கல்வி, செல்வம், வீரம் என மூன்று சக்திகளை கொண்ட தேவியர்களை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்று தான் நவராத்திரி விரதம்.
இது புரட்டாதி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை தேவியைக் குறித்து நோற்கப்படும் விரதமாக கருதப்படுகின்றது.
நவராத்திரி விரத அனுஷ்டிப்புகள்
2022-ம் ஆண்டு நவராத்திரி விழாவானது, செப்டம்பர் 26-ம் திகதி தொடங்கி அக்டோபர் 5-ம் திகதியில் முடிகிறது.
பார்வதியை முதல் 3 நாட்களும், அடுத்து லட்சுமியை 3 நாட்களும், இறுதி 3 நாட்கள் சரஸ்வதியையும் 10-வது நாள் விஜய சாமுண்டீஸ்வரியாக வணங்க வேண்டும்.
அந்தவகையில் நவராத்திரி சிறப்பும், மகத்துவமும் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
நவராத்திரி என்றால் என்ன?
நவராத்திரி பண்டிகையின் முக்கிய நோக்கமே, நாம் எல்லோரும் ஒன்றே, அனைத்தும் இறைசக்தியின் வடிவமே என்று உணர்த்துவது தான்.
துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று இறைசக்திகளும் ஒன்று சேர்ந்து மகிஷாசுர மர்த்தினியாக அவதாரம் எடுத்து, மகிஷன் எனும் அரக்கனை அழிப்பதையே நவராத்திரி வரலாறு என்கிறார்கள்.
மகத்துவம்
நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் வீரசக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க அருள்கின்றான்.
நடுவில் உள்ள மூன்று நாட்களும் செல்வசக்தியின் தோற்றமான லட்சுமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அருள்கின்றான்.
இறுதி மூன்று நாட்களும் கல்விசக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான் என்பது சிவாகமத்தின் உள்ளுறையாகும்.
நவராத்திரி வழிபாட்டு முறை
- நவராத்திரி விழாவன்று நவராத்திரி விரதம் எடுப்பவர்கள் அந்த ஒன்பது நாளும் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட்டு விரதத்தினை கடைப்பிடிக்க வேண்டும்.
- நவராத்திரி விரதத்தினை எடுப்பவர்கள் திருமணம் ஆன பெண்களை தங்களது வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களைப் பராசக்தியாகப் பாவித்துக் கொலுவின் அருகில் அமர வைத்து வணங்கி மஞ்சள், குங்குமம், பட்டு, நாணயம், தாம்பூலம் போன்ற பொருள்களை கொடுக்கலாம்.
- 8-ம் நாளான நவராத்திரி அன்று 2 முதல் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களை அம்மனின் அம்சமாக கருதி பொட்டு, வளையல், உணவு, இனிப்பு மற்றும் ஆடை கொடுத்துகுழந்தைகளை சந்தோஷப்படுத்தலாம்.
- சிறப்பு ஒருவர் நவராத்திரியில் தன் வீட்டீலேயே மாபெரும் பிரபஞ்ச சக்தியையும் ஐம்பூத சக்திகளையும் தருவித்து தெய்வீகசக்தியை நிலைப்பெறச் செய்து, ஆனந்தமாக வாழ நினைத்தால் நவராத்திரி பூஜையை மேற்கொள்வது நல்லது.