முடிவு தேடி….

முடிவு தேடி……

நான் இறந்த காலத்தில் வாழ ஆசைப்படுகிறேன்

ஏக்கமும் தவிப்பும் இல்லாமல் இருக்க தினம் ஓட்டைக் காசுகளை காவிச் செல்கிறேன்

செல்லுபடியற்ற என் வாழ்க்கைக்கு – அடையாளமாய் என் கால்கள் சேறும் சகதியும் கண்டு சலிப்பதில்லை

முகத்தில் சேறு பூசப்பட்டால் முழங்காலில் பூசப்பட்டாலென்ன !

எனக்குப் பசிப்பது கூட இல்லை சிலவேளைகளில் புசிப்பதற்கு ஏதுமில்லையே என்ற கவலை தொற்றிக் கொள்ளாமல்

தேற்றிக் கொள்கிறேன். விதி எழுதும் பேனா மை என்று முடியப்போகிறது என்ற வினாவுடன் விமர்சையான

என் போராட்ட முடிவு காண…….

கதிர்


அனுமதி இலவசம்

ஆடம்பர உலகில் படோபகார பண்பாட்டில் அநாவசியங்கள் நாகரிகமாகிவிட நடந்தேற கூடாதவை நித்தியமாகிறது

நல்லவை என்று சொல்பவை நினைப்பிலே மட்டும்…… வாழ்ந்து விடுகின்றன

அன்றேல் மரியாதையிழக்கப்பட்டு மரபணுக்களில் மரிக்க வைக்கப்படுகின்றன.

பலதையும் சகித்துக் கொள்ள பழகிட சொல்லி – பல பயிற்சிகள் அரங்கேற்றம் பகற் கொள்ளைகளுக்கும்

பரகசிய விளம்பரங்கள் தயாரித்தாகி விட்டது.

சூடான செய்தி எதுவெனில் அனுசரணையாளர்கள் அலைமோதுகின்றனராம்.

மறைமுக அழுத்தங்கள் வேறு பண்பையும் பண்பாட்டையும் கைவிட சொல்லி அவதானம்…………!

மனிதமற்ற மனிதர்கள் நடை கூட மண்ணை ஆக்கிரமித்து விடலாம்.

ஆதலால் மனதளவில் கூட மனிதத்தை காதல் செய்ய முடியவில்லை.

இந்த மண்ணில் நல்ல வண்ணம் வாழும் எண்ணத்தை வெளியே விட்டு வந்தால் மட்டும் அனுமதி இலவசம்…

கதிர்


அன்பிற்குரியவனே…….

ஆரசறிவியல் உலகில் என் அன்பிற்குரியவனே !

ஜனநாயக நாட்டில் நீ மட்டும் மன்னராட்சி நடத்துகிறாய்

என் மனதில் கலைக்கப்பட்ட கட்சிகளுள் சுயேட்சையாய் நின்று ஜெயிக்கிறாய்

உன் பேச்சு பார்வை எல்லாமே பெரும்பான்மை வாக்குகளால் என்னை ஆழ்கிறது.

கதிர்


விடியலற்ற பிரபஞ்சத்தில்…..

கண்ணீர் எனும் மழைத்துளி வீழ்ந்து சேர்ந்தோடி கனவெனும் கானல் நதி தேங்கி நின்ற மனக்கடலில் தினம்

ஆசைஎனும் அலைகள் திரைத்து ஏக்கமெனும் நுரைகள் கரையில் அமைதியான ஆழியிது அறிந்ததொன்று ஏமாற்றமே !

சூரியக்கிரணங்களின் சூட்டினால் ஆவியாக்கம் நடந்து வற்றிடுமோ?

வருத்தக்கடல்………. வற்றினாலும் வற்றலாம் ஆனால் உதயமே இல்லாத பிரபஞ்சத்தில் விடியலற்ற நாளுக்காய் காத்திருக்கும் வினோதங்கள்…

கதிர்


நல்லதோர் கட்சி

எங்களின் ஆசையெல்லாம் கொலிவூட்டின் அளவில்லை பாலிவூட்டின் மவுசும் இல்லை

தமிழ்சினிமாவின் பட்ஜெட்டும் இல்லை நிதர்சனத்தை மட்டும் சொல்லும் ஈரானியப் படமாய் எம்பிரச்சனை கேட்க வேண்டும்

நல்லதோர் கட்சி அதற்கோ வீடில்லை வீணையில்லை யாரையும் வெற்றிலை வைத்திங்கே வருந்தி அழைத்திடவும்

இல்லை ஏதோ உண்மையை சொல்ல அதைக் கேட்க யாருமில்லை ஈரமில்லை நெஞ்சத்தில் வீரமில்லை

இன்று நம் தேசத்தில் துவேசம் ஏதும் இதிலில்லை வேஷம் என்பதற்கில்லை வெறும் துன்பமொன்றே !

கதிர்


விருப்பத்திற்குரிய இயக்குனர்

கற்பனையில் தினம் சஞ்சரித்து கண்களிலே கதையெழுதி வான வெளியில் வாடகைக்கு முகில் கூட்டம் வாங்கி

கனவுகளில் காட்சியமைத்து மின்னலிலே படம் பிடித்து இடியோடு இசையமைத்து வெள்ளத்தோடு இரசிகர் வீடுவரை சென்றிருக்கிறேன்.

தரமான தயாரிப்பாளர்களின் நடுவே விருதுக்குரிய இயக்குனராய் இனியும் வாழ்ந்து விடுவேன் அடுத்தபடம்இ அடைமழையாய் வெளிவருகிறது.

கதிர்


வரலாற்றிலும் ஓர் இடம்…

ஒரு கண்ணீர் துளியின் பின்னுள்ள கானல் வரிகள் கற்பிக்கும் பாடம்

முள்ளம் பன்றியின் முதுகில் பயணிக்கும் வேதனை

சுவாசிக்க எண்ணும் பூக்களற்ற மீன்களாய் உண்மை உணர்ந்தும் உயிர்த்துடிப்பு நாடி

போராடி விபரீதமாய் விதி செய்த கடவுளின் கணக்கில் பல பிழைகள் உண்டென உய்த்து கண்டு கொண்டும்

ஆரோ செய்த பிழைக்காய் தானே வலிய போய் தண்டனை கைதிகள் என்றாலும் வரலாற்றில் எமக்காய் ஓர் இடம் காத்திருக்கிறது……

தியாகிகள் எனும் தோரணையில்.

கதிர்


யாரும் அறியா……

கல்லறியாச் சிற்பமாய் என்னுள் இருந்த பெண்ணை நீ மட்டும் காண்கிறாய்

சிப்பிக்குள் இருக்கும் முத்தாய் உன் ஆண்மையை நான் மட்டும் நுகர்கிறேன்.

நான் அறியா எந்தன் அழகை நீ மட்டும் இரசிக்கிறாய்

நீ உணரா உந்தன் வாசம் நான் ஏனோ உணர்கிறேன்.

ஊரறியா உணர்வுச் சொந்தம் நாம் என்றும் வாழ்கிறோம்

நாம் அறியா விதியின் எழுத்தை யார் அறிந்து சொல்வது…….?

கதிர்


இனியொரு நாளெண்ணி இற்றை வரை

காலங்கள் மாறி கனவுகள் கைகூடி கற்பனைகளும் நடந்தேறி காவியமாய் வாழ்வு மாறும் நேரம்

கதவோரம் நின்று கதை பேசி போன பின்னே புறம் புகன்று வெட்டி நியாயம் பேசி வீண் வம்பென்று வேதனை தருவித்து

நீயும் கனவும் எப்படி எத்துணை சாத்தியம் வாழ்க்கையில் பிடிப்பற்ற சிலர் தம் வார்த்தைகளால் அறிவு மொழி தந்தும்

முன்னேற்றத்திற்காய் முன்னின்று உழைத்த இந்த பெருமக்கள் எல்லோரும் நலன் பெற வேண்டி நம்முறவாவர்

என்ற நம்பிக்கையில் நாளும் கனவு கைகூட வேண்டும் என்று கற்பனை உலகில் வாழ்கிறேன்

ஏனென்றால் நிஜஉலகம் முளைச்சலவை செய்துவிடுமே !

கதிர்


தொலைந்திட்ட உறவே…!

எங்கென்றும் அறியாமல் ஏனென்றும் புரியாமல் காணாத உன்னையெண்ணி வெறும் செயல்களின் சாகியமாய்

உயிர்ப்பற்ற ஓவியமாய் – என் நிதர்சனம் மாறிப்போகிறது.

விரலே இல்லாத காற்றில் கண்ணீரை துடைத்து நரம்பறுந்த வீணையில் மீட்டுகிறேன்

சரிந்த உன் சரீரத்தை அவை முனங்கிப் போகிறது

முகாரியின் முற்றத்தில் ஒரே ஓலமாய் ஒலித்திடும் ஒழுக்கில் ஓரிடத்தில் ஓரமாய் இருந்து விட்டு ஓட்டி விடலாம்

வாழ்வை என்று ஓசைப்பட முடியவில்லை உறவுகள் மேல் ஆசைப்பட்ட மனதால் ஓத்துக்கொள்ள முடியவில்லை

வலி தந்த வடுக்களை வற்றாத தளைகளை சற்றேனும் ஆற்றிட சாகும் வரை சத்தியாக்கிரகம் செய்வேன்

தினம் என் மனம் சமர்ப்பிக்கும் மகிழ்ச்சி மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன. மாயும் வரை மகஜர் பயணம் மாளாது.

கதிர்


நான் தினம் வாழ்கின்ற வாழ்க்கை

பகல் வேஷக் கும்பல்களின் நடுவே மேலைத்தேய பங்குச் சந்தையில் பங்கிடப்படுகிறது

பண்பாடு ஏறுமாறான ஏல விற்பனையில் சோரம் போகிறது தன்மானம்.

அருகிவரும் அருமையானவை பட்டியலில் அடுத்து இணைந்து கொள்கிறது கலாசாரம்

சின்னங்கள் சிதைக்கப்பட்டு சின்னாபின்னமான பின்னே எண்ணங்களை கூட பின்னலாய் பிணைத்திட இயலவில்லை

இதைத்தினம் எண்ணி ஏங்கி மனம் பள்ளமாகிறது சிந்தனையுடன் உட்கார்ந்தே கற்கள் தேய்கிறது

– விடிவு பிறக்கும் வழி மாத்திரம் காண்கிலேன் பிறவிக்குருடனாய் வாழ்கிறேன்.

கதிர்


Get real time updates directly on you device, subscribe now.

You might also like