முகம். சற்றே சாய்ந்த அழகிய திருக்கோலம். இருக்கையில் ஏற்றி வைத்த காலோடு மிகச்சிறப்பு கலை நயத்தோடு உள்ளார் தட்சிணாமூர்த்தி.
திருவொற்றியூர்
திருவொற்றியூரில் உள்ள குரு தட்சணாமூர்த்தி கோவில் சிறப்பனதாகும். ஏனெனில் அங்கே இருக்கும் குரு தட்சணாமூர்த்தி வடக்கு நோக்கி சுமார் 6 அடி உயரத்தில் இருப்பார். பொதுவாக குரு தட்சணாமூர்த்தி தெற்கு நோக்கியே வீற்றிருப்பார்.
ஆனால் இந்த கோவிலில் மட்டும் வடக்கு நோக்கி அழகாக வீற்றிருப்பார். பாடி திருவலிதாயம் ஈஸ்வரன் கோவிலில் உள்ள குரு தட்சணாமூர்த்தி சன்னதி மிகச்சிறந்த குரு பரிகார பூஜை தலமாக விளங்குகிறது.