சாப்பிடாமல் இருக்காதீர்கள்… இதை நான் விரும்புவதே இல்லை – சீரடி சாயிபாபா வாக்கு

‘’சாப்பிடாமல் இருக்காதீர்கள். இதையெல்லாம் நான் ஒருபோதும் விரும்புவதே இல்லை’’ என்று ஷீர்டி சாயிபாபா அருளியிருக்கிறார்.

மகான்கள் என்பவர்கள் தெய்வச் சாயல் கொண்டவர்கள். தெய்வங்களின் பிரதிநிதியாகவே திகழ்பவர்கள். ஒரு கட்டத்தில், மனித வடிவின் தெய்வமாகவே இருந்து அருள்பாலிப்பவர்கள். எல்லாக் காலத்திலும் ஆபத்பாந்தனைப் போல், மகான்கள் இப்படியாகத் தோன்றியவண்ணம் இருந்திருக்கிறார்கள். மக்களை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவர்களுக்கு நேரில் ஆசி வழங்கியிருக்கிறார்கள்.

பூவுலகில், இப்படி மகான்கள் செய்த அருளாடல்கள் ஏராளம். அப்படியொரு மகத்தான மகானாக இன்றைக்கும் பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் ஷீர்டிநாதன் என்று போற்றப்படும் சாயிபாபா.

ஷீர்டி என்பது பாபாவால் புண்ணியத் தலமாயிற்று. ஷீர்டி என்பது மக்களின் குறைகளைக் களையும் அதிர்வுள்ள தலம் என்று இன்றைக்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. சாயிபாபா நடந்த, அமர்ந்த பூமியில் இருந்து பிடிமண்ணெடுத்து வந்து இந்தியாவின் பல இடங்களிலும் தமிழகத்தின் பல ஊர்களிலும் சாயிபாபாவுக்கு கோயில்கள் எழுப்பப்பட்டுள்ளன.

’எங்கெல்லாம் எனக்காக கூடுகிறீர்களோ அங்கெல்லாம் வந்து உங்களின் துயரங்களைப் போக்குவேன்’’ என அருளியுள்ளார் சாயிபாபா.

சாயிபாபா என்பவர், ஞானகுரு. குருவுக்கு உகந்தநாளிலோ அல்லது வேறு எந்தக் கிழமையிலோ பாபாவை நினைத்து, தங்களின் கஷ்டங்களை துயரங்களை வேண்டிக்கொள்கிறார்கள் பக்தர்கள். அப்போது எண்ணற்ற பக்தர்கள், விரதங்கள் மேற்கொள்கின்றனர். ‘என் வாழ்க்கையில் திக்குத்திசை தெரியாமல், கரை தெரியாமல் கப்பலென தள்ளாடுகிறது. பாபாவைப் பற்றிக்கொண்டு சாப்பிடாமல் கொள்ளாமல் விரதமிருக்கிறோம்’ என்கிறார்கள்.

இப்படி வாரந்தோறும் பாபா பக்தர்கள், விரதம் மேற்கொள்வது அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. அதேசமயம், பாபாவை நோக்கி பிரார்த்திக்கும் நாட்களில், விரதம் மேற்கொள்ளும் நாட்களில், உண்ணாநோன்பு இருக்கவேண்டுமா என்கிற சந்தேகமும் பலருக்கு இருக்கிறது.

‘எனக்காக, என்னை அழைப்பதற்காக, என்னுடைய பக்தர்கள் பசியுடன், சாப்பிடாமல் இருக்காதீர்கள். உள்ளத்தை ஒருங்கிணைப்பதுதான் வழிபாடு. உடலை வருத்திக்கொள்வது வழிபாடாகவோ பிரார்த்தனையாகவோ இருக்காது. இப்படி எனக்கு உரியவர்கள், பசியுடன் இருப்பதை நான் ஒருபோதும் விரும்புவதில்லை’’ என அருளியுள்ளார் ஷீர்டி சாயிபாபா.

மனமொன்றி பாபாவை சரணடைந்தால் போதும். பாபா, நம் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் துயரங்களையும் வேதனைகளையும் உடனே களைந்தெடுப்பார். கவலைக்கு மருந்தெனத் திகழ்வார். துக்கத்தையும் வேதனையையும் அடியோடு விரட்டி அருளுவார்.

நம் எல்லா இன்னல்களையும் போக்குவதற்கு உபவாசம் இருப்பது முக்கியமே அல்ல. சாப்பிடாமல் இருப்பது பக்தி அல்ல. பாபாவிடம் முறையிட வேண்டும். மனமொன்றி, மனமொருமித்து முறையிட வேண்டும். ‘பாபா வருவார், நம் சகல துன்பங்களையும் போக்குவார்’ என்று ஆழ்மனதில் நம்பிக்கையுடன் எவரொருவர் அழைக்கிறாரோ… அங்கே பாபா வருவார்; சகல செளபாக்கியங்களையும் தருவார்.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles