மீண்டும் வேப்ப மரத்தடியில் அமர்ந்த சாய்பாபா..!

இந்த பிரபஞ்சம் முழுவதும் என்னுள் இருக்கிறது என்று சாய்பாபா அடிக்கடி சொல்வார். அப்படிப்பட்டவர் சீரடியில் இனி நிரந்தரமாக தங்கி வாழ தீர்மானித்து விட்டார். ஆனால் சீரடியில் எங்கு தங்குவது என்பதுதான் அவர் முன் மிகப்பெரும் கேள்விக் குறியாக இருந்தது.

அப்போது சாய்பாபாவின் பார்வையில் கண்டோபா சிவாலயம் தெரிந்தது. அதைப் பார்த்ததும் சாய்பாபா முகம் மலர்ந்தது.

மகல்சாபதியிடம் அவர், ‘‘இந்த இடம் ஊரில் இருந்து ஒதுக்குப்புறமாக தனியாக உள்ளது. அமைதியான சூழலும் நிலவுகிறது. என்னைப் போன்றவர்களுக்கு இந்த இடம் மிகவும் இன்பம் அளிக்கக் கூடியது. ஆதலால் இங்கேயே வசிக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது’’ என்றார்.

இதை கேட்டதும் மகல்சாபதிக்கு அதிர்ச்சியாக இருந்தது. சாய்பாபா கூறியதில் அவருக்கு சற்றும் உடன்பாடு இல்லை. அவர் சாய்பாபாவை பார்த்து, ‘‘சாய்….. அது எப்படி சாத்தியமாகும்? நீங்களோ…. முஸ்லிம். இதுவோ இந்துக்களின் ஆலயம். நீங்கள் இங்கு தங்கினால் இந்த ஆலயத்துக்கு வரும் இந்துக்கள் என்ன நினைப்பார்களோ? என்றார்.

இதைக் கேட்டதும் சாய்பாபா வாய் விட்டு சிரித்தார். அவர் மகல்சாபதியிடம், ‘‘அய்யா, எங்கும் நிறைந்திருக்கும் கடவுள் ஒருவரா அல்லது பலரா? அவர் இந்துவா, முஸ்லிமா? சொல்லுங்கள் பார்க்கலாம்’’ என்றார்.

இதற்கு மகல்சாபதி நீண்ட விளக்கம் அளித்தார்….

‘‘பகவானே… நீங்கள் இளம் வயது தோற்றத்தில் வந்துள்ள தெய்வம். உங்களைப் பற்றி எனக்கு வேறு எதுவும் தெரியாது. நீங்கள் துறவிகளில் சிறந்தவர்.

நீங்கள் மீண்டும் சீரடிக்கு வந்திருப்பதை எனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகிறேன். என்னை நீங்கள் அங்கீகரித்து உங்கள் பக்தனாக ஏற்றுக் கொள்ள வேண்டும். எப்போதும் நான் உங்கள் சிஷ்யனாகத் திகழ வேண்டும்.

உங்கள் பாதங்கள் பட்டதால் சீரடி மகா பாக்கியம் செய்த ஊராக மாறியுள்ளது. கிருஷ்ணர் மதுராவில் பிறந்து கோகுலம் வந்தார். அவ்வாறே தாங்களும் இங்கு வந்திருக்கிறீர்கள்.

என்றாலும் நீங்கள் கண்டோபா ஆலயத்தில் தங்கியிருக்க நினைப்பது சரியானது அல்ல. உங்கள் மனம் பிரம்மத்தையே நினைத்துக் கொண்டிருக்கக் கூடியது. நீங்கள் இங்கு தங்கும்பட்சத்தில் எனக்கும் கண்டோபா ஆலயத்துக்கும் நிச்சயம் புகழ் தேடி வரும். அதில் சந்தேகமே இல்லை.

ஆனால் இந்த ஊர் மக்களுக்கு பக்குவம் போதாது. உங்களையும், இந்த ஆலயத்தையும் கேலி, கிண்டல் செய்வார்கள். எல்லாரும் உங்களை நாடி வந்து பயன்பெற வேண்டும். அதற்கு நீங்கள் இந்த இடத்தை விடுத்து வேறு இடத்துக்கு செல்வதே நல்லது’’ என்றார்.

மகல்சாபதி வார்த்தைகளில் உண்மை இருப்பதை சாய்பாபா உணர்ந்தார். கடவுளிடத்தில் பேதம் இல்லையென்றாலும், தான் கண்டோபா ஆலயத்தில் அமர்ந்தால், அது யாருக்கேனும் சங்கடத்தை ஏற்படுத்தலாம் என்று சாய்பாபா கருதினார். எனவே கண்டோபா ஆலயத்தில் தங்கும் முடிவை சாய்பாபா கைவிட்டார். அப்படியே திரும்பிப் பார்த்தார். அடுத்து அவர் பார்வையில் அந்த வேப்ப மரம் தென்பட்டது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 16 வயது இளம் பாபாவாக சீரடிக்கு முதன்முதலாக பாபா வந்த போது அந்த வேப்பமரம்தான் உறைவிடமாக இருந்தது. தன் குரு அங்கு இருப்பதாக சாய்பாபா கூறியுள்ளார். அதோடு பூமியை தோண்ட செய்து அதை நிரூபித்தும் காட்டினார். அத்தகைய சிறப்புக்குரிய அதே வேப்ப மரம் மீண்டும் பாபாவை அழைப்பது போல இருந்தது. சாய்பாபா அந்த வேப்ப மரத்தடியை நோக்கி நடந்தார்.

முன்பு தங்கியிருந்த வேப்பமரத்தடியின் அதே பகுதியில் சாய்பாபா அமர்ந்தார். அந்த மரம் மீண்டும் புனிதம் பெற்றது. மகல்சாபதி உள்பட தன்னைப் பின் தொடர்ந்து வந்தவர்களை அவரவர் வீட்டுக்கு செல்லுமாறு உத்தரவிட்டார். பிறகு சலனமற்ற மனதுடன் ஐம்புலன்களையும் அடக்கி அப்படியே ஆழ்ந்த நிஷ்டைக்கு சென்று விட்டார்.

அவர் அமர்ந்திருந்த கோலம், அப்படியே கல்லாய் மரத்தின் கீழ் தெட்சிணாமூர்த்தி அமர்ந்திருந்தது போலவே இருந்தது. பகல் நேரங்களில் சீரடி அருகில் உள்ள ஊர்களுக்கும், காட்டுப் பகுதிக்கும் சென்று விடும் சாய்பாபா, இரவில் தவறாமல் வேப்ப மரத்தடிக்கு வந்து விடுவார். சாய்பாபாவின் உறைவிடமாக மாறியதால் நாளடைவில் அந்த வேப்பமரமும் மங்களம் பொருந்தியதாக மாறியிருந்தது.
இதனால் சீரடி ஊர் மக்கள் அந்த வேப்ப மரத்தை புனிதமாக கருதிப் போற்றினார்கள். அப்போது ஒரு நாள், அந்த வேப்ப மரத்துக்கும் சாய்பாபா அருள் செய்து இருப்பது சீரடி மக்களுக்கு தெரிய வந்தது.

வேப்ப மரத்தின் எந்த பக்கத்தில் சாய்பாபா அமர்ந்தாரோ அந்த பக்கத்தில் உள்ள வேப்பிலைகள் அனைத்தும் இனிப்பாக மாறி இருந்தது. அதாவது அந்த வேப்ப மரத்தின் ஒரு பக்க இலைகள் கசப்பாகவும், மற்றொரு பக்க இலைகள் இனிப்பாகவும் மாறி இருந்தன.
ஒரே வேப்பமரத்தில் எப்படி ஒரு பகுதி வேப்பிலைகள் கசப்பாகவும் மற்றொரு பகுதி இலைகள் இனிப்பாகவும் இரு விதமாக இருக்க முடியும்? சாய்பாபா நிகழ்த்திய அற்புதமாக இதை சீரடி மக்கள் கருதினார்கள்.

சீரடிக்கு சாய்பாபா வருவதற்கு முன்பு அந்த வேப்பமரத்தின் அனைத்துப் பகுதி இலைகளும், கசப்பு தன்மையுடன் தாரணமானதாகத்தான் இருந்தது. பாபா பார்வை பட்டதும் இனிப்பாக மாறியது. இந்த இனிப்பு இலை சுவையுடன் அந்த வேப்பமரம் இப்போதும் புனிதமாக திகழ்கிறது. அதனால்தான் அந்த இனிப்பு இலைகளை பக்தர்கள் பாபாவின் ஆசியாக கருதி போற்றுகிறார்கள்.

சாய்பாபாவால் அந்த வேப்பமரம் புனிதம் அடைந்தது போல, சீரடியில் அவர் பாதம் பட்ட இடங்களும் சிறப்புப் பெற்றன. மக்கள் தினமும் அலை, அலையாக வந்து அவரிடம் பணிந்து பயன்பெற்றனர்.

சீரடிக்கு மீண்டும் அவர் வந்த போது, முதல் சில தினங்களுக்கு அவர் யாரிடமும், எதுவும் கேட்கவில்லை. உணவை கூட அவர் யாரிடமும் எதிர்பார்க்கவில்லை.

அந்த சமயத்தில் சீரடியைச் சேர்ந்த தத்யா கோடேயின் தாயான பாயாஜிபாய் என்பவர் சாய்பாபாவிடம் எல்லையற்ற அன்பு காட்டினார். பாபா சாப்பிடாமல் அவர் சாப்பிட மாட்டார். அந்த அளவுக்கு அவர் சாய்பாபா மீது அன்பு செலுத்தினார்.

பகல் நேரங்களில் பாபா காடுகளுக்குள் சென்று விடுவார் என்றாலும் பாயாஜிபாய் விட மாட்டார். செடி, கொடி, புதர்களுக்கிடையே பாபாவை தேடி கண்டுபிடித்து உணவு கொடுப்பார்.

ஒருநாள் காட்டுக்குள் எங்கு தேடியும் சாய்பாபாவை பாயாஜிபாயால் கண்டுபிடிக்க முடியவில்லை. நீண்ட தேடலுக்குப் பிறகு பாபா ஒரு மரத்தடியில் மிக, மிக, ஆழ்ந்த தியானத்தில் இருப்பது தெரிந்தது.

அவருக்கு தன் கையால் பாயாஜிபாய் உணவூட்டினார். அதை சாப்பிட்ட சாய்பாபா மெல்ல கண் திறந்து பார்த்தார்.

எதிரே முகம் மலர பாயாஜிபாய் இருப்பதை கண்டார். ‘‘அம்மா…. நீங்கள் சாப்பிட்டீர்களா?’’ என்று கேட்டார்.

அதற்கு பாயாஜிபாய், ‘‘உனக்கு உணவு தராமல் நான் சாப்பிடுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்’’ என்றார். அதை கேட்டதும் பாபா உள்ளம் நெகிழ்ந்தது.

‘‘அம்மா… இனி நான் உங்களை கஷ்டப்படுத்த மாட்டேன். என்னைத் தேடி இனி காடுகளில் அலைய வேண்டாம். நான் வேப்பமரத்தடியிலேயே தங்கி இருக்கிறேன்’’ என்றார்.

சொன்னது போலவே சாய்பாபாவின் நிரந்தர வாசஸ் தலமாக அந்த வேப்பமரத்தடி மாறியது. மரத்தடியில் நிஷ்டையில் ஆழ்ந்த பாபாவின் தோற்றங்களில் நாட்கள் செல்ல, செல்ல மாறுதல் ஏற்பட்டது.

அவரது காந்த கண்களும் வசீகரமான சிரிப்பும், தெய்வீகமான முகமும், அருள் வழங்கிய கருணையும், செய்து காட்டிய அற்புதங்களும் சீரடி மக்களை வெகுவாக கவர்ந்தன. பக்கிரி என்று அழைத்து வந்த சீரடி மக்கள் அவரை நம்பிக்கையோடு பாபா என்று அழைக்கத் தொடங்கினார்கள்.

சிறுவர்கள் மட்டும் அவரை பைத்தியம் என்று சொல்லி சில சமயம் கல் வீசி தாக்கியதுண்டு. பிறகு சிறுவர்களும் பாபாவின் அன்புக்குரியவர்களாக மாறினார்கள்.

சீரடியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் சாய்பாபா உதவி செய்தார். நீண்ட நாட்கள் வேப்ப மரத்தடியில் அமர்ந்து அவர் அருளினார்.
அந்த வேப்பமரத்தடிதான் இப்போது குருஸ்தான் என்று போற்றி வழிபடப்படுகிறது.

எத்தனை நாட்களுக்குத்தான் அந்த வேப்ப மரத்தடியில் இருப்பது? அருகே இருந்த மசூதிக்கு செல்ல சாய்பாபா முடிவு செய்தார். அதற்கு தன்னைத்தானே மழை வெள்ளத்தில் மூழ்கடித்துக் கொண்ட ஒரு அற்புதத்தை சாய்பாபா நிகழ்த்தினார்.