தேயாத முழு நிலவே …

தேயாத முழு நிலவே …

தேயாத முழு நிலவே …

காயாத புது மலரே – என்றும்

சாயாத என் காதலியே ….

உன்னைக் காணாது போயிருப்பின்

என்னை இழந்திருப்பேன் – ஏதிலியாய்

கிடந்திருப்பேன்!

 

ஆழியிலே ஓடிவரும் நீள நீல

அலைகளைப்போல் – என்

ஆவியிலே ஓடிவந்து

அன்பாலே கலக்கின்றாய் …..

மையல் கொண்ட மனத்தினிலே

வையம் செழிக்க வரும் வான் மழை போல்,

அன்பை பெய்ய வந்த பெரு நிதியே …

. உன்னை மட்டும் தான் எண்ணுது என் மதியே ….

இனி, பஞ்சணையில் நீயின்றிப் பற்றாது

எனைத் தூக்கம் – நெஞ்சறையில்

நீ இருப்பதால் இங்கில்லை ஏக்கம்!

 

உன் வளைவுகளை,

அழகிய நெளிவுகளை – என்னை

மையல் கொள்ளச்செய்யும்

உன் ஏற்ற இறக்கங்களை

எத்தனை எத்தனை முறை இரசித்திருப்பேன் ….

இந்த வயதில் ஏன் இந்த காதல் என்று

என்னைப் பலர் கேட்டதுண்டு,

மோகனமே உருவான உன்னிடத்தில் மூழ்கி நான்

கிடப்பதனால்,

முகஞ் சுழித்து சென்றவர்கள் தாராளம் !

உன்னிடத்தில் காலங்கள் கடத்தியதால்,

என்னிடத்தில் கோபங்கள் கொண்டவர்கள்

ஏராளம்!

ஏய் பெண்ணே….

கலங்கேன் நான்! – அந்த

இருட்டு அறையில் வாழும் குருட்டு

வெளவால்களுக்காக, வருந்தேன் நான்!

 

சொல் என்ற வில் வளைத்து,

கருத்தென்ற நாண் ஏற்றி,

கவி என்ற அம்பெடுத்து,

என் அகம் எங்கும் சுகம் துளைத்தவளே….

 

என்னைப்போல் எத்தனை காதலர்கள் உனக்கு?

எல்லோர் விருப்பங்களையும் பூர்த்தி

செய்கிறாய்….

உன் கன்னித்தன்மையில் கடுகளவும்,

களங்கம் வராமல்…..

உன் கரம் பற்ற, வரம் வேண்டி தவம் செய்யத்

தொடங்கிவிட்டேன்…..

 

இது இந்தக் காதலன் மடல் – உன்னையே

நினைக்கும் வேகும் போதும் இந்த உடல் …

எந்நாளும் என் முயற்சி உனை முழுதாய்த்

தொடல்… உன் பெயரே ஒலிக்கின்றது என் இதய

அறையெங்கும் …

தமிழ்….தமிழ்….தமிழ்….தமிழ்….தமிழ்…..

சஜீவன்