முன்னேஸ்வரம் திருக்கோவில் பற்றிய அதிசயிக்க வைக்கும் ஆலய வரலாறு …

முன்னேஸ்வரம் திருக்கோவில் பற்றிய அதிசயிக்க வைக்கும் ஆலய வரலாறு

முன்னேஸ்வரம் திருக்கோவில்

இலங்கைத் தீவின் பிரபலமான ஐந்து ஈஸ்வரம் திருக்கோயில்களுள் முன்னேஸ்வரமும் ஒன்று. இத் திருக்கோயிலும், வரலாற்றுக்கு முந்திய கால கட்டத்தில் உருவாக்கப்பட்டதாகவும், இராமாயண காலத்தில் உருவானதாகவும் பலவித கருத்துக்கள் நிலவுகின்றன.

இராமாயண காலத்தில், ஸ்ரீ இராம பிரான் இலங்கைத் தீவு வந்து இராவணனை எதிர்த்துப் போரிட்டு வெற்றிகண்டு, தனது மனைவி சீதா பிராட்டியை மீட்டுக்கொண்டதும், அவ் வெற்றிக்காக நன்றி தெரிவிக்க சிவபெருமானை இத்திருத்தலத்தில் வழிபட்டார் என்று கர்ண பரம்பரைக் கதைகள் கூறுகின்றன.

முன்னேஸ்வரம் திருக்கோயில், இலங்கைத்தீவின் மேற்குக் கரையோரத்தில், புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத் திருக்கோயில் முதன்முதலில் எப்போது, யாரால் கட்டப்பட்டது என்பது சர்ச்சைக்குரியதொரு விடயமாக உள்ளது.

ஆனால், இத் திருக்கோயில் இரண்டுமுறை சமய விரோதிகளால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது என்பது யாவரும் அறிந்த உண்மையாக உள்ளது.

பண்டைய சில கல்வெட்டுகளின்படி, சோழ மன்னன் குளக்கோட்டன், கோட்டை சிங்கள மன்னர்களான ஆறாவது பராக்கிரமபாகு, ஒன்பதாம் பராக்கிரமபாகு ஆகியோர் இத்திருக்கொயிளைச் சிறப்பித்துக் கட்டித் திருப்பணிகள் செய்ததாகவும், இக்கோயிலின் தாபரிப்புக்காக ஏராளமான வயல் நிலங்களை எழுதிவைத்ததாகவும் தெரிய வருகின்றது.

முன்னேஸ்வரம் திருக்கோயில் வளாகத்தில் நாம் பிரதான திருக்கோயிலான ஈஸ்வரன் கோயிலுடன் சேர்த்து, அதனைச் சுற்றி மேலும் பல சிறிய கோயில்களைக் காணக்கூடியதாக உள்ளது.

பிரதான திருக்கோயிலில் ஸ்ரீ முன்னைநாதப் பெருமான் என்னும் திருப்பெயருடன் சிவபெருமான் அழகும் கம்பீரமும் ஒருங்கே கொண்ட உயர்ந்த லிங்க வடிவில் காட்சியளிக்கின்றார்.

அவருக்கருகில், ஸ்ரீ வடிவாம்பிகா தேவி என்னும் திருப்பெயருடன் அன்னை பார்வதி தேவி காட்சியளிக்கின்றார்.
கோயில் வளாகத்தின் தென்கிழக்கு பகுதியில் விநாயகரும், வட கிழக்குப் பகுதியில் ஐயனாரும், வட பகுதியில் காளி தேவியும் சிறு திருக்கோயில்களில் அழகுமிகு தரிசனம் தருகின்றார்கள். திருக்கோயிலினுள்ளே, தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவ மூர்த்தி, அம்மன் ஆகிய தெய்வங்களின் திருவுருவங்களுடன், நவக்கிரகங்களும், அறுபத்துமூன்று நாயன்மார்களும் காட்சியளிக்கின்றார்கள்.

கோயிலின் எதிரே அழகும் விசாலமும் உடைய தீர்த்தக்குளமும், அதன் அருகே ஸ்தல விருட்சமான அரச மரமும் காட்சியளிக்கின்றன.

முன்னேஸ்வரம் திருக்கோயில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளையும் ஒருங்கே கொண்டதாக விளங்குகின்றது.

வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்தே தனிச் சிறப்பும், அருட்பெருக்கும் நிறைந்து விளங்கிய இத் திருக்கோயில் ஏனைய ஈழத்துத் திருக் கோயில்களைப்போலவே இலங்கைத் தீவைக் கைப்பற்றிய அன்னியரான போர்த்துக்கேயரால் 1517 ஆம் ஆண்டில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.

ஆயினும், இத்திருக்கோயிலின் பக்தர்களின் முயற்சியால், தெய்வ விக்கிரகங்கள் அன்னியரின் கைகளில் அகப்படாமல் பாதுகாக்கப்பட்டன.

போர்த்துக்கேயரின் ஆட்சி மறைந்து ஆங்கிலேயர்களின் ஆட்சி அமைந்தபின்னர் பல வருடங்களுக்குப்பின்னர், ஈழத்துச் சிவபக்தர்களின் தணியாத முயற்சியின் பயனாக முன்னேஸ்வரம் திருக்கோயில் சிவாகம விதிகளுக்கும், தென் இந்திய சிற்ப முறைகளுக்கும் இணங்க மீண்டும் நிர்மாணிக்கப்பட்டு, முந்தைய திருவுருவச் சிலைகள் யாவும் மீண்டும் அவற்றுக்கேயுரிய இடங்களில் ஸ்தாபிக்கப்பட்டு, கும்பாபிஷேகமும் 1753 ஆம் ஆண்டில் வெகு சிறப்பாக நிறைவேற்றப்பட்டது.

தற்போது, முன்னேஸ்வரம் திருக்கோயில் இலங்கையின் பிரதான சிவன் திருக்கோயில்களுள் ஒன்றாக விளங்குகின்றது.

மேலும், புத்தளம் மாவட்டத்திலும் அதனைச் சூழ்ந்துள்ள பிரதேசங்களிலும், தமிழ் இந்து மக்களுடன் சேர்ந்து சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வருவதனால், இத் திருக்கோயில் தற்போது அனைத்து சமய மக்களும் சாதி, மத, இன பேதமின்றி இறைவனை வழிபடும் ஒரு சிறந்த வழிபாட்டுத் தலமாக விளங்குகின்றது.

அனைத்து மதங்களைச் சார்ந்த மக்களும் இத்திருக்கோயிலுக்கு வந்து வழிபடுவதுடன், இத்திருக்கோயிலின் திருவிழாக்களில் முழுமையான ஈடுபாட்டுடன் கலந்து கொள்கின்றார்கள். சிங்கள மக்கள் காளி தேவியை மிகுந்த பக்தியுடன் வழிபடுவதையும், விரதங்கள் இருந்து அம்மனை வணங்குவதையும் சாதாரணமாகக் காணக்கூடியதாக உள்ளது.

நவராத்திரி, சிவராத்திரி ஆகிய இரு பண்டிகைகளும் இத் திருக்கோயிலில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. மேலும், ஒவ்வொரு வருடமும் ஆவணி – புரட்டாசி மாதங்களில், தொடர்ந்து 28 நாட்கள் இத்திருக்கோயில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இத்திருக் கோயிலைச் சுற்றியுள்ள மருதங்குளம், உடப்பு முதலிய பல கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஒன்று சேர்ந்து, ஒவ்வொரு நாளும் ஒரு கிராமமாக இத் திருவிழாவை வெகு சிறப்பாகவும், பக்தி சிரத்தையுடனும் கொண்டாடுகின்றார்கள். திருவிழாவின் இறுதியில் ஸ்ரீ முன்னைநாதப் பெருமானும், ஸ்ரீ வடிவாம்பிகா தேவி அம்மையும் கோயிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு தமது பக்தர்களுக்கு அருள் பாலிக்க, திருவிழா இனிதே நிறைவு பெறுகின்றது.