மரணம் அடைந்த பெண்ணுக்கு உயிர் கொடுத்த சாய்பாபா

“சீரடி என்பது உன் வீடு. இங்கே நீ எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் தங்கலாம். உன்னை யாரும் கேள்விக் கேட்க முடியாது. உன்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது- எதற்கும் நீ கவலைப்படாதே. என் மீது முழு நம்பிக்கை வை. நான் பார்த்துக் கொள்கிறேன்”- சாய்பாபா.

இந்த வாக்குறுதியை அடிக்கடி தன் பக்தர்களிடம் பாபா தெரிவிப்பதுண்டு. சிலர் சீரடிக்கு செல்லும் போது, மற்றவர்கள் அழைத்தார்களே என்று செல்வதுண்டு. ஆனால் அவர்கள் வீடு திரும்பும்போது முழுமையான சாய் பக்தராக மாறி இருப்பார்கள். சீரடி தலம் அவர்களை ஈர்த்து தன்னுள் ஐக்கியமாக்கி விடும்.

பாபாவின் காலடி தடம் பட்டதால் புண்ணிய தலமாக, புனிதத் தலமாகத் திகழும் சீரடிக்கு சென்ற ஒவ்வொருவருக்கும் நிச்சயம் ஒவ்வொரு விதமான அனுபவம் ஏற்பட்டது. இப்போதும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. 1907-ம் ஆண்டு ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட அனுபவம், பாபாவின் ஆற்றலை உலக மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அந்த பெண் பாபாவின் தீவிர பக்தை ஆவார். பாபா உயிரோடு இருந்தபோது அவரது மனம் கவர்ந்த பக்தர்களில் ஒருவராக ரத்தன் ஜங்கர் என்ற பக்தர் இருந்தார். அவரது உறவினரான அந்த பெண் நேரில் பாபாவை பார்க்காமலே அவர் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார்.

சீரடிக்கு சென்று பாபாவை தரிசனம் செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக அவள் மனதில் ஆசை அலையடித்துக் கொண்டிருந்தது. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவளை சீரடிக்கு செல்ல விடாமல் தடுத்துக் கொண்டிருந்தன. இத்தனைக்கும் அவள் வசித்த கிராமம் சீரடிக்கு அருகில் உள்ள கிராமம்தான்.

ஒருநாள் திடீரென அவள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டாள். நன்றாக நடமாடி கொண்டிருந்தவள், படுத்த படுக்கையானாள். அவளை பரிசோதித்த டாக்டர், “இனி இவள் பிழைக்க மாட்டாள். இன்னும் ஓரிரு நாட்களில் செத்து விடுவாள்” என்றார். அவள் குடும்பத்தினர் கண்ணீர் விட்டுக் கதறினார்கள். ஆனால் அந்த பெண் மனதில் மட்டும் எந்த சலனமும் இல்லை.

அவள் தன் உறவினர்களிடம், “எனக்கு சீரடி சென்று பாபாவை தரிசிக்க வேண்டும் என்று மிகவும் ஆசையாக உள்ளது. ஒரே ஒரு தடவை என் கண் குளிர பாபாவை பார்த்து விட்டால், நிம்மதியாக உயிரை விட்டு விடுவேன்” என்றாள். அவளது கடைசி ஆசையை நிறைவேற்ற உறவினர்கள் முடிவு செய்தனர். நார்க் கட்டிலில் அவளைப் படுக்க வைத்து சீரடிக்கு தூக்கி வந்தனர்.

வழக்கம் போல பாபா துவாரகமாயி மசூதியில் அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். கட்டிலில் ஒரு பெண்ணை கிடத்தி சிலர் கூட்டமாக வருவதைப் பார்த்ததும், பாபா புருவத்தை உயர்த்திப் பார்த்தார். பாபா முன்பு அவர்கள் கட்டிலை இறக்கி வைத்தனர். பாபா “என்ன?” என்பது போல அவர்களைப் பார்த்தார். கட்டிலைத் தூக்கி வந்தவர்கள், அந்த பெண் பற்றியும், அவளுக்கு ஏற்பட்டுள்ள நோய் பற்றியும், அவளது கடைசி ஆசை பற்றியும் விளக்கமாக கூறினார்கள். பாபா அவளைப் பார்த்தார்.

பாபாவைப் பார்த்தும் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. அவளை கருணையோடுப் பார்த்த பாபா முகத்தில் வேதனை ஏற்பட்டது. அவளது உறவினர்களைத் திரும்பிப் பார்த்தார். அவரால் கோபத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை. “உயிர் பிரியும் தருவாயில் உள்ள ஒரு பெண்ணை இப்படியா அழைத்து வருவது?” என்று கத்தினார். திட்டினார். அந்த பெண்ணின் உறவினர்கள், பாபாவிடம் காணப்பட்ட சீற்றத்தைக் கண்டு ஒரு நிமிடம் மிரண்டு போனார்கள்.

ஓரிரு நிமிடங்களில் பாபாவின் கோபம் சூரியனைக் கண்ட பனி போல மறைந்து போனது. அவர் அந்த பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “பாபா… அவள் ஓரிரு நாளில் இறந்து விடுவாள் என்று எங்கள் எல்லோருக்கும் தெரியும். அவளுக்கும் தெரியும்.

ஆனால் அவள் அதற்குள் உங்களை தரிசிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் தான் இங்கே தூக்கிக் கொண்டு வந்தோம். அவள் உங்களை தரிசித்து விட்டாள். அவளது கடைசி ஆசை நிறைவேறி விட்டது. இனி கவலை இல்லை. இப்போதே நாங்கள் அவளை எங்கள் கிராமத்துக்கு தூக்கிக் கொண்டு சென்று விடுகிறோம்“ என்றார். அவரைப் பார்த்த பாபா, “இப்போது வேண்டாம். நான் எப்போது அனுமதி கொடுக்கிறேனோ அப்போது நீங்கள் சீரடியில் இருந்து புறப்படலாம்” என்றார்.

அதை அந்த பெண்ணின் உறவினர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து பாபா ஒரு படுக்கை விரிப்பை எடுத்து தரையில் விரித்தார். பிறகு, “இந்த பெண்ணை கட்டிலில் இருந்து இறக்கி படுக்கை விரிப்பில் படுக்க வையுங்கள்” என்றார். அதன்படி அந்த பெண் துணி விரிப்பில் படுக்க வைக்கப்பட்டாள். அவள் மீது உதியை தூவிய பாபா, “இவளை அருகில் உள்ள கூடாரத்தில் வைத்திருங்கள். இவளுக்கு குடிக்க தண்ணீர் மட்டும் கொடுங்கள். வேறு எதுவும் கொடுக்க வேண்டாம்“ என்றார்.

பாபா சொன்னது போல அந்த பெண்ணுக்கு தண்ணீர் மட்டும் கொடுக்கப்பட்டது. ஒரு வாரம் உருண்டோடிய நிலையில், அந்த பெண் சற்றுத் தெம்பானாள். அவள் முகம் பிரகாசமாக மாறியது. அவள் உயிர் பிழைத்துக் கொள்வாள் என்று உறவினர்கள் அனைவரிடமும் நம்பிக்கை ஏற்பட்டது.

8-வது நாள் அவள் எழுந்து உட்கார்ந்து விடுவாள் என்று எதிர்பார்த்தனர். ஆனால் நடந்ததோ வேறு. அவள் 8-வது நாள் தண்ணீர் குடிக்கவில்லை. படுத்த படுக்கையிலேயே அவள் உயிர் பிரிந்து விட்டது. உறவினர்கள் கதறி அழுதனர். அந்த பெண்ணை சீரடியிலேயே புதைத்து விட்டு செல்ல முடிவு செய்தனர். இதுபற்றி மற்ற உறவினர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதிகாலையிலேயே உறவினர்கள் திரண்டு விட்டனர். அந்த பெண்ணின் உடம்பை தூக்கிச் செல்வதற்கான இறுதிச் சடங்கு கள் நடந்து கொண்டிருந்தது. அதே சமயம் சாவடியில் இருந்த பாபா, படுக்கையில் இருந்து எழுந்து வராமல் இருந்தார். அதிகாலையிலேயே கண் விழித்து பணிகளைத் தொடங்கி விடும் பாபா ஏன் இன்னும் படுக்கையில் இருந்து எழுந்திருக்காமல் உள்ளார் என்று பக்தர்கள் ஆச்சரியத்துடன் பேசிக் கொண்டிருந்தனர்.

அதே நேரத்தில், சற்றுத் தொலைவில் கூடாரத்தில் பிணமாக கிடந்த அந்த பெண் உடம்பில் லேசான அசைவு காணப்பட்டது. உறவினர்கள் அதிர்ச்சியுடன் பார்க்க, அவர்கள் கண் முன்பு அந்த அதிசயம் நடந்தது. செத்துப் போனதாக கருதப்பட்ட அந்த பெண் கண் விழித்தாள். சுற்றும் முற்றும் பார்த்தாள். அடுத்த நிமிடம் எழுந்து உட்கார்ந்தாள்.

உறவினர்களுக்கு நம்ப முடியவில்லை. ஒரு வேளை பேயாக வந்து விட்டாளோ என்று கூட பயந்தனர்.

அந்த பெண் பேசத் தொடங்கினாள்…..

“நான் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது, கருப்பாக ஒரு உருவம் வந்து என்னைப் பிடித்தது. அது என்னை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு போனது. நான் எவ்வளவோ அழுதும், அந்த கருப்பு உருவம் என்னை விடவில்லை. இதனால்தான் எனக்கு உடல் நலம் இல்லாமல் போய் விட்டது.

சீரடிக்கு வந்ததும் அந்த உருவம் என்னை நெருங்க பயப்பட்டது. எப்படியோ அந்த உருவம் நேற்று என்னை மீண்டும் பிடித்துக் கொண்டது. என்னை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல முயன்றது. அப்போது பாபா அங்கு வந்தார். அந்த கருப்பு உருவத்தை அடித்து விட்டினார். இவளை விட்டுவிடு என்று சொல்லி திரும்ப, திரும்ப அடித்தார்.

பாபாவின் அடியை தாங்க முடியாத அந்த உருவம் என்னை விட்டு விட்டது. பிறகு இங்கிருந்தே ஓடி விட்டது. என்னை யாரோ சிலர் இங்கே அழைத்து வந்தனர். பாபாதான் என்னைக் காப்பாற்றி என் உயிரை மீட்டுக் கொடுத்துள்ளார்.

இவ்வாறு கூறி விட்டு அவள் கண்ணீர் விட்டு கதறினாள். அதே நேரத்தில் சாவடியில் இருந்த பாபா கண் விழித்தார். வெளியில் வந்த அவர் ஆக்ரோஷமாய், தான் வைத்திருந்த கம்பால் தரையில் ஓங்கி, ஓங்கி அடித்தார். “இங்கிருந்து ஓடு… ஓடு….. என்று கூச்சலிட்டார். பிறகு பாபா அந்த குடில் நோக்கி வந்தார். உயிர் பிழைத்து எழுந்து உட்கார்ந்திருந்த பெண்ணைப் பார்த்தார். அவர் முகம் பிரகாசமானது. சிரித்துக் கொண்டே அந்த பெண்ணுக்கு பாபா ஆசீர்வாதம் செய்தார்.

“உன் விதி மாற்றப்பட்டு விட்டது. இனி நீ எப்போது வேண்டுமானாலும் சீரடியில் இருந்து புறப்பட்டுச் செல்லலாம்“ என்றார். அதை கேட்டு பரவசத்தால் கண்ணீர் விட்ட அந்த பெண் பாபா காலடியில் விழுந்து வணங்கினாள். அவளோடு அவள் உறவினர்கள் அனைவரும் பாபா காலடியில் விழுந்தனர்.

மெய் சிலிர்த்து போய் இருந்த அவர்கள் அனைவருக்கும் பாபா ஆசி வழங்கி விடை கொடுத்தார். பாபாவால் ஒரு பெண் மீண்டும் உயிர் பெற்றாள் என்ற தகவல் சீரடி முழுவதும் பரவியது. பக்கத்து கிராமங்களிலும் இதுபற்றி பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் மக்கள் அலை, அலையாக வந்து பாபாவை தரிசித்து சென்றனர். ஆனால் பாபா எந்த சலனமும் இல்லாமல், தன்னை நாடி வந்த ஒவ்வொரு பக்தனையும், அவனையும் அறியாமல், அவனுக்குள் ஊடுருவி ஆசீர்வதித்தார்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like