புதன், ஒக்டோபர் 28, 2026
Breaking
Srilanka

லண்டனில் இருந்துவந்த குறுஞ்செய்தி- 31 இலட்சம் ரூபாவை இழந்த யாழ் குடும்பம்

பகிர: Facebook WhatsApp X Telegram
லண்டனில் இருந்துவந்த குறுஞ்செய்தி- 31 இலட்சம் ரூபாவை இழந்த யாழ் குடும்பம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பம் ஒன்று லண்டனில் இருந்துவந்த குறுஞ்செய்தியை நம்பி பி.எம்.டபிள்யூ காருக்கும், ஸ்ரேலிங் பவுண்ஸ்க்கும் ஆசைப்பட்டு 31 இலட்ச ரூபாவை இழந்து கலங்கி நிற்கின்றது

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் ,

குறித்த குடும்பத்தின் குடும்பத் தலைவர் மன்னாரில் பணி நிமிர்த்தம் அங்கு தங்கி பணியாற்றி வரும் நிலையில் தாயும் , மகளும் மட்டும் யாழில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னர் மகளின் கைத்தொலைபேசிக்கு , லண்டனில் நடந்த சீட்டிழுப்பு ஒன்றில் உங்களுடைய கைத்தொலைபேசி இலக்கத்திற்கு புதிய ரக பி.எம்.டபிள்யூ கார் ஒன்றும் ஸ்ரேலிங் பவுண்ஸ் பணமும் விழுந்துள்ளதாகவும் அது தொடர்பிலான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள கீழுள்ள மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு குறுஞ்செய்தி வந்துள்ளது.

அதனை நம்பிய குறித்த பெண் அந்த மின்னஞ்சலுடன் தொடர்பினை ஏற்படுத்திய போது , சீட்டிழுப்பில் வெற்றி பெற்றுள்ளீர்கள் என கூறி சில போலி ஆவணங்கள் , கார் , காரின் திறப்பு படம் மற்றும் கட்டுக்கட்டாக ஸ்ரேலிங் பவுண்ஸ் உள்ள புகைப்படங்களை மின்னஞ்சல் ஊடாக மர்ம கும்பல் ஒன்று அனுப்பியுள்ளது.

அதன் பின்னர் அந்த் மர்ம கும்பலின் மின்னஞ்சலில் இருந்து முதல் கட்டமாக லண்டனில் வரி கட்ட வேண்டும் என கோரி 92 ஆயிரம் ரூபாயை வங்கியில் வைப்பிலிடுமாறு கூறியுள்ளனர். அதனை நம்பிய தாயும் மகளும் வங்கியில் பணத்தினை வைப்பிலிட்டுள்ளனர்.

அதன் பின்னர் ஒரு கிழமை இடைவெளியின் பின்னர் , திணைக்களங்களுக்கு வரி கட்ட வேண்டும் உள்ளிட்ட சில காரணங்களை கூறி மின்னஞ்சல்களை அனுப்பி கட்டம் கட்டமாக 31 இலட்ச ரூபாவை அந்த மர்ம கும்பல் பெற்றுள்ளது.

இறுதியாக கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் உங்களுக்கான பணப் பரிசிலும் , காரும் இலங்கைக்கு வந்து விட்டதாகவும், அதனை பெற்றுக்கொள்ள கொழும்பு வெள்ளவத்தை பகுதிக்கு வருமாறும் கூறப்பட்டுள்ளது.

அதனை நம்பி குறித்த குடும்பத்தினர் கொழும்பு சென்றபோது, அங்கு அவர்களை சந்தித்த மர்ம நபர் ஒருவர் கறுத்த பெட்டி (சூட்கேஸ்) ஒன்றினை கொடுத்து, பரிசுத்தொகையான ஸ்ரேலிங் பவுண்ஸ் பணமும் , காரின் திறப்பும் உள்ளது எனவும் கூறி அந்த பெட்டியை கையளித்துள்ளார்.

பெட்டியை உடனே திறந்து பார்க்காதீர்கள். இந்த பரிசுத்தொகை தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு தெரிய வந்தால் இலங்கையில் விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் எனவும் எச்சரித்துள்ளார்.

அத்துடன் , வரியாக பெருந்தொகை கட்ட வேண்டி வரும் என்றும் குறிப்பிட்ட மர்ம ஆசாமி நீங்கள் வீடு செல்லுங்கள் இந்த பெட்டியின் திறப்பை தபால் மூலம் அனுப்பி வைக்கிறேன் என கூறி அங்கிருந்து சென்றுள்ளார்.

அதன் பின்னர் வீடு திரும்பிய குடும்பத்தினர் சில தினங்கள் கடந்தபோதும் , திறப்பு வராத நிலையில் மின்னஞ்சல் ஊடாக அந்த மர்ம நபர்களை தொடர்புகொள்ள ம்யன்றபோது பதில்கள் வரவில்லை. இதனையடுத்து தம்மை கொழும்புக்கு அழைத்த தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ள முயற்சித்த போது , குறித்த தொலைபேசி இலக்கம் செயலிழந்து காணப்பட்டது.

அதன்பின்னரே சந்தேகம் அடைந்த அவர்கள் மர்மநபர் கொடுத்த பெட்டியை உடைத்து பார்த்த போது , உடைந்த கண்ணாடி போத்தல்கள் , பஞ்சு , நாணய தாள்கள் அளவில் வெட்டப்பட்ட கடதாசி துண்டுகள் என்பன காணப்பட்டுள்ளன.

இதேவேளை மர்ம நபர்களில் வலையில் சிக்கிய குறித்த குடும்பத்தினர் சீட்டிழுப்பு பரிசினை நம்பி தம்மிடம் இருந்த சேமிப்பு பணம் , நகைகள் என்பவற்றை இழந்துள்ளதுடன் , ஊரில் வட்டிக்கு பெரும் தொகை பணத்தினையும் வாங்கியுள்ளனர்.

இதனையடுத்து நேற்றைய தினம் திங்கட்கிழமை காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முறைப்பாடு செய்துள்ள நிலையில்,

குறித்த மோசடி கும்பல் பல்வேறு வங்கி கணக்குகள் ஊடாகவே குறித்த குடும்பத்தினை ஏமாற்றி பணத்தினை பெற்றுள்ளதாகவும் , அது தொடர்பிலான விசாரணைகளை தாம் முன்னெடுத்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்ததுள்ளனர்.

இதேவேளை இவ்வாறான குறுஞ்செய்திகளையோ அல்லது அழைப்புகளையோ நம்பி ஏமாறவேண்டாம் என கடந்த தினங்களில் அரசாங்கம் மக்களுக்கு அறிவித்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்