கடமைகளிலிருந்து விலகிச் சென்ற சுகாதார உதவியாளர்கள்; திண்டாடிய மக்கள்

மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார உதவியாளர்கள் திங்கட்கிழமை (23) நான்கு மணித்தியாலங்கள் கடமைகளிலிருந்து விலகிச் சென்றமையினால் வைத்தியசாலையின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கோரிக்கை
வைத்தியசா​லையில் காணப்படும் மருந்து, உபகரண தட்டுப்பாட்டை உடனடியாக நீக்கவும், கட்டண வார்டுகளை உருவாக்குவதை நிறுத்தவும் பணியாளர் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு உதவியாளர்கள் கடமைகளிலிருந்து விலகியிருந்தனர்.

இந்த சுகாதார உதவியாளர்கள் நேற்று (23) காலை எட்டு மணிக்கு கையெழுத்து பதிந்து விட்டு கடமைகளிலிருந்து விலகிச் சென்றனர்.

இதனால் வைத்தியசாலையின் வெளி நோயாளர்களும் கிளினிக்குகளுக்கு மாதாந்தம் வருபவர்களும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

இது தொடர்பில் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரியிடம் கேட்ட போது

இந்த நடவடிக்கையில் சுமார் 322 சுகாதார உதவியாளர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், திடீர் சிகிச்சையாளர்கள் மற்றும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு எவ்வித சிரமங்களும் இன்றி சிகிச்சைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்தார்.