கசங்குகிறேன் கவலையில்லை..

கசங்குகிறேன் கவலையில்லை..

விதை தந்த விந்தையொன்றில்
அரும்பாகி மொட்டாகி
பூவாகிப் புதிதாகிய நான் கசங்குகின்றேன் கவலையில்லை..

இறைவன் அடியினிலே
இதுதான் வாழ்வென்று
பூக்களோடு பூக்களாகப் புதைந்து கிடக்கிறேனே..
அந் நொடியில் கசங்கிகின்றேன் ஆனாலும்
கவலையில்லை

மங்கையர் கூந்தலிலே
மணம் என்ற பெயரினிலே-என்
சுவாசம் கொடுத்து-அவர்
வாசம் காக்கிறேனே-அப்போதும்
கசங்குகின்றேன் கவலையில்லை.

அரை நிமிடம் ஒரு பாட்டு எழுதுகின்ற கவிஞனிடம்
அவசரத்தில் நான் வந்து அணியாகக் குதிக்கன்றேனே-அப்போதும்
கசங்காமல் கசங்குகின்றேன்
ஆனாலும் கவலையில்லை.

மௌனத்தின் அம்புகளை
மணிக்கணக்கில் வீசும் போது
மனதளவிலும் என் மனதைப் பார்க்காது,
காதலியின் கூந்தல் முடி பறிக்கின்றானே-அப்போதும்
கசங்குகின்றேன்
கவலையில்லை

இன்றைய விருதுகளின் விலைப்பட்டியலில்
தன் பெயரைத் தாராமல்
தாரளமாய் சமுகத்தைத் தன் கலையால் தருகின்ற
கலைஞனின் கழுத்திலே-சிலசமயம்
கசங்குகின்றேன் ஆனாலும்
கவலையில்லை.

ஆணும் பெண்ணும் திருப்தியாகும்
வேளையிலே
இனமொன்று சுகமாக
விருத்தியாகும் வேளையிலே
அவர்கள் படுக்கை
என் பாடையாகுமே.. அப்போது
கசங்குகின்றேன்
கவலையில்லை.

அரசியலை வயதாக்கி
அநியாயத்தை அநுபவமாக்கி
அடங்காமல் அடக்கும்
அவர்கள் காலடியில்
வானிருந்து விழுகின்றேனே-அப்போதும்
கசங்குகின்றேன்
கவலையில்லை..

அப்படியென்றால் நான் கலங்குவது எப்போது??

இருக்கிறது இன்னும்
மனதிற்குள்

அரும்பிலிருந்து மலராகி
நானிருந்த செடியிலே
நானாக உதிர்ந்து
நாசமாய்ப் போகின்றேனே

அப்போது

பூவென்று பூமியிலே
நான் வந்த பிறவிப்பயன் அடையாது போகின்றேனே

அப்போது

என்னைப் பறிக்காமல்
என் திறனை மதிக்காமல்
என் வாய்ப்பை இன்னொருவன் தீர்மானிக்கிறானே

அப்போது

என் வேலை முடிக்க வாய்ப்பின்றி-என்னைத்
தந்த செடிக்கு
கொஞ்ச உரமாகவும் ஆகாமல்
காற்றிலே தொலைந்தழிந்து காணமல் போகின்றேனே

அப்போது கசங்குகின்றேன்
அதனால் எப்போதும்
கலங்குகின்றேன்..

(திறமைக்கான வாய்ப்பு இன்னும் கிடைக்காதவர்களுக்கு)

ஜெகநாதன்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like