நெஞ்சம் மறக்குமா வீரமுனை படுகொலையை…

தமிழர்கள் வடக்கு கிழக்கில் சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து திட்டமிட்டமுறையில் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதற்கு தமிழினப் படுகொலைகள் ஒவ்வொன்றும் ஆதாரம். வீரமுனைப் படுகொலைகள் என்பது 1990 ஆம் ஆண்டு ஆவணி 12ம் நாளில் கிழக்கிலங்கையில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை என்னும் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை தமிழ் மக்கள் ஒருகாலமும் மறக்க மாட்டார்கள்.

தமிழ் மக்களின் மனங்களில் என்றும் ஆறாத வடுக்களாக உள்ள படுகொலை வீரமுனைப் படுகொலை. அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை கிராமத்தில் ஆவணிமாதம் 12 ஆம் திகதி 1990 ஆம் ஆண்டில் தமிழ்மக்கள் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

துப்பாக்கிகளினால் இலங்கை இராணுவத்தாலும் முஸ்லிம் ஊர்காவல்படைகளாலும் 400க்கு மேற்பட்ட தமிழ்மக்கள் சுட்டும் வெட்டியும் தாக்கினார்கள்.

சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த இனவன்செயல் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை,மல்லிகைத்தீவு, மல்வத்தை,வளத்தாப்பிட்டி, சொ றிக்கல்முனை, அம்பாறை பகுதிகளைச்சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருட்டிண மிசன் பாடசாலை வளவினுள்ளும் 1990 ஆனி மாதம் முதல் ஆடி மாதம் வரை தஞ்சம் புகுந்திருந்தனர்.

வீரமுனை கிராமத்தில் ஆவணி 12ஆம் நாளன்று புகுந்த ஊர்காவல்படைக் கும்பல் ஒன்று 400க்கும் அதிகமான பொதுமக்களை சுட்டும் வெட்டியும் தாக்கினர். இவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 55 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதிகமானோர் படுகாயமுற்றனர். அவ்வேளையில் கடத்தப்பட்டோர் பற்றி எவ்விதத் தகவலும் இல்லை.

தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால் சுட்டும் வெட்டியும் என ஈவிரக்கமின்றி குழந்தைகள் ,பெண்கள் முதியவர்கள் என்ற பாகுபாடின்றி பல காலகட்டங்களில் தமிழர் வாழும் பகுதி எங்கும் இரத்த ஆறு ஓடிய நாட்களை மறக்க முடியாது.

தமிழினப் படுகொலைகள் நடக்கும்போதேல்லாம் காணமல் போகப்படும் சம்பவங்களும் அரங்கேறின. இன்றுவரை அவர்களுக்கு என்ன நடந்தது என உறவுகள் ஏக்கத்தில் தவிக்கிறார்கள்..வீரமுனை படுகொலைகள் நடந்து 28வருடங்கள் சென்று விட்டன. ஆனால் இன்றும் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு துன்பங்களை சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பல உயிர்கள் அழிக்கப்படும் போது அதன் பின்னால் அனாதரவாக்கப்படுபவர்களும்,உயிர்களை இழந்த உறவுகளும்,அங்கவீனர் ஆக்கப்படுவோர் ,காணாமல் ஆக்கப்படுவோர் என துயரங்கள் தொடர்கின்றன. இதை செய்பவர்கள் அவற்றை சிந்திக்கமாட்டார்கள். அவர்களின் இலக்கு இனத்தை அழிப்பதாகதான் இருக்கும் போது மனிதாபிமானம் எப்படி இருக்கும். தமிழினப் படுகொலைகளுக்கு எப்போது நீதி கிடைக்கும்?