சஹரான் – ஹிஸ்புல்லாவின் முக்கிய காணொளி ஞானசார தேரரிடம் சிக்கியது

கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரு ஹோட்டலில் இருந்து சஹரானுடன் தொடர்பிலிருந்த மூவரை காப்பாற்றி, வான் ஒன்றில் கூட்டிச்செல்வது தொடர்பிலான காணொளியொன்று தன்னிடமுள்ளதாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

எனவே அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும் அஸாத் சாலி ஆகியோரை நாளை மதியம் 12 மணிக்குள் ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யாவிடின், பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடுமென என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

தலதா மாளிகைக்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதுரலிய ரத்தன தேரரை, இன்று நேரில் சென்று பார்வையிட்டதைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தற்போது இந்த விவகாரம் நாடளாவிய ரீதியாக விரிவடைந்து செல்கிறது. அனைத்துத் தரப்பினரும் இன்று ஒருமித்த கருத்துக்காகவும் நிலைப்பாட்டுக்காகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த மூன்று அரசியல்வாதிகளுக்காக தேரரின் உடல்நிலையில் பாதிப்பொன்று ஏற்பட நான் என்றும் அனுமதிக்க மாட்டேன்.

எவ்வாறான பிரச்சினைகள் இருந்தாலும் நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும். இந்தத் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராக நாம் ஒன்றிணையாவிட்டால், இது இன்னும் நூறு வருடங்களுக்கு நீடிக்கும்.

எமது எதிர்கால சந்ததியினருக்கு அவ்வாறான ஒரு தேசத்தை நாம் வழங்கக்கூடாது. இன்று பிரான்ஸ், பாரிஸ், பெல்ஜியம், சுவிட்ஸர்லாந்து, அவுஸ்ரேலியா, லண்டனில் இந்த பயங்கரவாதிகள் பாரிய அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர்

இவர்கள் இன்று எமது தாய் நாட்டிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்கள். சிறைச்சாலைக்குச் சென்ற எமக்கு, மரணமெல்லாம் ஒரு பொருட்டல்ல. எனவே, நாம் அரசாங்கத்துக்கு நாளை மதியம் 12 மணிவரை காலக்கெடு வழங்குகிறோம். இதற்கான உரியத் தீர்வினை வழங்காவிட்டால் பாரிய விளைவுளை சந்திக்க நேரிடும் என்பதையும் நான் கூறிக்கொள்கிறேன்.

கிழக்கு மாகாண ஆளுநரான ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரு ஹோட்டலில் இருந்து சஹரானுடன் தொடர்பிலிருந்த மூவரை காப்பாற்றி, வான் ஒன்றில் கூட்டிச்செல்வது தொடர்பிலான காணொலியொன்று என்னிடமுள்ளது.

இதனை வெளியிட்டு, தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படும் முன்னர் இவர்களை ஜனாதிபதி உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம்.

அல்லது அவர்களே இராஜினாமா செய்ய வேண்டும். இவை அனைத்தும் நாளை மதியம் 12 மணியுடன் இடம்பெறவேண்டும்” என மேலும் தெரிவித்தள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like