அல்வாய் வேவிலந்தை ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயில் பற்றிய ஓர் சிறப்பு பார்வை

வடமராட்சியில் “அல்வாய்” என்னும் பதியில் “வேவிலந்தை” என்னுமிடத்தில் இக் கோயில் அமைந்துள்ளது. இக் கோயிலின் தோற்றம் பற்றிய கர்ணபரம்பரைக் கதை மூலம் வீரமாப்பாணர் பரம்பரையிலே வந்த “உடைச்சி” என அழைக்கப்படும் “வள்ளி நாச்சி” என்ற பெண் வழிபட்ட தலமென்பது கூறப்படுகிறது. சக்தி வழிபாட்டில் ஈடுபாடு கொண்டிருந்த உடைச்சி ஆண்டு தோறும் மதுரைக்குச் சென்று மீனாட்சியைத் தரிசிக்கும் வழக்கமுடையவராக இருந்தார். ஒருமுறை சென்ற போது மதுரைக் கடை வீதியில் ஓர் அழகான அம்மன் சிலையையும் வாங்கி வந்தார்.

அக்காலத்தில் வெப்பு நோய்களை அம்மன் வியாதி என அழைத்தனர். அம்மை, சின்னமுத்து, கொப்பளிப்பான் போன்ற வியாதிகள் வந்தால் அம்மனுக்கு நேர்த்தி வைக்கும் வழக்கம் இருந்தது. “மாரி பெய்து இந்நோய்களையெல்லாம் தீர்க்கவேண்டும் தாயே” எனத்தன் நாற்சார வீட்டின் தூய்மையான இடத்தில் அம்மன் சிலையை வைத்து விளக்கேற்றி பூப்போட்டு உடைச்சி வழிபட்டுவந்தார்.
ஒரு நாள் அம்மன் அவருடைய கனவிலே தோன்றி வேம்பும் இலந்தையும் பின்னிப்படர்ந்திருக்கும் இடத்தில் தன்னை வைத்து வழிபடும்படி சொன்னாள். கனவுக் கதை ஊரெல்லாம் பரவி வேவிலந்தைக் காணியில் ஒரு கொட்டில் கட்டப்பட்டு “முத்துமாரி” என்ற பெயர் சாற்றி ஊரால் வழிபடலாயினர். ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாறு இக்கோயில் வழிபாடு தொடங்கியது. அன்று தொடக்கம் இன்றுவரை பொங்கவிடுவதும் நீர்கஞ்சி வார்ப்பதும் நடைபெற்று வருகிறது.

பின்னர் கர்ப்பக்கிரக அமைப்புடன் கட்டடநிலையில் கோயில் திராவிட சிற்பக்கலை மரபில் கட்டப்பட்டது. 15 நாள் உற்சவம் நிர்ணயிக்கப்பட்டது. 1947 ல் தர்சன மண்டபம் வசந்த மண்டபம் என்பன அமைக்கப்பட்டன. 1995 ல் வாகனமும் சப்பரமும் செய்யப்பட்டன. தற்போது அன்னதானமடம், கல்யாணமண்டபம் எனவும் அமைக்கப்பட்டுச் சித்திரத்தேரும் செய்யப்பட்டுள்ளது.
ஓர் ஆண்டில் அரைவாசி நாட்கள் விசேட பூசை நாட்களாக மக்கள் ஒன்று கூடி வழிபடும் நாட்களாக இருப்பது இக்கோயிலின் தனிச் சிறப்பு. 52 செவ்வாய்த்தினங்கள் இவற்றுள் குறிப்பிடத்தக்கவை. காவடி, கரகம், பாற்செம்பு என நேர்த்திக்கடன் நிறைவேற்றும் பக்தர் கூட்டம் என்றும் அலைமேதும். கோயிலின் சித்திரத்தேர் வெள்ளோட்டச்சிறப்புமலர் 2001 ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. வெறும் இலந்தைக்காட்டில் கொட்டிலில் குடியேறிய முத்துமாரி இன்று இராஐகோபுரத்துடன் கோடிக்கணக்கான பக்தர் வந்து கூடும் கோயிலிலே உறைகின்றாள்.