புலிகளும் பாலகுமாரனும்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 03

பீஷ்மர்

பாலகுமாரன் விடுதலைப்புலிகள் அமைப்பில் ஒரு கௌரவ உறுப்பினராக இருந்தார். பாலகுமாரனிற்கு புலிகள் கொடுத்த பணியென்றால் அது இறுதி யுத்த சமயத்தில்த்தான். ஆட்சேர்ப்பு. கட்டாய ஆட்சேர்ப்பிற்கு முதற்படியாக வன்னியை வலயங்களாக பிரித்து ஒவ்வொரு முக்கியஸ்தரை பொறுப்பாக நியமித்தார்கள். உடையார்கட்டு பகுதியில் பாலகுமாரன் செயற்பட்டார். வீதியில் செல்லும், வீடுகளில் உள்ள இளைஞர் யுவதிகளை ஒரு இடத்தில் ஒன்றாக சேர்த்து தீவிர பிரசாரம் செய்வார்கள். பாலகுமாரன் அதில் தீவிரமாக ஈடுபட்டார்.

பாலகுமாரன் வங்கி முகாமையாளராக இருந்தவர். புலோலி வங்கியில் பணிபுரிந்தார். புலோலி வங்கி கொள்ளையுடன் சிறைக்கு சென்று, விடுதலை அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட தொடங்கிவிட்டார்.

வடமராட்சியின் மந்திகை பகுதியை சேர்ந்தவர் பாலகுமாரன். இடதுசாரி கருத்துக்களில் ஈடுபாடாகி, சீனசார்பு இடதுசாரி கட்சியுடன் நெருக்கமாக செயற்பட்டும் வந்தார். சமூக அக்கறை கொண்டவராகவும் விளங்கினார். அந்த சமயத்தில் ஆயுதவழியில் நம்பிக்கை கொண்ட இளைஞர்கள் உருவாக தொடங்கிவிட்டனர். ஆயுதவழியில் ஈர்ப்புள்ள இளைஞர்கள் எல்லா கிராமங்களிலும் கணிசமாக உருவாகிவிட்டனர். அப்படியான எண்ணமுடைய இளைஞர்களை சந்திக்கும்போது பாலகுமாரன் கொடுக்கும் ஆலோசனை, முதலில் உயர்தரம் வரை படித்து முடித்துவிட்டு அரசியலில் இறங்குங்கள். அரசியலிற்கு இறங்கும்போது முதிர்ச்சி அவசியம் என்பது.

வங்கி முகாமையாளராக இருந்தாலும், சமூக அக்கறை காரணமாக பகுதி நேரமாக சமூகக்கல்வி, வரலாறு கற்பித்துக் கொண்டுமிருந்தார். மந்திகை பகுதியில் இயங்கிய யாழ்ரன் என்ற தனியார்கல்வி நிறையத்திலும், வேறு சில இடங்களிலும் பகுதிநேரமாக கற்பித்தார். இதை வருமானம் ஈட்டும் தொழிலாக செய்யவில்லை. இப்படியாக பாலகுமாரனின் வாழ்வு நகர்ந்து கொண்டிருந்தது.

இந்த இடத்தில் ஒரு பின்னோக்கிய பார்வைக்கு செல்ல வேண்டும். அகிம்சைவழியால் எந்த தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியாதென தீர்மானித்த இளைஞர்கள் 1970 களின் தொடக்கத்தில் தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர். பாரம்பரிய தமிழ் அரசியல்வாதிகளின் போக்கு விடுதலைக்கு உதவாதென பகிரங்கமாக பேச தொடங்கி, பின்னாளில் பிரபல்யமான விடுதலை அமைப்புக்களின் தலைவர்கள் அப்போது சிறிய குழுக்களாக இயங்க தொடங்கினார்கள். சத்தியசீலன், பிரபாகரன், சிறீசபாரத்தினம், குட்டிமணி, தங்கத்துரை, பத்மநாபா போன்றவர்கள் அவர்களில் சிலர்.

அப்போது இளைஞர்களிற்கு புகலிடமாக இருந்தது தமிழ் மாணவர் பேரவை. அவர்கள் தமிழர்விடுதலைக்கூட்டணியின் செயற்பாடுகளிற்கு இடையூறாக இருக்கிறார்கள் என, தமிழர் விடுதலைக்கூட்டணியின் மறைமுக ஆதரவுடன் தமிழ் இளைஞர் பேரவை ஆரம்பிக்கப்பட்டது. எனினும், இளைஞர் பேரவை ஆரம்பித்த சில வருடங்களிலேயே குழப்பங்கள் ஆரம்பித்துவிட்டது. தமிழர் விடுதலைக்கூட்டணியின் செல்லப்பிள்ளையாக செயற்படுகிறதென்ற அதிருப்தி உறுப்பினர்களிற்கிடையில் எழ ஆரம்பித்தது. விளைவு, 1975 இல் பேரவையிலிருந்து பலர் வெளியேறி ஈழவிடுதலை இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்தனர். புஸ்பராசா, முத்துக்குமாரசாமி, சுந்தர், வரதராஜபெருமாள் போன்றவர்கள் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். யாழ் நகரத்திலுள்ள ரிம்மர் மண்டபத்தில் மாநாடு நடத்தி, தமிழீழ விடுதலை இயக்கம் பற்றிய பகிரங்க அறிவித்தலை வெளியிட்டனர்.

எரிமலை என்ற வாராந்த பத்திரிகையையும் வெளியிட்டுக் கொண்டிருந்தனர். இந்த சமயத்தில் 1975 இன் பிற்பகுதியில் யாழ்ப்பாண மேயர் துரையப்பா சுட்டுக்கொல்லப்பட்டார். யாழ்ப்பாணத்தில் நடந்த நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டில் பதினொருவர் கொல்லப்பட்டதற்கு துரையப்பாதான் காரணம், அவர் கொல்லப்பட வேண்டியவர்தான் என்ற கருத்தை தமிழர்விடுதலைக்கூட்டணி மேடை தோறும் பரப்பி வந்தது. இந்த சமயத்தில் துரையப்பா கொல்லப்பட்டார். துரையப்பாவை கொன்றது இளைஞர் பேரவை, தமிழீழ விடுத இயக்கங்களை சேர்ந்தவர்களாகத்தான் இருக்கலாமென கருதிய பொலிசார் இரண்டு அமைப்புக்களின் உறுப்பினர்களையும் தேடித்தேடி வேட்டையாடினார்கள்.

தமிழீழவிடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் பெரும்பாலானவர்கள் கைதாகி சிறைக்கு சென்றனர். அதன் மத்தியகுழுவிலிருந்த இரண்டு பேரும், செயற்பாட்டாளர்கள் சிலரும்தான் தப்பித்து தலைமறைவாக இருந்தனர்.

ஏற்கனவே வாராந்தம் எரிமலையென்ற சஞ்சிகையையும் வெளியிடுகிறார்கள். தலைமறைவு வாழ்க்கைக்கும் பணம் தேவை. பெரும் பணத்தட்டுப்பாடு. என்ன செய்யலாமென யோசித்தபோதுதான் வங்கிக்கொள்ளைக்கு திட்டமிட்டமிட்டார்கள். அவர்கள் தேர்ந்தெடுத்தது புலோலி வங்கி. பாலகுமாரன் முகாமையாளர்.

ஈழவிடுதலை இயக்க உறுப்பினர்கள் பாலகுமாரனை சந்தித்து பேசினார்கள். தீவிர எண்ணமுடைய இளைஞர்களுடன் அவருக்கிருந்த அபிமானம் காரணமாக விடயம் சுலபமாக முடிந்தது. குறிப்பிட்ட தினமொன்றில் வங்கியை கொள்ளையிட அனுமதித்தார். அந்த வங்கியில் பாலகுமாரன் தவிர்ந்த இன்னும் இரண்டு பணியாளர்கள் இருந்தார்கள். அவர்களிற்கு விடயம் தெரியாது.

வங்கிக்கொள்ளையின் பின்னர் காவல்த்துறை தீவிர விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தது. பாலகுமாரனிற்கு விடயம் ஏற்கனவே தெரியும். அதனை பொலிசார் கண்டறிந்து சிறை சென்றார். பின்னர் ஈரோஸ் அமைப்புடன் செயற்பட்டார். ஈரோஸ் அமைப்பில் இருந்தபோது அவர் இயக்கங்களுடன் ஏட்டிக்குப்போட்டியான அணுகுமுறை கொண்டவரல்ல. அதனால் 1990இல் ஈரோஸை கலைத்துவிட்டு புலிகளுடன் இணைவது சுலபமானது.

அதன்பின்னர் அவரை விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் என விளித்தார்கள். அரசியல்த்துறையுடன் இணைந்து இருந்தார். கூட்டங்களில் பேசுவது, நிகழ்ச்சிகளில் பங்குகொள்வதென அவரது நாட்கள் கழிந்தன.

அவர் போர்க்களத்திற்கு சென்றவரல்ல. இறுதி யுத்தம் தீவிரம் பெற்று, முதலாவது பாதுகாப்பு வலயம் அறிவிக்கப்பட்டது. உடையார்கட்டு சந்தி தொடக்கம் கைவேலி வரையான பகுதி பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது. இந்தபகுதியில் உள்ள வள்ளிபுனம் பாடசாலை மருத்துவமனையாக்கப்பட்டது. 2009 ஜனவரி இறுதியில் பாதுகாப்பு வலயம் மீது இராணுவம் அகோர செல் தாக்குதல் நடத்தியது. இதில் 50 வரையான மக்கள் கொல்லப்பட்டதாக அப்போது ஊடகங்களில் செய்தி வெளியானது. மருத்துவமனையாக இருந்த வள்ளிபுனம் பாடசாலைக்குள் யாரையோ பார்த்துவிட்டு வந்த பாலகுமாரன் வாசலில் விழுந்த செல்லால் கையில் காயமடைந்தார். இறுதிவரை அந்த காயத்துடனேயே வாழ்ந்தார்.

குடும்பத்துடன் விடுதலைப்புலிகளிடமிருந்து தப்பி இராணுவத்திடம் செல்வதற்கு அவர் முயன்றபோதுதான் அவரது குடும்பத்தில் இரண்டாவது நபர் காயமடைந்தார்.

(தொடரும்)
நன்றி : தமிழ் பக்கம் (மூலம்)