வெள்ளி, ஒக்டோபர் 30, 2026
Breaking
Srilanka

புங்குடுதீவு மாணவி வித்தியா – இன்று யாழ். மேல் நீதிமன்றம் விடுத்த உத்தரவு

பகிர: Facebook WhatsApp X Telegram
புங்குடுதீவு மாணவி வித்தியா – இன்று யாழ். மேல் நீதிமன்றம் விடுத்த உத்தரவு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த நபர் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து ஒக்டோபர் 10ம் திகதிக்கு முன்னர் மன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு யாழ். மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மாணவி வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக கூறப்படும் சுவிஸ்குமார் என்பவரை விடுவித்து உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் ஆகியோருக்கு எதிராக யாழ். மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டமுறையற்ற வகையில் பொலிஸ் காவலில் இருந்து சந்தேக நபரை விடுவிக்க உதவியதன் மூலம் தண்டனைச் சட்டக் கோவை 209ம் பிரிவின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய குற்றமொன்றைப் புரிந்தமை மற்றும் அதற்கு ஒத்துழைத்தன் மூலம் 109ம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படவேண்டிய 209ம் பிரிவின் கீழான குற்றமொன்றைப் புரிந்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் இருவருக்கும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த குற்றப்பத்திரிகையில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா உள்ளிட்ட 30 பேர் வரை சாட்சிகளாக இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

முதலாவது சந்தேகநபர் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க முன்னிலையான நிலையில் இரண்டாவது சந்தேகநபர் மன்றில் முன்னிலையாகவில்லை.

வழக்குத் தொடுனர் தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் முன்னிலையானார்.

இதேவேளை வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ளமை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு யாழ். மேல் நீதிமன்றம் கடந்த தவணையில் உத்தரவிட்டிருந்தது.

அது தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவு சார்பில் முன்னிலையான அதிகாரியிடம் மன்று கேள்வி எழுப்பிய போது எனினும் அவர் விசாரணைகள் நிறைவடையவில்லை என தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக விசாரணையை விரைவுபடுத்தி உரிய அறிக்கையை வரும் 10ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், வழக்கு விசாரணைகளை ஒத்திவைத்தார்.

இதேவேளை, இரண்டாவது எதிரி சட்டவிரோதமாக நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாட்டில் உள்ளார் என்று பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டபோதும் அதன் உண்மைத் தன்மை தொடர்பில் வெளிப்படுத்தப்படவில்லை.

அவர் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ளதாக அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் கடந்த தவணையின் போது மன்றுக்கு அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், 2015ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி கூட்டு வன்புனர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை, மாணவி படுகொலை வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற தீர்ப்பாயம் (Trial at bar) முன்னிலையில் இடம்பெற்றது.

மேல் நீதிமன்ற நீதிபதிகள் பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு இடம்பெற்று சுவிஸ் குமார் உள்ளிட்ட 7 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதனையடுத்தே சுவிஸ் குமாரை தப்பிக்கவைத்த குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் ஆகியோருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் தூக்குத் தண்டனை விதிக்கக் கூடிய குற்றஞ்சாட்டப்பட்டவரை தடுப்பில் இருந்து விடுவிக்க உதவிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்